குறள் இனிது: வலிக்கிற இடத்திலே அடிக்கணும் குமாரு!

By சோம.வீரப்பன்

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின் (குறள் - 493)



நீங்கள் தலைக்குப் போட்டுக் குளிப்பது ஷாம்பூவா?, சிகைக்காயா?1970 களில் ஷாம்பூ பணக்காரர்கள் மட்டும் உபயோகிக்கும் விலை உயர்ந்த பொருளாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? அந்தக் காலத்திலேயே விலை ரூ.40, ரூ.50 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்பவெல்லாம் ஷாம்பூ பாட்டிலில்தான் கிடைக்கும். கலால் வரி அதிகம். டாடா, ஹலா பிராண்டுகள் பிரசித்தம். பெரிய நிறுவனங்களிடமும் பன்னாட்டு நிறுவனங்களிலும் நம் குடுமி இருந்த காலம் அது.

அப்பொழுது சின்னிகிருஷ்ணன் எனும் நம்ம கடலூர்காரர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஏழை எளிய மக்கள் ஷாம்பூ போட்டுக் குளிக்க ஆசைப்பட்டாலும் அதன் விலையே அதற்குப் பெருந்தடையாக இருப்பதைத் தெரிந்து கொண்டார். மேலும் அதன் விலைக்கு ஓர் முக்கிய காரணம் அது விற்கப்படும் பாட்டிலின் கொள்ளளவு அதிகமாக இருப்பதுதான் என உணர்ந்தார். சிறிய கடைக்காரர்கள் அவ்விலையில் கொள்முதல் செய்து கடையில் வைப்பதற்கு சிரமப்படுவதையும் புரிந்து கொண்டார். விளைவு? சாஷே எனும் சிறிய பாக்கெட்டில் வெல்வெட் ஷாம்பூ பிறந்தது! 7 மி.லி க்கு ரூ.1 என்று சந்தையை ஒரு கலக்கு கலக்கியது!! பெரிய நிறுவனங்கள் நுரை தள்ளா விட்டாலும் தம் இடத்திலிருந்து வழுக்கி விழுந்தன. பின்னர் என்ன? சாஷே பாக்கிங் புரட்சியை ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் பின்பற்றின.

தம்மைவிட வலிமைமிக்க எதிரியை ஓர் மன்னன் போரில் எதிர் கொண்டு வெற்றி பெறுவது கடினமாயிற்றே. பிராண்ட் பலமும் விளம்பர பலமும் மிக்க போட்டியாளரை ஓர் சிறிய நிறுவனம் எதிர்கொள்வதும் அப்படித்தான். எதிரிக்கு பலவீனமான இடத்தில் அவரைத் தாக்கினால் வெற்றி பெற முடியும். யானையின் காதுக்குள் எறும்பு புகுவது போல. எனவே எதிரியின் பலவீனம் எதுவென்று ரூம் போட்டு யோசியுங்கள். அந்த பலவீனமான இடத்தில் எதிரியைத் தாக்குங்கள்.

நிர்மா எனும் டிடர்ஜென்ட் பவுடரின் கதையும் இதுதானே. சர்ஃபை எதிர்ப்பது என்பதெல்லாம் 1969 ல் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாதது. சர்ஃப் ரூ.13 இருக்கும் பொழுது நிர்மாவை ரூ.3 க்கு வீடுவீடாகச் சென்று விற்றார் கர்சன்பாய் படேல். அவர்களது பிராண்ட் செல்வாக்கையும் விளம்பரத்தையும் இவர் விலையாலும் தனிமனிதத் தொடர்பாலும் வீழ்த்தினார். அது சரி, கெட்ச் அப்புக்கு மாகி செய்த விளம்பரம் செய்த ஞாபகம் இருக்கிறதா? பல கெட்ச் அப்புக்கள் சந்தையில் இருக்கும் பொழுது என்ன பெரிய வித்தியாசம் எனக் கேட்கத் தோன்றுகிறதா? அதையே விளம்பர வாசகமாக ஆக்கி விட்டார்கள். விளம்பரத்தில் ஒருவர் அப்படி என்னடா அதில் எனக் கேட்க ‘It is different’ எனத் திரும்பத் திரும்பச் சொல்ல உங்களைச் சிரிக்க வைத்து கல்லாவையும் கட்டினார்கள் அவர்கள்.

சரியான இடம் பார்த்து சாமர்த்தியமாய் மோதினால் வலியவரையும் வெல்லலாம் என்கிறது குறள்

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

15 mins ago

க்ரைம்

8 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

20 mins ago

தொழில்நுட்பம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

ஜோதிடம்

15 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

39 mins ago

மேலும்