விரைவில் வருகிறது ஸ்மார்ட் ஸ்கூட்டர்

By எம்.ரமேஷ்

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நம்மிடையே அதிகமிருந்தாலும் அதற்காகும் செலவுதான் கட்டுப் படியாவதில்லை. இதுதான் சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை விலகி இருக்கச் செய்துள்ளது.

பேட்டரி கார், பேட்டரி ஸ்கூட்டர் இவற்றை வாங்கி ஓட்ட வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஆசைதான். அதிகரித்துவரும் பெட்ரோல் விலை யைக் கருத்தில் கொண்டு பலரும் பேட்டரி கார், ஸ்கூட்டர் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பினாலும் அவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை வாங்கிய நண்பர் ஒருவர் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 முறை அதற்கான பேட்டரியை மாற்றிவிட்டார். ஸ்கூட்டர் வாங்கிய விலையை விட அவர் பேட்டரிக்கு செலவிட்ட தொகை அதிகம். பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் வாங்கும் நிலைக்கு இவரைத் தள்ளியது பேட்டரி ஸ்கூட்டரில் உள்ள இந்த பாதக அம்சமே.

இதேபோலத்தான் டெல்லியைச் சேர்ந்த பரணீதரன் பேட்டரி காரில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது காரை சிறிய ரக மொபெட்டுகள் முந்தி சென்றன. இதனால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான் அவரை பெட்ரோல் காருக்கு மாறத் தூண்டியது.

இவையெல்லாம் கடந்த கால நிகழ்வுகள், பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையாக சீறிப் பாயும் பேட்டரியில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த ஆதெர் எனர்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்கூட்டர் எஸ் 320 அடுத்த மாதம் சோதனை ஓட்டத்துக்குத் தயாராகிவிட்டது.

பேட்டரி ஸ்கூட்டரின் செயல் பாடுகளில் இருந்த பாதக அம்சங்களை ஏன் தங்களால் சரி செய்ய முடியாது என இரண்டு ஐஐடி மாணவர்கள் தீவிரமாக சிந்தித்ததின் விளைவாகப் பிறந்ததுதான் ஆதெர் எனர்ஜி.

சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த ஸ்வப்னில் ஜெயின் மற்றும் தருண் மேத்தா ஆகியோர் 2012-ம் ஆண்டு படிப்பை முடித்து வெளியேறியபோது ஒரு உற்பத்தி சார்ந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலையில் சேர்ந்தனர்.

மக்கள் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டரை வாங்க ஆர்வமாக இருந் தாலும், சந்தையில் விற்பனையாகும் எந்த ஒரு தயாரிப்பும் நம்பகத் தன்மை கொண்டதாக அதாவது நீடித்த பேட்டரி ஆயுள், அதிக வேகம், விரைவாக பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி ஆகியவற்றோடு வரவில்லை. இதனாலேயே 2010-ம் ஆண்டில் ஒரு லட்சமாக இருந்த விற்பனை 2014-ல் 16 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. ஏறக்குறைய 84 சதவீத சரிவுக்குக் காரணமே பொருள்கள் தரமாக இல்லாததுதான்.

அசோக் லேலண்டில் பணியாற்றிக் கொண்டிருந்த தருண் தனது வேலையை உதறிவிட்டு 2013-ல் நண் பனுடன் இணைந்து தாங்கள் பயின்ற சென்னை ஐஐடியில் ஆதெர் எனர்ஜி எனும் நிறுவனத்தை தொடங்கினர். தொழில்நுட்ப உருவாக்கம் ஐஐடி மையத்தில் உருவானது. 6 மாதங் களில் இரண்டு ஸ்கூட்டர்களை தயாரித்துவிட்டனர். இதைப் பார்த்து 25 ஸ்கூட்டர்களுக்கு முன் பதிவு கிடைத்தது. நிறுவனத்தை முழு வீச்சில் செயல்படுத்துவதற்கு முதல் தவணை நிதியைத் திரட்டும் முன்பாகவே ஸ்கூட்டரை வாங்க பலர் முன் பதிவு செய்தனர்.

பிறகு ஸ்கூட்டரை எங்கு தயாரிப்பது என்றபோதுதான் பெங்களூருக்குச் செல்வதென முடிவு செய்யப்பட்டு வொயிட்பீல்டில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. 2014-ல் முதல் கட்டமாக ரூ. 45 லட்சம் முதலீடு கிடைத்தபோது ஸ்கூட்டர் தயாரிப்புப் பணிகள் வேகமெடுத்தது என்கிறார் தருண்.

மத்திய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் ஏஞ்சல் முதலீட்டா ளர்களிடமிருந்து இந்த நிதி கிடைத்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனர் பன்சால், மெடால் ஹெல்த்கேர் நிறுவனர் ராஜு வெங்கட்ராமன் ஆகியோர் 10 லட்சம் டாலர் (ரூ.6.1 கோடி) முதலீடு செய்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் ரூ. 7.2 கோடியை டைகர் குளோபல் நிறுவனம் முதலீடு செய்தது. இவையனைத்துமே எங்களது பாதை சரியாக உள்ளது என்பதை உணர்த்துவதாக இருந்தது.

பொதுவாக ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பேட்டரி ஸ்கூட்டருக்கான பேட்டரிகள் காரியத்தால் ஆனவையாக இருந்தன. இதனால் இவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ என்ற அளவிலேயே இருந்தது. அதேபோல இவற்றை சார்ஜ் செய்ய 8 மணி நேரம் பிடித்தது.

ஆதெர் எனர்ஜியின் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் லிதியம் அயான் பேட்டரி உள்ளது. இது 50 ஆயிரம் கி.மீ. தூரம் வரை செயலிழக்காது. அத்துடன் இதை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் போதும். அனைத்துக்கும் மேலாக இந்த ஸ்கூட்டர் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதற்காக ஏற்கெனவே உள்ள பேட்டரி ஸ்கூட்டரை விட 20 சதவீதம் எடை குறைவாக உருவாக்கியதும் இதன் சாதக அம்சமாகும்.

இந்த ஸ்கூட்டரின் டேஷ் போர்ட் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது. இதனால் கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் ஜிபிஎஸ் ஆகியன இருக்கும். இரு சக்கர வாகனத்தில் இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பேட்டரி சார்ஜ் செய்வதற்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி மற்றும் நகர சாலைகளில் எந்தெந்த பகுதிகள் குண்டும், குழியுமாக இருக்கும் என் பதைக் காட்டும் வசதி ஆகியவற்றை சேர்த்து அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தருண் கூறினார்.

முதல்கட்டமாக தலைநகர் டெல்லி, சாஃப்ட்வேர் மாநிலமான பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் முன்பதிவு இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. சந்தைக்கு வந்த பிறகு விற்பனை அதிகரிக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

தரமான தயாரிப்புகளுக்கு இந்தியச் சந்தையில் என்றுமே வரவேற்பு இருக்கும். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட் ஸ்கூட்டர் இருக்கும்பட்சத்தில் இனி பலரும் ஸ்மார்ட் ஸ்கூட்டருக்கு மாறலாம்.

எம்.ரமேஷ், ramesh.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

வணிகம்

53 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்