குறைந்த வரியில் ஆதாயம் தேட முயற்சி: உயர் ரக கார்களை புதுச்சேரியில் பதிவு செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் - அமலா பால், பகத் பாசில் உள்ளிட்டோர் சிக்குகின்றனர்; விசாரணை நடத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது.

நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் நடிகை அமலா பால் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் ரக ‘பென்ஸ் எஸ் கிளாஸ்’ ரக காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.1.15 கோடி. இந்த காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ. 23 லட்சம் வரை வரி கட்டியிருக்க வேண்டும். புதுச்சேரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூ. 1.15 லட்சம் வரை வரி கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கேரள போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நீண்ட நாட்களாக காரை பார்த்து, இதுதொடர்பாக விசாரித்தபோது கார் உரிமையாளர் முகவரி, ‘புதுச்சேரி திலாஸ்பேட்டை செயின்ட் தெரசா நகர்’ பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதுபற்றி அந்த முகவரியில் விசாரித்தபோது நடிகை அமலாபால் உறவினர் ஒருவர் இந்த முகவரியில் 2-வது மாடியில் தங்கி இருப்பதாகவும் அடிக்கடி புதுச்சேரிக்கு வரும்போது இங்கு தங்குவார் எனவும் தெரிவிக்கின்றனர்.

எப்படி நடக்கிறது வாகனப் பதிவு

இதுகுறித்து போக்குவரத்து வட்டாரங்களில் விசாரித்தபோது, முக்கிய விஐபிக்கள் புதுச்சேரி வந்து காரைப் பதிவு செய்வது வழக்கம்தான் என்கிறனர்.இயக்குநர் பாசிலின் மகன் நடிகர் பகத் பாசிலும் இங்குதான் காரை பதிவு செய்துள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர். அவரது கார் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரி லாஸ்பேட்டையிலுள்ள புதுப்பேட் 2-வது குறுக்கு வீதி என்று உள்ளது.

அதிகளவு விலை உயர்ந்த கார்களை புதுச்சேரியில் பதிவு செய்வது தொடர்பாக போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அனைத்து வண்டிகளுக்கும் போக்குவரத்து துறை வரி 1 சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மட்டுமில்லாமல் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா, கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள் விலை உயர்ந்த காரை வாங்கி புதுச்சேரியில் பதிவு செய்கின்றனர். கார் வாங்குவோர் புதுச்சேரியில் இருப்பது போன்ற ஆவணங்களும் உருவாக்கப்படுகின்றன.

கார் பதிவாகும் விஐபி உரிமையாளர் புதுச்சேரியில் தங்கியிருக்க அவரது பெயரில் வாடகை வீடு பதிவாகும். அதையடுத்து பிரமாண பத்திரம் தயாரிக்கப்படும். பின்னர் வாகனம் பதிவாக "பார்ம் 4 " விவரங்கள் பூர்த்தி செய்யப்படும். மேலும் கூடுதல் ஆவணமாக சம்பந்தப்பட்டோர் பெயரில் புதுச்சேரி முகவரியுடன் கூடிய இன்சூரன்ஸ் ஒன்று புதிதாக எடுக்கப்படும். இம்முறை பல ஆண்டுகளாக நடக்கிறது. அத்துடன் புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. போக்குவரத்துத் துறையில் ஆவணங்கள் இருந்தால் கார் பதிவு செய்யப்படும்.

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்கள் பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடமுள்ளது.

கார்கள் மட்டுமில்லாமல் ஆம்னி பஸ்கள், படுக்கை வசதியுள்ள ஆம்னி பஸ்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வடமாநிலங்களிலும் புதுச்சேரி பதிவெண் உடன் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் புது ஆம்னி பஸ்களுக்கு பர்மிட் கிடையாது. ஏற்கெனவே உள்ள வண்டிக்குத்தான் பர்மிட் என்பதால் புதுச்சேரியை நாடுகின்றனர். புதுச்சேரியில் பதிவாகும் இவ்வகை ஆம்னி பஸ்களுக்கு புதுச்சேரி பதிவெண் தரப்படுகிறது. இவ்வகை வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 36 ஆயிரம் வரியாக செலுத்த வேண்டும் என்று கூறினர்.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "கேரள போக்குவரத்து அதிகாரிகள் யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. பார்ம் 4-ல் விதிமுறைப்படி விண்ணப்பம் தந்தால் அதை போக்குவரத்துத் துறை ஏற்கும்" என்கின்றனர்.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறும்போது, "இது நீண்டகாலமாக நடப்பது உறுதியாகியுள்ளது. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் போலி முகவரி மூலம் வாகனங்கள் வாங்குவதால் ஏற்படும் வருவாய் இழப்பு தமிழகத்துக்கோ, கேரளத்துக்கோ அல்ல. அது நாட்டுக்கே வருவாய் இழப்பு.

இதுபோன்ற தவறுகளைத் தடுக்க வேண்டும். தற்போதைய விவகாரங்கள் தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க போக்குவரத்துத் துறை செயலரும், ஆணையரும் உத்தரவிட்டுள்ளேன்.

குறிப்பாக நடிகை அமலாபாலுக்கு புதுச்சேரியில் இருப்பதற்கான ஆவணமும், அம்முகவரியுடன் கூடிய இன்சூரன்ஸ் நகலும் எப்படி வழங்கப்பட்டது? இதேபோல் வேறு திரை நட்சத்திரங்கள் புதுச்சேரியில் விலை உயர்ந்த கார்கள் வாங்கியுள்ளார்களா என்பதை விசாரித்து சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளேன். கேரள போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து வரியை வசூலிக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

28 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்