மாறிவரும் மளிகை விற்பனை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் இன்றைக்கு மளிகைப் பொருள்களை விற்கும் சில்லறை விற்பனைக் கடைகள் ஏறக்குறைய 1.2 கோடி உள்ளன. அது சார்ந்து சுமார் 10 லட்சம் மொத்தம் வியாபாரிகளும் விநியோகஸ்தர்களும் தொழில் செய்து வருகிறார்கள். மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது விநியோகத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் இந்தத் துறை பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இத்துறை தொடர்ச்சியாக மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாடர்ன் டிரேட் என அழைக்கப்படும் சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட்டுகளின் வருகை, கேஷ் அண்ட் கேரி வர்த்தகம், ஆன்லைன் வணிகம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

காலத்துக்கு ஏற்றாற்போல இந்திய நுகர்வோர்களும் தங்களது வசதி, ஆரோக்கியம், பெறும்மதிப்பு (value) ஆகியவற்றிற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கும் முறையை மாற்றிக்கொண்டு வருகிறார்கள். இது இந்தப் பெருந்தொற்று காலத்தில் தெளிவாக புலப்படுகிறது.

புதிய தலைமுறை நுகர்வோர்

இந்தியாவில் இணையத்தை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியாகும். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தகவல்களைப் பெறுவதிலும், பொருள்களை வாங்குவதிலும் இருந்த அடிப்படை அணுகுமுறைகளை புரட்டிப் போட்டு வருகிறது. சமீபத்தில் இது குறித்து மெக்கின்சி என்கிற ஆலோசனை நிறுவனம் ஆய்வொன்று நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
பொருள்களை தாங்கள் எங்கு வாங்குவது என்பதை ‘பெறும் மதிப்பு’ தான் தீர்மானிக்கிறது என்று 44 சதவீத நுகர்வோர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. அதோடு பொருள்கள் தரமாகவும் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பெறும்மதிப்பைப் பொருத்து அவர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் பிராண்டுக்குப் பதிலாக வேறு பிராண்டை வாங்கக்கூடத் தயங்குவதில்லை. குறிப்பாகப் பெருந்தொற்று காலத்தில்! பொருள்களை வாங்குவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருப்பதாக 73 சதவீத நுகர்வோர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பிராண்டின் மீதான பற்று என்பது கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகிறது. எந்த பிராண்ட் வெரைட்டியைக் கொண்டிருக்கிறது, தரமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் நுகர்வோர்கள் ஒரு பிராண்டிலிருந்து இன்னொரு பிராண்டுக்கு தாவுகிறார்கள். கரோனா காலத்தில் 59 சதவீதம் பேர் வேறு ரீடெய்லர்கள்/கடைகள்/இணையதளங்கள் மூலம் பொருள் வாங்கவும், 57 சதவீதம் பேர் புதிய பிராண்டையும் , 53 சதவீதம் பேர் புதிய டிஜிட்டல் ஷாப்பிங் முறையையும் முயன்று பார்த்திருக்கிறார்கள் என்று மெக்கன்ஸி ஆய்வு கூறுகிறது.

விநியோகத்தில் மாற்றம்

ஆன்லைன் நிறுவனங்கள் பொருள்களை நேரடியாக நுகர்வோர்களின் வாசலுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதோடு ஸ்விக்கி, டன்சோ போன்ற நிறுவனங்களும் இப்போது பொருள்களை நுகர்வோர்கள் இருக்குமிடத்துக்கு 30-45 நிமிடங்களில் கொண்டுபோய் சேர்க்கும் சேவையை ஆரம்பித்திருக்கின்றன. அது போல லிசியஸ், மில்க்பாஸ்கெட் போன்றவையும் பால், இறைச்சி ஆகியவற்றை பிரெஷ்ஷாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.

‘டி-மார்ட்’ தனது கடைகள் மூலமாக மட்டுமல்லாமல் ‘டி-மார்ட் ரெடி’ மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் ஹோம் டெலிவரியிலும் இறங்கியிருக்கிறது. இது போல ரிலையன்ஸ் ரீடெயிலும் ‘ஜியோமார்ட்’ மூலம் இதை ஆரம்பித்திருக்கிறது.ஆக, சில்லறை வணிகமும் விநியோக முறையும் காலத்துக்கேற்ப மாறி வருவது போல நுகர்வோர்களும் மாறி வருகிறார்கள். இந்த மாற்றங்களை பொருள் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பொருள்கள் ஆன்லைன், ஆஃப்லைன், நேரடி விநியோகம் என அனைத்துத் தளங்களிலும் கிடைக்கும்படி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருள்கள் விற்பனையில் ஆஃப்லைன் கடைகளின் (அண்ணாச்சிக் கடைகள்) பங்கு சுமார் 85 சதவீதமாக உள்ளது. அது அடுத்த மூன்று ஆண்டுகளில் 65-70 சதவிகிதம் என்கிற அளவிற்குக் குறையக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரத்யேக ஆன்லைன் வணிகர்கள், டெலிவரி நிறுவனங்கள், மாடர்ன் டிரேட் கடைகளின் ஆன்லைன் தளங்கள் ஆகியவற்றோடு தங்களுக்கான உறவை பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நன்கு வலுப்படுத்திக் கொள்வதோடு புதிய உத்திகளை வகுத்து அதன்படி செயல்பட வேண்டும். இதன் மூலம் அவர் களது பொருள்கள் பரவலாக கிடைக்குமென்பதோடு அதிக நுகர்வோர்களை விரைவில் சென்றடையக் கூடியதாகவும் இருக்கும்.

- தொடர்புக்கு: sidvigh@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

வாழ்வியல்

47 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்