தேர்தல்தான் மாற்றத்துக்கு காரணமா?

By செய்திப்பிரிவு

டாடாவின் நானோ கார் பிரபலமானதோ இல்லையோ, நானோ கார் அமைக்க முதலில் உத்தேசித்த சிங்குர் கிராமத்திலிருந்து டாடா வெளியேறிய கதை மிகவும் பிரபலம். கம்யூனிஸ ஆட்சி நடைபெற்ற போது மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குர் பகுதியில் 900 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனத்தின் சிறிய ரகக் கார் அமைக்க 2002-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.

ஆனால் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரித்து டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கியதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டம், மக்கள் மத்தியில் பானர்ஜிக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. கம்யூனிஸ ஆட்சிக்கு ஒரே மாற்று இவர்தான் என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க இந்த போராட்டம் அடித்தளமாக அமைந்தது. ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரால் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இதனால் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிங்குரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய 80 சதவீத ஆலை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சிங்குரிலிருந்து வெளியேறியது டாடா. கனத்த இதயத்துடன் வெளியேறுவதாகக் கூறினார் ரத்தன் டாடா.

2008 அக்டோபரில் அங்கிருந்து வெளியேறி குஜராத் மாநிலம் சனந்த்நகரில் ஆலை அமைத்து அங்கிருந்து நானோ கார்கள் சந்தைக்கு வந்தன.

சிங்குரிலிருந்து டாடா வெளியேறியபோதிலும் அந்நிறுவனம் வாங்கிய நிலத்தை மாநில அரசிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை. பிரச்சினை நீதிமன்றத்திடம் சென்றது. 400 ஏக்கர் நிலம் விவசாய நிலம் என்றும் அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று 2011-ல் மம்தா பானர்ஜி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநில அரசு சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னமும் முடியவில்லை.

இங்கு ஆலை அமைய நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி அளித்து வேலை அளிப்பதாக டாடா உத்தரவாதம் வழங்கியிருந்தது. அவ்விதம் பயிற்சி பெற்ற 700 விவசாய குடும்பத்து இளைஞர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகிவிட்டது. ஆலைக்கு நிலம் கொடுத்த போது ரூ. 18 லட்சம் தருவதாகக் கூறினர். போராட்டத்தால் ஆலை வரவில்லை. நிலமும் திரும்பக் கிடைக்கவில்லை. மம்தா பானர்ஜி ஆட்சியில் ரூ. 2 கிலோ விலையில் 16 கிலோ அரிசி கிடைக்கிறது. அத்துடன் நிவாரணமாக மாதா மாதம் கிடைக்கும் ரூ. 2,000த்தை வைத்துக் கொண்டு 8 பேர் கொண்ட குடும்பத்தை நடத்துவதாக கூறுகிறார் பிகாஷ் பக்ரியா. இவரைப் போன்று பல விவசாயிகள் விடிவை நோக்கி காத்திருக்கின்றனர்.

இவையெல்லாம் பழைய கதை. இப்போது டாடா நிறுவனத்துடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டாடா நிறுவனம் விரும்பினால் 400 ஏக்கர் தவிர்த்த 600 ஏக்கர் நிலத்தில் ஆலை அமைக்க தனது அரசு அனுமதி தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே சுமூகமாக தீர்க்க தயாராக இருப்பதாக பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமை யாக எதிர்த்து, ஆட்சிக் காலத்தில் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, பதவிக்காலம் முடியும்போது இதற்குத் தீர்வு காண முயல்வதை என்னவென்று கருதுவது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்