மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன: கருணாநிதி பாராட்டு

By செய்திப்பிரிவு

"மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன" என்று திமுக தலைவர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர், திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் நிதி நிலை அறிக்கை நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி அவர்களால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நாடெங்கும் உள்ள மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிதி நிலை அறிக்கை பொதுவாக வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

தனி நபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாயாக உயரும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது 2 லட்சம் ரூபாய் உச்ச வரம்பாக இருப்பதை, வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே உயர்த்தி, தனி நபர் வருமான வரி விலக்கு பெற உச்ச வரம்பு இரண்டரை இலட்ச ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமங்களில் விவசாய விளைபொருள்களைச் சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கிகள் அமைக்க இந்த நிதி நிலை அறிக்கை யில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க ஒன்றாகும். எதிர்பார்த்ததைப் போலவே சிகரெட் மீதான சுங்கவரி 11 சதவிகிதத்தில் இருந்து 72 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்பானங்களின் உற்பத்தி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரியும் 60 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விலை உயரும். வீட்டுக்கடனுக்கான வரிச் சலுகை ஒன்றரை இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய ஒரு சலுகையாகும்.

தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தும் “பிக்சர்டியூப்” மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி பெட்டிகளின் விலை குறையும். அதைப் போலவே மின்னணு சாதனங்கள் மீதான வரிகள் குறைக்கப் படுவதால், கம்ப்யூட்டர்கள் விலையும் குறையலாம். தி.மு. கழகத்தின் சார்பில் மாநிலங்களவையில் பேசிய கனிமொழி நாடெங்கும் உழவர் சந்தை ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று நாடெங்கும் உழவர் சந்தை போல விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பதற்கான சந்தைகள் அமைக்கப்படும் என்றும், மாநில அரசுகள் அவ்வாறு உழவர் சந்தைகளை மேம்படுத்த ஊக்கம் தரப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும்.

7,060 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி புதிதாக 100 நகரங்களை உருவாக்கப் போவதாக நிதி நிலை அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருப்பது, கிராமங்களிலிருந்து நகர்ப் புறங்களுக்கு குடியேறும் மக்களுக்கு பேருதவியாக அமையும். தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதும், புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவிட பத்தாயிரம் கோடி ரூபாயில் நிதியம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதும், தொழில் பேட்டைகளை மேம்படுத்த 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

மேலும் இந்த நிதி நிலை அறிக்கையில் பாசன வசதிகளை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - நாடு முழுவதும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த இரண்டரை லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - நிலம் இல்லாத ஐந்து லட்சம் விவசாயி களுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி - கிராமங்களில் மின் வசதியை மேம்படுத்த 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வசதி நீடிப்பு - ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் மற்றும் காச நோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும் என்பது போன்ற பல நல்ல அம்சங்கள் இந்த நிதி நிலை அறிக்கையிலே இடம் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அறிவிப்புகளே அதிகமாக உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்