சிக்கலின் மறுபெயர் வருமான வரி இணையதளமா? 

By செய்திப்பிரிவு

நமது நாட்டின் பட்ஜெட்டில் 30 சதவீதம் அளவுக்கு வருவாய் ஈட்டித்தருவது நேரடி வரிகளின் கீழ் இருக்கும் வருமான வரித் துறை
தான். கடந்த சில ஆண்டுகளில் வருமான வரிச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்ததுடன், பல புதிய தொழில் நுட்பங்களையும் வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இணையதளத்தை, வருமான வரித் துறை அதிகாரி
களையும், வரிதாரர்களையும் இணைக்கும் பாலமாக மாற்றும் நோக்கில் புதிய வசதிகளை உள்ளடக்கிய ஒரு போர்ட்டலாக உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அதன் பயனாக, கடந்த ஜூன் மாதம் புதிய போர்ட்டல் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இனி வருமான வரி தொடர்பான அனைத்து நடைமுறைகளும் எளிதாகும் என்று வரி செலுத்துபவர்களும் வருமான வரித் துறை அதிகாரிகளும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். துரதிருஷ்டவசமாக, அந்தப் போர்ட்டல் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.

புதிய போர்ட்டல்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், வருமான வரி போர்ட்டலில் கணக்கு தாக்கல் செய்தால், குறைந்தபட்சம் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் பெரும்பாலான ரீபண்ட் கிடைத்துவிடும். ஆனால், நம் நாட்டில் வருமான வரி ரீபண்டுக்கு 63 நாட்கள் வரையில் ஆகிறது. இந்நிலையில், அமெரிக்கா போன்று, வரிதாரர் குறிப்பிட்ட சில பணிகளைத் தவிர வேறு எதற்கும் வருமான வரித் துறை அலுவலகத்துக்குச் செல்வதற்கான அவசியமே இல்லாமல், இணையதளத்திலேயே எல்லாவற்றையும் செய்துகொள்ளும் வகையில் புதிய போர்ட்டல் ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்குமுன், வருமான வரித் துறையின் இணையதளத்தை, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிர்வகித்து வந்தது. இந்நிலையில் புதிய போர்ட்டலை வடிவமைத்து, இயக்கும் பொறுப்பு இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ரூ.3,500 கோடி செலவில், இந்தப் பணியை 2019-ம் வருடம் இன்ஃபோசிஸ் தொடங்கியது.

வருமான வரி தாக்கல் செய்பவர், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும்கூட, போர்ட்டலில் நுழைந்து அது கேட்கும் கேள்வி – பதில் வகையிலான படிவங்களுக்கு பதில் அளித்தாலே, தாமாகவே வரிக்கணக்கு மேற்கொள்ளப்பட்டு, கணக்கு தாக்கலாகி விடுமள
விற்கு அதிநவீன போர்ட்டலாக அது வடிவமைக்கப்படுவதாக கூறப்பட்டது. வரிக்கணக்குத் தாக்கலைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணைகள், அபராதம், மேல்முறையீடு போன்றவற்றையும் போர்ட்டல் வாயிலாகவே மேற்கொள்ளலாம் என்றும் வருமான வரி ரீபண்ட் தொடர்பான நடைமுறைகள் சிக்கீரமே செய்து முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், புதிய போர்ட்டலின் வரவு வரிதாரர்களுக்கும், வருமான வரித் துறைக்கும் நல்வரவாக அமையவில்லை. புதிய போர்ட்டல் பயன்பாட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னமும் புதிய போர்ட்டலில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் தீர்க்கப்படாமல் உள்ளன. விளைவாக, வரிதாரர்களும், பட்டயக் கணக்காளர்களும், வருமான வரித் துறையும், மத்திய நிதியமைச்சகமும் ஸ்தம்பித்து உள்ளனர்.

என்னதான் பிரச்சினை?

கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதியில் இந்தப் போர்ட்டல் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் முதலே பிரச்சினைகளும் தொடங்கிவிட்டன. முதலில், ‘லாக்இன்’ ஆவதிலேயே சிக்கல் தொடங்கியது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் உள் நுழைய முயற்சித்ததால், இணையதளம் லோடு ஆவது தாமதமாகியது. பலருக்கு ஆதார் இணைப்புக்கான ஓடிபி வராமல் இருந்தது; பலருக்கு பாஸ்வேர்டு உருவாகாமல் இருந்தது.

வரிதாரர்களின், முந்தைய வருமானவரி கணக்குகளுக்கான இணைப்பு போர்ட்டலில் காட்டப்படவில்லை. இவையெல்லாம் ஆரம்ப காலதொழில்நுட்ப கோளாறுகள்தான். சீக்கிரமே சரிசெய்யப்பட்டுவிடும் என்று மக்களும் அதிகாரிகளும் நினைத்தனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல தொழில்நுட்பக் கோளாறுகள் சரியாகாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து பல புதிய பிரச்சினைகளும் ஏற்படத் தொடங்கின.

பலரின் வரிக்கணக்குகளில், வட்டி கணக்கிடுவதில் தவறுகள் ஏற்பட்டன. சிலருக்கு ‘படிவம்16’ தரவுகள் சரியாக பின்பற்றப்படவில்லை; சிலருக்கு, வரிவிலக்கு சரியாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. சிலருக்கு, தனிநபர் கணக்கில் ஐடிஆர்- 1 ‘சப்மிட்’ ஆன பிறகும், ‘அக்சப்ட்’ ஆகவில்லை. சிலருக்கு இ-வெரிபை காட்டவில்லை. சிலருக்கு, ‘படிவம் 26 ஏஎஸ்’ தாமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தது. சிலருக்கு ‘செக்யூர் கனெக்சன் இல்லை’ என்று வந்தது. இப்படி புதிய போர்ட்டல் தொடங்கிய, இரண்டு மாதங்களிலேயே, அதனால் ஏற்பட்ட 2 ஆயிரம் பிரச்சினைகளை குறிப்பிட்டு, 700 மின்னஞ்சல்கள் மத்திய நிதியமைச்சகத்துக்கு சென்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவை தனித்துவமான பிரச்சினைகள் என்கிறார்கள். அனைத்திலும் உச்சமாக, கடந்த மாதம் இறுதியில் இரண்டு நாட்கள் போர்ட்டல் மூடப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகியோரை அழைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். இது போன்று இரண்டு முறை சந்திப்புகள் நடந்தன.

மாறிய கெடு தேதிகள்

பொதுவாக, ஒவ்வொருவருடமும் ஜூலை 31-ம் தேதிக்குள் முந்தைய நிதி ஆண்டின் வருமான வரிக்கணக்கை தனிநபர்கள் மற்றும் தணிக்கை தேவைப்படாத நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

கரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக 2020-21-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஜூலை 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டிருந்தது. அது, தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், தணிக்கை செய்யப்படும் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் 2021 அக்டோபர் 31-ம் தேதியாக இருந்தது. அது தற்போது 2022 ஜனவரி 15-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

பொதுவாக, வரி வசூலுக்கான இலக்கை எட்டுவதற்கு வசதியாக, வருமான வரித் துறையால், வரிக்கணக்கு தாக்கலுக்கான கெடு தேதி ஒருமுறை அல்லது இருமுறை நீட்டிக்கப்படும். அதேபோல் புயல், வெள்ளம் போன்ற தேசியப் பேரிடர் ஏற்பட்டாலும் கெடு தேதி தள்ளிப்போகும். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கெடு தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு புதிய போர்ட்டல் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததே முக்கியக் காரணம். “வருமான வரிக்கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதில் சிரமம் நீடிப்பதாக, வரி செலுத்தும் தனிநபர்கள், நிறுவனங்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. அதனால், வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறி கெடு தேதியை நீட்டித்துள்ளது மத்திய நேரடி வரிகள் வாரியம்.

போர்ட்டலும் போராட்டமும்!

புதிய போர்ட்டலில் சிக்கல் ஏற்படத் தொடங்கியதும், “நிறைய தொழில்நுட்பக் கோளாறுகள் கேள்விப்படுகிறோம். அதை விரைவில் சரி செய்ய வேண்டும். வருமான வரி இணையதளத்தின் தரம் குறைந்துவிடக்கூடாது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேணியை டேக் செய்து ட்விட் செய்தார். “நாங்கள் அதை சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று அவர் பதில் தெரிவித்தார்.

எனினும், பிரச்சினைகள் சரியாகாததால் வரிதாரர்கள் போர்ட்டல் வாயிலாக அல்லாமல், நேரடியாக வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கும் இடையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில், நிதியமைச்சருடன் நடந்த கூட்டத்தில், “போர்ட்டல் தொடங்கப்பட்டு இரண்டரை மாதமாகியும், கோளாறுகள் இன்னும் ஏன் சரி செய்யப்படவில்லை” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

“போர்ட்டல் செயல்பாட்டில்தான் இருக்கிறது. பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் பதில் அளித்தது.

இந்தச் சூழலில், “குறைந்தபட்சம், வரிக்கணக்கு தொடர்பான செயல்பாடுகள், படிவம் 15 சி.ஏ, படிவம் 15 சி.பி, டி.டி.எஸ். ஸ்டேட்மென்ட், டி.எஸ்.இ. முந்தைய ஐ.டி.ஆர். ஆகிய முக்கியமான பிரச்சினைகளையாவது உடனடியாக சரி செய்யுங்கள்” என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மத்திய நிதியமைச்சகம் கட்டளையிட்டிருக்கிறது.

உலக அளவில் முக்கியமான மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு, வருமான வரித்துறை போர்ட்டலை நிர்வகிப்பதில் சிக்கல்கள் வந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. இதற்கு முன்பு ஜிஎஸ்டி போர்ட்டல் நிர்வகிப்பதிலும் இதேபோன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதாவது அடுத்து மேற்கொள்ளும் பணியை சிறப்பாக முடித்துத் தரவேண்டும் என்ற எண்ணம் அந்நிறுவனத்துக்கு உருவாகியிருக்க வேண்டும். ஜிஎஸ்டி போர்ட்டலில் சிக்கல் உருவானபோதே, அதேபோன்ற பணியை அளிக்கிறோமே என்பதை நிதி அமைச்சகமும் பரிசீலித்திருக்க வேண்டும். ஒரு போர்ட்டல் பயன்பாட்டுக்கு விடப்படுவதற்கு முன்பு, பயனர்கள் தொடர்பான சோதனைகள் (User acceptance testing) நடத்தப்பட வேண்டும். அப்போது போர்ட்டில் பயன்பாட்டில் உள்ள சிக்கல்கள் தெரியவரும்.

இது போன்ற பல சோதனைகளையும் நடத்தி முடித்திருப்பதாக இன்ஃபோசிஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் வருமான வரிப் போர்ட்டல் இத்தனை சிக்கல்களைக் கொடுத்தது ஏன் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்,
karthikeyan.auditor@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்