நாட்டிலேயே தூய்மையான தலம்: மதுரை மீனாட்சி கோயில் துப்புரவு ஊழியர்களின் தன்னலமற்ற சேவையே காரணம் - தக்கார் கருமுத்து தி.கண்ணன் புகழாரம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

நாட்டின் சிறந்த தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேர்வானதற்கு அங்கு பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் 12 ஆண்டு கால ஈடில்லாத உழைப்பே காரணம். இதற்காக அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க தலம். உலக அளவில் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இக்கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயிலாக தேர்வு செய்யப்பட்டு, புதுடெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது கிடைத்தது குறித்து மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளிநாட்டினர், சுற்றுலாப் பயணிகள் உட்பட தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இதனால் அதிகளவில் குப்பைகள், கழிவுகள் சேர்ந்தன. சுவர்கள், தரைப் பகுதியும் அசுத்தமாயின.

12 ஆண்டுகால முயற்சி

இதனால், கோயிலை சுத்தமாக பராமரிப்பது இயலாது என்ற நிலையே இருந்தது. இதை பெரும் சவாலாக ஏற்று சாதித்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சி 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் சாத்தியமில்லை என்ற பதிலும், போதிய ஒத்துழைப்பும் இல்லாத சூழல்தான் இருந்தது.

kannanjpgright

2005-ம் ஆண்டில் 12 துப்புரவுத் தொழிலாளர்களே இருந்தனர். இவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக 60 ஆக உயர்த்தினோம். துப்புரவு பணிக்கென தனிக்கவனம் செலுத்தினோம். தினசரி கோயில் முழுக்க வலம் வந்து கண்காணிக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்கள் ஊதியத்துக்காக என்றில்லாமல் கோயிலுக்கு செய்யும் சேவையாகக் கருதி மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினர். இதை அலுவலர்களும் ஊக்கப்படுத்தினர்.

ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவு

கோயிலுக்குள் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், விழிப்புணர்வு வாசகங்கள், வழிகாட்டி பலகைகள் தேவையான அளவுக்கு வைக்கப்பட்டன. மணலை பீய்ச்சும் புதிய முறையில் பல பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டன. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டது. கோயிலில் குவிந்திருந்த தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் நாள்தோறும் சுழற்சி முறையில் சன்னதியை அடைக்கும்வரை கோயிலை தொடர்ந்து வலம் வந்து உடனுக்குடன் குப்பைகளை அகற்றினர். பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் அமரும் இடங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.

ஆடி, சித்திரை வீதிகளில் பக்தர்களை தவிர மற்றவர்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டது. துப்புரவு பணிக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை செலவிடுகிறோம்.

திருப்பதி கோயிலில் ஆய்வு

டிவிஎஸ், தியாகராஜர் மில்ஸ் என சில தன்னார்வ அமைப்பினர் 15 துப்புரவு தொழிலாளர்களை அளித்துள்ளனர். இது துப்புரவு பணிக்கு மேலும் உதவியாக இருந்தது. பராமரிப்புப் பணிகள் சிறப்பாக நடைபெறும் திருப்பதி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அங்குள்ள சிறந்த செயல்பாட்டு முறைகள் மீனாட்சி கோயிலில் அமல்படுத்தப்பட்டன. பெட்ரோலிய நிறுவனம் ஒன்று ரூ. 11.65 கோடி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயில் சார்பில் யாரிடமும் நிதியுதவி கோரவில்லை. யாரும் வழங்கவும் இல்லை.

துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு

விருது கிடைக்க மூலக்காரணம் தன்னலமற்று சேவையாற்றும் துப்புரவு பணியாளர்களே. இந்த விருது அவர்களுக்குத்தான் போய் சேர வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு கோயில் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும். இதன்மூலம் கோயிலின் தூய்மை என்றென்றும் பராமரிக்கப்படுவது உறுதி என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

10 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

16 mins ago

ஆன்மிகம்

26 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்