பணம் மாற்றுவதில் சிக்கல் ஏன் வந்தது?

By இராம.சீனுவாசன்

நவம்பர் 8, 2016 அன்று மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் இனி சட்டபடியான ரூபாய் நோட்டுகள் அல்ல என்று அறிவித்தது. அன்று முதல் இந்த ஒரு செய்தி மட்டுமே தொடர்ந்து நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இந்த திடீர் நடவடிக்கை கறுப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிப்பதற்கு என்று கூறிவருகின்றனர். இதனால் மக்கள் அன்றாட பொருளாதார வாழ்க்கையில் அல்லாடுகிறார்கள் என்பதும், தொடர்ந்து பொருளாதாரம் சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றும் தெரியவருகிறது.

பணமறுதலித்தல்

இந்தியாவில் 2 ரூபாயும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி மட்டுமே அச்சடித்து வெளியிட உரிமை பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளை சட்டரீதியான பணம் (legal tender) என்றும் அதற்கு மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, பிரிவு 26, உட்பிரிவு 1 கூறுகிறது. அவ்வாறு சட்டரீதியான பணம் என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை நாம் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம், சொத்தாகவும் வைத்திருக்கலாம்.

எந்த மதிப்புடைய ரூபாய் நோட்டையும் பார்த்தோமானால், அந்த நோட்டில் குறிப்பிட்டுள்ள தொகையை தருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி அளித்து கையெழுத்திட்டிருப்பார், அதற்கு மத்திய அரசும் உறுதியளிக்கும். இது ஒரு கடன் பத்திரம் போன்றது. ஒரு பண நோட்டு மக்களிடம் இருக்கும் போது அது அவர்களின் சொத்து, அதே நேரத்தில் அந்நோட்டு ரிசர்வ் வங்கியின் கடன் பொறுப்பு. ஒருவர் தன்னுடைய சொத்துகளை நிலமாக, கட்டிடமாக, தங்கமாக, முதலீட்டு பத்திரங்களாக வைத்துக்கொள்ளலாம். அதே போல சொத்தை பணமாகவும் வைத்துக்கொள்ளலாம்.

ஒரு பண நோட்டை சட்டரீதியாக பணம் இல்லை என்பதை பணமறுதலித்தல் (demonitization) என்கிறோம். இவ்வாறு பணமறுதலித்தல் என்று சொல்லும்போது, அப்பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் சொத்துகளை உடனடியாக இழக்க வேண்டியுள்ளதால் அதற்கு மாற்று ஏற்பாடு தேவைப்படுகிறது.

பணமறுதலித்தல் முறை

பணமறுதலித்தலின் வழிமுறையை ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, பகுதி 26, உட்பிரிவு 2 இவ்வாறு கூறுகிறது, “ ரிசர்வ் வங்கி வெளியிடும் குறிப்பிட்ட ரூபாய் நோட்டின் வரிசை இனிமேல் சட்டரீதியான பணம் இல்லை என்று, ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் பரிந்துரைப்படி, இந்திய அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடலாம். (சேமிப்பு உட்குறிப்பு: குறிப்பிட்ட அலுவலகம் அல்லது வங்கி முகமையில் இந்த அறிவிப்பு குறிப்பிட்ட காலம் வரை நிறுத்திவைக்கப்படும்).”

இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரிய வருகின்றன. ஒன்று, பணமறுதலிப்புக்கு ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் பரிந்துரை தேவை. இரண்டு, அடைப்பு குறியில் உள்ள வாசகம் மறுதலிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு செய்வது தொடர்பானது, அதாவது குறிப்பிட்ட அலுவலகம் அல்லது வங்கி முகமை யில் மறுதலிக்கப்பட்ட பணம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கு பதில் சட்டரீதி யான பண நோட்டுகள் வழங்கப்படும். இதுவும் அதே சட்டத்தில் இருப்பதாலும், செல்லாத பணநோட்டுகளை பெற்று புதிய பணநோட்டுகளை கொடுக்கும் பணியை பெரும்பாலும் வங்கிகள் மூலம் செய்யவேண்டியுள்ளதால், பணமாற்று முறையை வடிவமைத்து செயல்படுத்தவும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரை தேவை.

மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் 8, 2016 தேதியிட்டு S.O 3407(E ) என்ற அரசிதழ் அறிவிப்பில் “ ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவின் பரிந்துரைப்படி” என்று குறிப்பிட்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் இனி சட்டபடியான ரூபாய் நோட்டுகள் அல்ல என்றும், அவற்றை வங்கிகள் மூலம் எப்படி மாற்றிகொள்வது என்றும் அறிவித்தது. அதே தேதியில் 3408(E ) என்ற அரசிதழ் அறிவிப்பில் வங்கிகள் அல்லாத வேறு எங்கெல்லாம் பணமறுதலிக்கப்பட்ட 500, 1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

3407 (E ), 3408(E ) ஆகிய இரண்டு அரசிதழ் அறிவிப்புகளுக்கிடையே பெரிய வேறுபாடுகள் உண்டு. 3407(E) யில் “ரிசர்வ் வங்கியின் பரிந்துரைபடி” என்ற வாசகம் உள்ளது, ஆனால் 3408(E)லும் அதற்கு பிறகு வந்த 10 அரசிதழ் அறிவிப்புகளில் “RBIயின் பரிந்துரைப்படி” என்ற வாசகம் இல்லை. எனவே, வங்கிகள் தவிர மற்ற இடங்களில் பணமறுதலிக்கப்பட்ட 500, 1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்ததா என்று தெரியவில்லை.

மேலும் பணமறுதலிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கும், மற்ற இடங்களில் மாற்றுவதற்கும் வேறுபாடு உண்டு. மறுதலிக்கப்பட்ட ஒரு பணத்தை வங்கியில் மாற்றும் போது அது தொடர்ந்து மறுதலிக்கப்பட்ட பணமாகவே இருக்கிறது, அதற்கு பதில் சட்டரீதியான பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால் பணமறுதலிக்கப்பட்ட ஒரு 500ஐ கொடுத்து பெட்ரோல் வாங்கும் போதும் அல்லது அரசு நிறுவனங்களின் சேவைக்காக செலுத்தும் போது அதே பணம் சட்டரீதியான பணமாக மாறிவிடுகிறது, அதாவது, பரிவர்த்தனையில் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனை வேறு விதமாக சொல்வதானால், ஒரு 500 ரூபாய் என்னிடம் இருந்தால் அது செல்லாத நோட்டு, அதையே பெட்ரோல் பங்க்கில் கொடுத்து பெட்ரோல் வாங்கும் போது அது சட்டரீதியான பணத்தின் தன்மையை பெறுகிறது. ஆக, ஒரு 500 ரூபாய் நோட்டு பெட்ரோல் பங்கில் பணமாகவும், அதனை விட்டு வெளியே வந்தால் மறுதலிக்கப்பட்ட பணமாகவும் மாறிவிடுகிறது, அதாவது அதன் தன்மை இடத்துக்கு இடம் மாறுகிறது. இது மறுதலிக்கப்பட்ட பணத்தின் தன்மை பற்றி ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட ரூபாய் நோட்டை உடனடியாக சட்டரீதியான பணம் இல்லை என்று முற்றிலுமாக புழக்கத்திலிருந்து நீக்கவேண்டுமெனில் அதற்கு மிகப்பெரிய மாற்று ஏற்பாடு இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பதை நவம்பர் 9 அன்று காலையே நமக்கு தெரிய வந்தது. மேலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மறுதலிக்கப்படுகின்றன என்று அறிவித்துவிட்டு அதன் பிறகு 7 நாட்களில் மறுதலிக்கப்பட்ட பண நோட்டுகளை பரிவர்த்தனையில் ஏற்றுக்கொள்ளும் முறைகள் பற்றி 10 அரசிதழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசு எவ்வாறு எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் இந்த பணமறுதலிப்பை செய்ய முனைந்துள்ளது என்று தெரியவருகிறது.

ரத்தநாளங்களை அறுப்பது போன்றது

நவீன பொருளாதாரங்கள் எல்லாம் பணமயமான பொருளாதாரங்கள்தான், இதில் இந்தியாவும் ஒன்று. ஒரு பொருளாதார சுழற்சிக்கு பணம் மிக முக்கியம். நம் நாட்டு தேசிய வருமானத்துடன் ஒப்பிடும்போது மக்களிடம் உள்ள பண நோட்டுகளின் அளவு 10.9% தான். பல நாடுகளில் இந்த பண நோட்டு - தேசிய வருமானம் விழுக்காடு மிகவும் குறைவு. பண நோட்டுகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்த விழுக்காடு அதிகமாக இருக்கும். எனவே இந்தியாவில் பண நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க இங்கு திடீரென பணமறுதலிப்பை அறிவிப்பதால் பொருளாதாரம் தேக்கம் அடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.

ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் மக்களிடம் புழங்குவதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் எத்தனை என்று ரிசர்வ் வங்கியிடம் துல்லியமான கணக்கு உண்டு. சுமார் 20,000 கோடி நோட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இவ்வளவு பண நோட்டுகளையும் மறுதலிக்கும் முன்பு அதற்கு இணையாக ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு விநியோகிக்கத் தயாராக நாடு முழுவதும் வைத்திருக்கவேண்டும் அல்லவா? அப்போது தானே உடனடி பணமறுதலிப்பை செயல்படுத்த முடியும். ஏன் செய்யவில்லை? இந்த முன்னேற்பாடு கசிந்துவிட்டால் கறுப்பு பணம் வெளியே வாராது என்று சொல்லப்படுகிறது. ரகசியம் காப்பது அரசின் தலையாய கடமையல்லவா?

செய்திதாள்களில் நாம் படிக்கும் பல செய்திகள் பணமறுதலிப்பினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு சான்று கூறுகின்றன. தமிழகத்தில் இப்போது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகும் காலம். கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாய கடன் கொடுக்கமுடியாமல் இருந்தால் விவசாயம் பாதிப்படைவதுடன் விவசாய உற்பத்தியும் குறையும். பல பெரிய சந்தைகள் வெறிச்சோடிக்கிடப்பதை ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. வங்கிகளில் நீண்ட வரிசையில் இரவு பகல் முழுவதும் மக்கள் நிற்பதை பார்க்கிறோம்.

இது எந்த அளவிற்கு நமது உழைப்பை வீணடிக்கிறது என்று கணக்கிட வேண்டும். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மறுதலிக்கப்பட்ட பிறகு பெட்ரோல், பால், சமையல் எரிவாயு, அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கு என்று பல இடங்களில் அந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது என்பது உடனடி பணமறுதலிப்பில் உள்ள சிக்கல்களை நமக்கு காட்டுகிறது.

அதிகரிக்கும் சிக்கல்

அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டாலும், அதற்கு இணையான ரூபாய் நோட்டுகளை இன்னும் புழக்கத்தில் விடவில்லை. மாறாக ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டி ருந்தாலும் அதனை சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. இந்த நிலையில் ரூ.100 நோட்டுகளுக்கு தேவை இருக்கிறது. தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இவை இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இனி வங்கி அமைப்புக்கு 100 ரூபாய் தாள்கள் வருவதற்கான வாய்ப்பு இல்லை. சிறு நிறுவனங்கள், வணிகர்கள் யாருமே ரூ.100 தாள்களை வங்கியில் டெபாசிட் செய்ய முன்வர மாட்டார்கள்.

மேலும் தேவையற்ற பயம் காரண மாக ரூ.100 நோட்டுகளை அதிகமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தால் வரும் நாட்களில் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும். அடுத்த பத்து நாட்களில் நவம்பர் மாத சம்பளங்கள் வரவு வைக்கப்பட உள்ளன. அதற்குள் ரூ.500 புழக்கத்தை உயர்த்த வேண்டும். இல்லை எனில் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கும்.

இந்த அளவுக்கு சிக்கலான, நடைமுறைப்படுத்த கடினமான, பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கும், மக்களின் உழைப்பு நேரத்தை வீணடிக்கும் உடனடி பணமறுதலிப்பினால் என்ன லாபம்? ஒரு குளத்தில் மாசு ஏற்படுத்தும் சாக்கடை இணைப்பை துண்டிக்காமல் குளத்து நீரை அவ்வப்போது எடுத்து சுத்தம் செய்வது குளத்து மாசை குறைக்காது. அது போல கறுப்பு பணத்தின் தோற்றுவாயை மூடாமல் பணமறுதலிப்பை செய்வது பயன் தராது, மாறாக மிகப்பெரிய பொருளாதார சுமையைத்தான் ஏற்படுத்தும்.

- இராம. சீனுவாசன்
seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

56 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்