மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்:  திமுக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில், திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் ஜவுளித் தொழிலும், நூற்பாலைத் தொழிலும் நலிவடைந்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. குறிப்பாக, தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்க பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் ஓ.இ. எனப்படும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் நேற்று முதல் (5.7.2023) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக மறு சுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஸ்பின்னிங் மில்கள், ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், இன்ஜினியரிங் தொழில்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் என பல்வேறு தொழில்களின் கேந்திரமாகவும், சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதி தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகவும், முன்னணி நிறுவனங்கள் அடங்கிய முதன்மை மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது.

குறிப்பாக, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உட்பட தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் ஸ்பின்னிங் மில்கள், ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மில்கள் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, பல லட்சக்கணக்கான வடமாநில மக்களுக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகின்றன.

ஆனால், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு வரிகளை உயர்த்தியும், கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தத் திறனற்ற, கையாலாகாத விடியா திமுக அரசின் நடவடிக்கைகளால் தொழில் துறை மிகவும் நலிவடைந்துள்ளது. எனது தலைமையிலான அரசு, அவ்வப்போது தொழில் முனைவோர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு, நிறைவேற்றி வந்ததை தொழில் முனைவோர்கள் நன்கு அறிவர்.

எங்களது அரசின் ஊக்குவிப்பால் புதிய தொழில் முதலீட்டாளர்கள் தங்களது நிறுவனங்களை தமிழகத்தில் துவக்கி, பெருமளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள். தொழில் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காத்து, மகிழ்ச்சியான சூழலையும் அதிமுக அரசு ஏற்படுத்தித் தந்தது. மேலும், வெளிநாடுகளுக்கு பல்லாயிரம் கோடி அளவில் ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியையும் நம் நாட்டிற்கு தொழில் முனைவோர் ஈட்டித் தந்தனர்.

திமுக அரசின் பொம்மை முதல்வருக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை! ஒரு கூட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று தன்னுடைய கொத்தடிமை மந்திரிகளைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வையும் காணாமல், ஆளும் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை பாதுகாப்பதிலேயே கவனமாக செயல்படுவது வெட்கக் கேடானதாகும்.

தற்போது போராட்டத்தை அறிவித்துள்ள கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வலியுறுத்தி உள்ளனர். 356 கிலோ எடை கொண்ட ஒரு பருத்தி பேலின் விலை ரூ. 1,20,000/-த்தில் இருந்து ரூ. 55,000/-ஆகக் குறைந்தும், கோம்பர் வேஸ்ட் மற்றும் இதர கழிவு பஞ்சு அதிக விலைக்கு விற்கப்படுவதை குறைக்கக் கோருதல்; குறு, சிறு, நடுத்தர மில்களுக்கு, ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கு டிமாண்ட் சார்ஜ் ரூ. 35ஆக, மாதம் ஒன்றுக்கு ரூ. 3,920 என்று செலுத்தி வந்தது, தற்போது கிலோ வாட் ஒன்றுக்கு ரூ. 153 என்று நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதோடு, பஞ்சாலையை இயக்கினாலும், இயக்காவிட்டாலும் ரூ. 17,200 கட்டாயம் டிமாண்ட் சார்ஜ் ஆக செலுத்தியே தீர வேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண உயர்வை குறைக்கக் கோருதல்; பசுமைப் புரட்சி செய்துவரும் மறுசுழற்சித் துறையான ஓ.இ. மில்களுக்கு காலை 6 to 10, மாலை 6 to 10 என இந்த நேரத்தில் நூலை உற்பத்தி செய்தால் பீக் ஹவர்ஸ் சார்ஜ் என கூடுதலாக 15 சதவீத மின் கட்டண உயர்வை நீக்கக் கோருதல்

உட்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, சுமார் 600 மில்களில் நேற்று முதல் (5.7.2023) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை மறுசுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த மில்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்பதோடு, விற்பனை, போக்குவரத்து போன்ற மறைமுகமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக மறுசுழற்சி ஜவுளித் துறை கூட்டமைப்பினரை அழைத்துப் பேசி, இத்தொழில் நசிந்துவிடாமல், அவர்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தொழில்நுட்பம்

12 mins ago

உலகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்