விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித் துறையில் தனி அதிகாரிகள் குழு அமைப்பு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசியையும் விசாரிக்க முடிவு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சிக்கிய பென்-டிரைவ், ஹார்டு டிஸ்குகளில் உள்ள ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா உட்பட அவரது குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்த வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை மண்டல அதிகாரி தலைமையில் தனி குழு ஒன்றையும் அமைத்துள்ளனர்.

சசிகலா, திவாகரன், தினகரன், இளவரசி மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியில் மொத்தம் 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டிவி மேலாளர் நடராஜன், அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, டாக்டர் சிவக்குமார், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் உட்பட அவர்கள் தொடர்புடைய பலரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 17-ம் தேதி இரவு போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில் 8 பென்-டிரைவ், கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்த எலக்ட்ரானிக் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பென்-டிரைவ், ஹார்டுடிஸ்குகளில் பதிவான தகவல்களை நிபுணர்கள் குழு மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட தகவல்களையும் ‘ரெக்கவரி சாப்ட்வேர்’ மூலம் திரும்பப் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பணப் பரிமாற்றம், பினாமி சொத்துகள் தொடர்பான பல தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. வரி ஏய்ப்புக்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

விசாரணை தீவிரம்

இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, ஷகிலா, மகன் விவேக் ஆகியோரை குறிவைத்து வருமான வரித்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கிருஷ்ணபிரியாவின் கணவர் கார்த்திகேயன், ஷகிலாவின் கணவர் ராஜராஜன் ஆகியோரும் சசிகலா தொடர்புடைய பல நிறுவனங்களில் நிர்வாகிகளாக உள்ளனர். இதனால், கடந்த 17-ம் இருவரையும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மறுநாள் ஷகிலாவிடம் விசாரணை நடந்தது.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது. இவர்களிடம் விசாரணை நடத்தி முடித்ததும்தான் போயஸ் கார்டனில் சோதனை நடத்த அதிகாரிகள் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்களுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இளவரசி குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சசிகலா, இளவரசி குடும்பத்தினரின் வங்கி லாக்கர்கள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். உறவினர்கள், வேலையாட்கள் பெயரில் ஏராளமான லாக்கர்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அனைத்து லாக்கர்களிலும் விரைவில் சோதனை நடத்த உள்ளனர். இளவரசி குடும்பத்தினரிடம் மட்டும் விசாரிக்க சென்னை மண்டல அதிகாரி தலைமையில் தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பல நிறுவனங்களின் நிர்வாகிகளாக உள்ளனர். வரி ஏய்ப்பு குறித்து இவர்களிடமும் விசாரணை நடத்த டெல்லி அதிகாரிகளின் அனுமதிக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

திவாகரன் கோபம்.. தினகரன் விளக்கம்

தனக்கு 33 ஆண்டுகளாக உதவிகள் செய்து வந்த சசிகலாவை பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டார் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கோபத்துடன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

சசிகலாவை ஜெயலலிதா பாதுகாக்கத் தவறிவிட்டார் என்று திவாகரன் பேசியிருப்பதை பெரிதுபடுத்த வேண்டாம். கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவருக்கு பல உதவிகளை செய்துள்ளார். தற்போது சசிகலா துயரத்தில் தவிப்பதைக் கண்டு ஆதங்கத்தில் திவாகரன் அப்படி பேசிவிட்டார். இதை அரசியலாக்கக் கூடாது.

போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் பென்-டிரைவ் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். அங்கு கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர், லேப்டாப் பயன்பாடு இல்லாமல் இருந்தவை. பென்-டிரைவ் இருந்தாலே அதில் ரகசியம் உள்ளதாக கூற முடியுமா? பென்-டிரைவ் கதையைக் கூறி எங்களையும் அதிமுகவையும் அழிக்க உச்சக்கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 min ago

தமிழகம்

5 mins ago

சினிமா

22 mins ago

தொழில்நுட்பம்

27 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்