ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை: குறுந்தொழில்முனைவோர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால், குறுந்தொழில்முனைவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களில், சுமார் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் கோவையில் பணிபுரிகின்றனர். குறுந்தொழில் நிறுவனங்களில் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உதிரி வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், மோட்டார் பம்ப்செட், வெட் கிரைண்டர்களுக்கான உதிரிப்பாகங்கள், ஜவுளி இயந்திரங்களின் பாகங்கள், ரயில்வேக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்கள், கம்ப்ரசர்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கும் வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று தொழில்முனைவோர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இதற்கிடையே, அசாம் மாநிலம் குவஹாட்டியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 213 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க கவுன்சில் முடிவு செய்தது. எனினும், இதில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

குறுந்தொழில் நிறுவனங்கள் 90 சதவீதத்துக்கும் மேல் ‘ஜாப் ஒர்க்’ முறையில்தான் செயல்படுகின்றன. பெரிய நிறுவனங்களிடமிருந்து மூலப் பொருட்களை வாங்கி, அவற்றை உதிரிப்பாகங்களாக தயாரித்து, அந்த நிறுவனங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறோம். எங்களுக்கு வெறும் கூலி மட்டும்தான். மூலப் பொருட்களை கொள்முதல் செய்து, உதிரிப்பாகமாகத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரி விதிப்பால், குறுந்தொழில் நிறுவனங்கள் நிலைகுலைந்துள்ளன. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மத்திய, மாநில அமைச்சர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களிடம் பலமுறை மனு அளித்தும், ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. இதனால், குறுந்தொழில் நிறுவனங்கள் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளன.

மேலும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஆர்டர்களும் குறைந்து, கடந்த 3 மாதங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, ரூ.20 லட்சம் வரையிலான வர்த்தகத்துக்கு முழு விலக்கு அவசியமாகும். அதேபோல, 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இதற்காக அடுத்த கூட்டம் வரை காத்துக் கொண்டிருக்காமல், உடனடியாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்போதுதான் குறுந்தொழில் நிறுவனங்கள் சரிவிலிருந்து மீளும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தொழில்முனைவோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்