`மெர்சல்’ உருவாக்கும் பாதை

By நீரை மகேந்திரன்

மிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் தலைப்புக்கு வர்த்தக முத்திரை (டிரேட் மார்க்) பெறப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான தகவல்தான். இதன் மூலம் ஒரு திரைப்படத்தின் தலைப்புக்காக நடைபெறும் வர்த்தகத்திலிருந்தும் சம்பந்தப்பட்ட திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது மெர்சல் திரைப்படம்.

தயாரிப்பில் உள்ள ஒரு திரைப்படத்தை முன்வைத்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் பல வடிவங்களிலும் வர்த்தகம் செய்து வருவது நமக்குத் தெரியும். இசைக்கான உரிமம், திரையரங்குகளுக்கு விற்பனை, தொலைக்காட்சி, ஆன்லைன் விற்பனை, வெளிமாநில, வெளிநாட்டு விற்பனை, சாட்டிலைட் உரிமம், டப்பிங், ரீமேக் என பல வடிவங்களில் வியாபாரம் நடக்கிறது. ஆனால் அறிவுசார் சொத்துகள் என்கிற அடிப்படையில் நடைபெறும் இந்த வியாபாரத்தில் இதுவரையில் தெளிவான புள்ளிவிவரங்கள் கிடையாது என்பதே உண்மை. இந்த நிலையில்தான் பிரபலமாகும் தலைப்பை பயன்படுத்தி நடைபெறும் வர்த்தகத்திலிருந்தும் தங்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் சட்ட வடிவத்தை கையிலெடுத்துள்ளது இந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம்.

வர்த்தக முத்திரை பெறப்படுவதன் மூலம் அந்த பெயரை வணிக ரீதியாக வேறு யாரும் பயன்படுத்த முடியாது. புழக்கத்தில் உள்ள வார்த்தையை ஒரு நிறுவனம் கோடிகளில் செலவழித்து பிராண்டாக மாற்றுகிறது. அந்த பிராண்டு மூலம் உருவாகும் பலனை அவர்கள் மட்டுமே பெற வேண்டும். அல்லது பிறர் பயன்படுத்தும்போது அவர்களுக்கும் அதில் பங்கு வர வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் ஒரு திரை நட்சத்திரத்தை முன்வைத்து திரைப்பட சந்தை தவிர்த்து பிற தொழில்களில் நடைபெறும் சந்தையில் அவர்கள் பங்கு பெறுவதில்லை.

குறிப்பாக ஒரு திரைப்படம் அல்லது பாடல் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும்போது அது சார்ந்த அடையாளங்களையும் நுகர்வதற்கு விரும்புகின்றனர். ஆடைகள், அணிகலன்கள் மட்டுமல்லாமல் அந்த பெயரிலான சேவைகளையும் விரும்புகின்றனர். உதாரணமாக கபாலி திரைப்படம் வெளியான சமயத்தில் அது சார்ந்த உடைகள், ஸ்டைல்கள் என மிக பெரிய வர்த்தகம் உருவானது. இந்த வர்த்தகம் எதிலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமான பகிர்வு செல்லவில்லை. இது திரைப்பட அல்லது நட்சத்திர சந்தையில் தவிர்க்க முடியாத நிகழ்வு.

இது ஒரு வகையில் திரைப்பட வர்த்தகத்தை அதிகப்படுத்தும் உத்தியாகத்தான் கையாளப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் மூலம்தான் நாயக பிம்பம் அல்லது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதீதமாக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை திரைப்பட நிறுவனங்கள் கட்டுப்படுத்த தொடங்கினால் அவர்களுக்கு பாதகமான விளைவுகளையே உருவாக்கச் செய்யும். தவிர தன்னிச்சையாக நடைபெறும் வர்த்தகத்தை தடுக்க முடியாது என்பது நடைமுறை யதார்த்தம் என்கின்றனர் தொழில் முனைவோர்கள்.

உதாரணமாக மெர்சல் என்கிற தலைப்பு ஒரு பனியனில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை உள்ளூர் அளவில் சிலர் ஆர்வ மிகுதியால் பிரிண்டிங் செய்திருக்கலாம். இவர்களிடமிருந்து ராயல்டி பெறுவதோ அல்லது தடை செய்வதோ இயலாத ஒன்று.

ஒருவேளை அறிவுசார் சொத்துரிமை அடிப்படையில் அவர்களது படைப்புகளை திருடுவதிலிருந்து சட்ட ரீதியாக பாதுகாப்பு பெறுவதும், அதை பயன்படுத்துவதிலிருந்து ராயல்டி பெறுவதும் திரைப்பட துறையினரின் உரிமை. ஆனால் மக்களிடையே புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையை பயன்படுத்தி அதை தலைப்பாக வைக்கும்போது அதற்கு எந்த வகையில் சட்ட உரிமையை பெற முடியும் என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டோம்.

திரைப்படமும் பொழுதுபோக்கு சார்ந்த உற்பத்தி என்கிற அடிப்படையில் தலைப்பு அல்லது அந்த தலைப்பிற்கான வடிவமைப்பை பிறர் பயன்படுத்தாத வகையில் சட்ட அங்கீகாரம் பெறலாம். தலைப்பு பதிவு செய்யப்பட்டுவிடுவதால் இதன் மூலம் எதிர்காலத்திலும் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அதே நேரத்தில் இந்த வார்த்தையை அல்லது எழுத்தை வேறு வகைகளில் வடிவங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய முடியாது என்றனர்.

சில திரைப்பட நிறுவனங்களில் இது தொடர்பான கருத்துகளை பேசும்போது; சமீபத்தில் திரைக்கு வந்து ரூ. 2,000 கோடிக்கு மேல் வர்த்தகமான ஒரு திரைப்படமும் (பாகுபலி) இதுபோல பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமே அனைத்து துணை வர்த்தகத்திலும் கவனம் செலுத்தியது. ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த நடைமுறை உள்ளது. தவிர அறிவு சார் சொத்துரிமை என்கிற அடிப்படையில் தற்போதுவரை இசை தொகுப்புகள் மற்றும் திரைப்பாடல்களுக்கு ராயல்டி அளிப்பது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் துணை வர்த்தகத்தின் மூலம் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இதன் மூலம் ரசிகர்களை கட்டுப்படுத்துவதும் உள் நோக்கமாக இருக்காது என்கின்றனர்.

இப்படி திரைப்பட தலைப்பை பதிவு செய்வதன் மூலம் இந்த தலைப்பை கொண்டு எதிர்காலத்தில் திரைப்படம் எடுக்க முடியாது. 2007ம் ஆண்டில் நிசப்த் என்கிற இந்தி படத்துக்கும், பெங்காலி படத்துக்கு ஏற்பட்ட தலைப்புச் சிக்கலில் டிரேட் மார்க் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட இந்தி தலைப்புக்கே புதுடெல்லி உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஆச்சி மசாலா நிறுவனம் 1995-ம் ஆண்டில் டிரேட் மார்க் உரிமத்தை பெற்றுள்ளது. ஆனால் 2008-ம் ஆண்டில் ஆச்சி ஸ்பைசஸ் அண்ட் ஃபுட்ஸ் என்னும் பெயரில் அமெரிக்காவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஆச்சி ஆப்பக்கடை என்கிற பெயரில் உணவகத்தை அமெரிக்காவில் தமிழர் ஒருவர் தொடங்கி உள்ளார். இவற்றை எதிர்த்து ஆச்சி மசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆச்சி மசாலாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் ஆச்சி என்னும் பெயரில் மசாலா மற்றும் உணவுப்பொருட்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. ஆச்சி என்பது பொதுவான பெயர்தான் என்றாலும் இதை பிராண்டிங் செய்துள்ளது குறிப்பிட்ட நிறுவனம் என்பதால் பிறரது பெயர்களை நீதிமன்றம் ரத்து செய்தது.

பல கோடிகளை செலவழித்து உருவாக்கப்படும் பிராண்டை பிறர் தங்களது லாபத்துக்காக பயன்படுத்த முடியாத வகையில் டிரேட் மார்க் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. சில ஆயிரங்களில் பதிவு செய்து விடலாம். அதே நேரத்தில் இந்த பெயரை அல்லது தலைப்பை நாம் வைப்பதற்கு முன்னர் வேறு எவரும் பதிவு செய்திருக்க கூடாது என்பதுதான் முக்கிய நிபந்தனை. திரைப்பட நிறுவனங்கள் இதை தொடரும்பட்சத்தில் சச்சரவுகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது.

-

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

23 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்