உன்னால் முடியும்: தேவைகளே தொழில் தொடங்க முதல்படி

By நீரை மகேந்திரன்

அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தவர், விவசாயம் செய்வதற்காக சட்டென எல்லாவற்றையும் உதறி விட்டு சொந்த ஊருக்கு திரும்ப முடியுமா? வாழ்க்கையின் தேவைகள் பணம் சம்பாதிப்பதில் இல்லை, அர்த்தமுடன் வாழ்வதில் இருக்கிறது என விளக்கம் கொடுக்கிறார் ராஜேஷ்குமார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராண்ட்மா’ஸ் கேர் என்கிற பெயரில் இயற்கை முறையிலான பல்வேறு குளியல் சோப் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், தனது அனுபவத்தை இந்த வாரம் `வணிக வீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து...

பெரிய கட்டுமான நிறுவனத்துக்காக அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டி ருந்தேன். மனைவி குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்தோம். குழந்தை களுக்கு அங்குள்ள சூழல் ஏற்றுக் கொள்ள வில்லை. அடிக்கடி உடல்நலப் பிரச்சினை கள் ஏற்பட்டது. ரசாயன பொருட்களை குறைத்துவிட்டு, இயற்கை வழி தயாரிப்பு களுக்கு மாறுங்கள் என்றார் மருத்துவர். நம்ம ஊரில், நமது பாரம்பரிய அறிவு இயற்கையோடு இணைந்து வாழுங்கள் என்று வலியுறுத்தினாலும் நாம் திரும்பிகூட பார்க்காத நிலையில், அமெரிக்காவில் வந்து இந்த வார்த்தைகளை கேட்க வேண்டியிருக்கிறதே என்று வெட்கமாக இருந்தது.

இந்த நிலையில் அங்குள்ள மாகாண அரசு இயற்கை முறையிலான பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை அளித்து வருவதை அறிந்து எனது மனைவி பாமா அவற்றைக் கற்றுக் கொள்ள முன்வந்தார். இதே காலகட்டத்தில் நாங்கள் குழந்தைகள் நலன் கருதி தமிழ்நாடு திரும்பி விட முடிவெடுத்திருந்தோம்.

ஊருக்கு வந்ததும் இயற்கை விவசாயம் செய்வது, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கைக்கு திட்டமிடுவது என முடிவெடுத்ததால், அங்கிருக்கும்போதே சொந்த ஊரில் கொஞ்சம் நிலமும் வாங்கி போட்டோம்.

அமெரிக்காவில் பணியாற்றியபோது என் ஆண்டு வருமானம் 80 லட்ச ரூபாய், இந்த வருமானத்தின் மீதான பற்றை விடுவதற்கு மிகப்பெரிய மன தைரியம் வேண்டும். இந்த முடிவு எடுப்பதற்கு எங்களது குடும்ப வரலாறும் முக்கிய காரணமாக இருந்தது. எங்களது பாட்டனார் காலத்தில் செல்வ செழிப்பாக இருந்த குடும்பம், தாத்தா காலத்தில் சாதாரண நிலைமைக்கு கீழே வாழ்க்கைதரம் இருந்தது. இதனால் செல்வ செழிப்பு என்பது நிலையானது அல்ல, அதைவிடவும் அர்த்தமுள்ள மனநிறைவான வாழ்க்கைதான் வாழவேண்டும் என்பதை உணர்ந்த நாட்களில் வேலையை உதறிவிட்டு ஊர் திரும்பினோம்.

இங்கு வந்ததும் எந்த ஆடம்பரங்களும் இல்லாத, எங்களது தேவைகளுக்கு கூடுமானவரை நாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வகையிலான வாழ்க்கையைத் தொடங்கினோம். கூடவே எனது மனைவி அமெரிக்காவில் கற்றுக் கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து இங்கு ரசாயனக் கலப்பில்லாத இயற்கை பொருட்களைத் தயாரிப்பது என்று முடிவெடுத்தோம். இதற்கு எனது நண்பர் பாலாஜியும் அவரது மனைவியும் பக்கபலமாக இருந்தனர். முதலில் எங்களது முயற்சி சோப் தயாரிப்பதுதான். தற்போது சந்தையில் கிடைக்கும் எல்லா வகையான பிராண்ட் சோப்புகளும் ரசாயன மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான். இப்படி இல்லாமல் எங்களது தோட்டத்திலேயே விளையும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிப்பது என்று இறங்கினோம்.

சுமார் இரண்டு ஆண்டுகள் இதற்கான சோதனை முயற்சிகள் எடுத்தோம். தொழில்நுட்ப முறையில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை சோதித்து பார்த்தோம். இதற்காக எங்களது சேமிப்புகளை செலவு செய்தோம். குப்பை மேனி, பப்பாளி, துளசி, மஞ்சள், வேம்பு என மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளை அவ்வப்போது எங்களது குடும்ப சித்த மருத்துவரிடத்தில் கொண்டு காட்டியபோது, இயற்கை முறையிலான பொருட்களை பயன்படுத்துபவர்கள், அங்காடிகள் என பலரையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

கடந்த பத்து மாதங்களாக முழுமையாக சோப் உற்பத்தியைத் தொடங்கினோம். தமிழகம் முழுவதும், எல்லா ஊர்களிலும் இயற்கை பொருட்கள் அங்காடிகள் இருப்பதால் சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது. இயற்கை முறையிலான பொருட்கள் விலை சற்று அதிகமாக இருப்பதற்கு காரணம் மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவுகள்தான். இப்போது இயற்கை முறையிலான பவுடர் தயாரிப்பதற்கான முயற்சிகளில் உள்ளோம்.

பொதுவாக இந்த தயாரிப்புகள் எல்லாமே எங்களது தேவைகளிலிருந்து உருவானது என்பதைத்தான் நான் பலரிடமும் குறிப்பிடுகிறேன். எல்லாமே நாங்கள் பயன்படுத்தி பார்த்த முயற்சிகள். இப்போது மாதத்துக்கு 500 சோப் கட்டிகள் வரை விற்பனை ஆகிறது. தேவைகள் அதிகரிக்கும்போது உற்பத்தியையும் அதிகரிக்கலாம். இதன் மூலமான வருமானத்தை நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அனைவருமே இயற்கை தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றார். எல்லோரும் நலம் பெற இவரது ஆசை நிறைவேற வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்