உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு நெருங்கியும் ஆம்னி பஸ் கட்டண நிர்ணயம் இல்லை: கூடுதல் கட்டணம் வசூலால் பயணிகள் அவதி

By கி.மகாராஜன்

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு நெருங்கியும் ஆம்னி பஸ் கட்டண நிர்ணய குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும், பயணிகள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. பண்டிகை காலங்களில் பயணிகள் நெரிசலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஆம்னி பஸ்கள் வழக்கமாக வைத்துள்ளன. இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் அரசும் சரி, அதிகாரிகளும் சரி நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த ஆண்டில் தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இது தொடர்பான பொதுநலன் வழக்கை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் உத்தரவு

பல நாள் விசாரணைக்குப் பின் ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் உள்துறை இணை செயலர் (போக்குவரத்து), போக்குவரத்து ஆணையர், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் இயக்குநர், நிதித்துறை இணைச் செயலர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவை தமிழக அரசு 2 வாரங்களில் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு நவ. 15-ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில், கட்டண நிர்ணய குழு 7 நாளில் முதல் கூட்டத்தை கூட்டி குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்து 4 மாதங்களில் அரசிடம் பரிந்துரைகளை வழங்க வேண்டும். அந்த பரிந்துரைகளை தமிழக அரசு 12 வாரங்களில் அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.

அதுவரை பண்டிகை காலங்களில் மதுரை முதல் சென்னைக்கு ரூ.800, மற்ற நாட்களில் ரூ.550-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு ஆண்டாகியும் இதுவரை கட்டண நிர்ணய குழு அமைக்கப்படவில்லை. இதனால் இந்தாண்டு தீபாவளி விடுமுறையின் போதும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ரூ.ஆயிரம் முதல் ரூ.1800 வரை இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வெளியே தெரியாமல் இருப்பதற்காக தங்களின் ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளத்தை தற்காலிகமாக முடக்கியும் வைத்திருந்தனர்.

ஆம்னி பஸ் நிலையங்களிலும் கட்டண விவரம் எழுதி வைப்பதில்லை. இதனால் மக்கள் கட்டண விபரம் தெரியாமல் ஏமாற்றப்படுகின்றனர்.

advocate E.Somasuntharam வழக்கறிஞர் இ.சோமசுந்தரம் உடனடி நடவடிக்கை தேவை

இதுகுறித்து உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் இ.சோமசுந்தரம் கூறியது: ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் மக்கள் அவதிப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இது தொடர்பாக பொதுநலன் வழக்கை நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தனர்.

பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதித்து, பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கடிவாளம் போடும் வகையில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைத்தனர்.

ஆனால் ஓராண்டு ஆகியும் குழு அமைக்கப்படவில்லை. இதனால் வழக்கம்போல் இந்தாண்டும் ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது..

இதனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணய குழு அமைத்து, அந்தக் குழு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்