போலி பாஸ்போர்ட் மூலம் சென்று கம்போடியாவில் தங்கியிருந்த ஸ்ரீதர் தனபால் உடலை கொண்டு வருவதில் சிக்கல்?

By செய்திப்பிரிவு

கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஸ்ரீதர் தனபால் போலி பாஸ்போர்ட் மூலம் அந்த நாட்டுக்குச் சென்று தங்கியிருந்துள்ளார். எனவே அவரது சடலத்தை இங்கு கொண்டு வருவதில் சில நடைமுறைச் சிக்கல் ஏற்படலாம் என்றும், அவர் இறப்பு குறித்த தகவல்களை சேகரிப்பதிலேயே சிரமம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபால் போலீஸாரின் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். முதலில் சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் அவர் துபாய் சென்றார். துபாயில் விசா முடிவடையும் நேரத்தில் அங்கிருந்து இலங்கை சென்றுள்ளார். இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட்களை ஸ்ரீதர் தனபால் வைத்திருந்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அவர் இலங்கையில் தங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் லண்டனில் இருந்த அவரது மகன் சந்தோஷ்குமார் இலங்கை வழியாக சென்னை வந்தார். எனவே ஸ்ரீதர் தனபால் இலங்கையில் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது மகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஸ்ரீதர் தனபால் இருப்பிடம் குறித்தும், அவருக்கு எப்படி பணம் செல்கிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அவருக்கு பணம் செல்லும் வழிகள் மற்றும் அவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ள இடங்களை தடுக்கும் நடவடிக்கைகளை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

மகன் சந்தோஷ்குமார் மட்டுமின்றி மனைவி குமாரி, மகள் தனலட்சுமி ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர், சிவகாஞ்சி போலீஸார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் தொடர்பாக பல்வேறு பாஸ்போர்ட் அலுவலகங்கள், அவர் செல்லலாம் என்று சந்தேகிக்கும் விமான நிலையங்களை உஷார்படுத்தினர்.

பணம் செல்லும் வழி முடக்கம்

குடும்பத்தினரிடம் நடத்தும் தொடர் விசாரணை ஆகியவை ஸ்ரீதரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவரது கூட்டாளிகளும் ஒவ்வொருவராக கைது செய்யப்படுவதும் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன. மேலும் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டில் காணாமல் போன ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் வெங்கடாச்சலம், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் கொலை செய்யப்பட்டது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்டு ஸ்ரீதர் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீதர் தனபாலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து காவல் துறை வட்டாரங்களை கேட்டபோது அவர் கம்போடியாவில் போலி பாஸ்போர்ட் மூலம் தங்கி இருந்துள்ளார். இதனால் அவரது சடலத்தை இந்தியா கொண்டு வருவதில் சட்டச் சிக்கல் ஏதேனும் ஏற்படலாம். அந்நாட்டு நடைமுறை குறித்து தெரியவில்லை என்றனர்.

எஸ்.பி. விளக்கம்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “ஸ்ரீதர் தனபால் இறந்தாரா என்பதை அவரது சடலம் கிடைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், உரிய அறிவியல் பரிசோதனைகள், கைரேகை பரிசோதனைகளை செய்துதான் நாங்கள் முடிவுக்கு வருவோம். அவர் இறந்திருந்தாலும் அவர் மீதுள்ள வழக்குகளில் பலர் தொடர்புடையவர்களாக உள்ளனர். அந்த வழக்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.

அவரது வழக்கறிஞர்கள், உறவினர்கள் கூறுவதை எங்களால் முழுமையாக நம்ப முடியாது. ஸ்ரீதர் தனபால் மீதான வழக்கு விசாரணையில் எங்களின் தீவிர முயற்சியால் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஸ்ரீதர் தனபால் விவகாரத்தில் யாராவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்