நவீனத்தின் நாயகன்:  ஈலான் மஸ்க் இதுவரை

By எஸ்.எல்.வி.மூர்த்தி

ஈலான் மஸ்க் – இதுவரை நவம்பர் 18, 2019 ‘‘வணிக வீதி” பக்கங்களில் ”நவீனத்தின் நாயகன்”ஈலான் மஸ்க் அரங்கேறினார். மார்ச் 30, 2020,20 வாரங்கள் வெற்றிகரமாக பவனி வந்தவர் கரோனாவினால் ஒரு வருடத்துக்கும் அதிகமாகத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். இப்போது, மறுபடியும் வருகிறார். இந்த இடைவெளியில், தொடரை ஏற்கெனவே தொடர்ந்து படித்தவர்களுக்கு நினைவூட்டவும், புதிய வாசகர்களுக்கு அடித்தளம் அமைக்கவும், கடந்த 20 வாரங்களின் சுருக்கம் இதோ:

பெட்ரோல், டீசல் இல்லாமல் முழுக்க முழுக்க பேட்டரியால் ஓடும் டெஸ்லா கார்கள்; சுமார் 35 சதவிகித அமெரிக்கக் குடும்பங்கள் பயன்படுத்தும் சூரியத் தகடுகள் (Solar Cells); செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற்றம் செய்யும் இலக்கில் கணிசமான முன்னேற்றம் கண்டுவரும் SpaceX நிறுவனம்; பாதாளக் குழாய்கள் போட்டு, 700 மைல் வேகத்தில் பயணிக்கும் ரெயில்களை இயக்க முயலும் ஹைப்பர்லூப் (Hyperloop) நிறுவனம் ஆகிய அத்தனையும் தீர்க்கதரிசி ஈலான் மஸ்க்கின் நனவாகிவரும் கனவுகள். ஜாஷுவா ஹால்டெமன் கனடா நாட்டில் வசித்தார். அவர், மனைவி, மே, கே என்று இரட்டைப் பெண்கள் என அளவான குடும்பம். ஜாஷூவாவுக்குக் கனடாவின் அரசியல் கொள்கை பிடிக்கவில்லை. குடும்பத்தோடு தென்னாப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்.

மே - யின் 22- ஆம் வயதில் எரல் மஸ்க்

என்னும் கட்டுமான என்ஜினியரோடு காதல் திருமணம். ஒன்பதே மாதங்களில், மகன் ஈலான் வரவு. அடுத்து மகன் கிம்பல், மகள் டோஸ்க்கா. ஈலான் வித்தியாசமானவன். தனிமைப் பிரியன். எப்போதும், வயதை மீறிய அறிவியல் விண்வெளிப் பயணக் கதைகள் படித்துக்கொண்டிருப்பான். ஈலானின் ஒன்பதாவது வயதில் பெற்றோர் விவாகரத்து வாங்கிப் பிரிந்தார்கள். அம்மாவோடு வசித்த ஈலானும், தம்பி கிம்பலும் இரண்டே வருடங்களில் அப்பாவுடன் போய்த் தங்கினார்கள்.

அப்பா மகன்களின் தொழில்நுட்ப ஈடுபாட்டை வளர்த்தார். கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார். ஈலான் நிபுணனான். தன் 14 – ஆம் வயதில் ஒரு வீடியோகேம் வடிவமைத்தான். ஒரு பத்திரிகைக்கு 400 டாலருக்கு விற்றான்.எரல் மஸ்க் மனிதன் கொஞ்சம், மிருகம் மீதி. ஈலான் பிற்காலத்தில் சொன்னார், ‘‘அப்பாவுடன் செலவிட்ட என் குழந்தைப் பருவம் மிகச் சோகமானது.” காயப்பட்ட ஈலானும், கிம்பலும் அம்மாவிடம் திரும்பிவந்தார்கள். அன்று முதல் இன்றுவரை, அவர்களுக்கு எரலுடன் தொடர்பே கிடையாது.

ஈலானின் சிறுவயதுக் காலம், தென்னாப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் வெள்ளையர்களால் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். இந்த “இனஒதுக்கீட்டுக் கொள்கை”க்கு (Apartheid) எதிராக நெல்சன் மண்டேலா போராட்டங்கள் தொடங்கினார். ஈலான் படித்த பள்ளி, வெள்ளையர் இனக் குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடம். அவன் தோல் வெள்ளை நிறம் தான் என்றபோதும், யூத இனத்தைச் சேர்ந்தவன். ஹிட்லர் கட்டவிழ்த்து விட்டிருந்தயூதர் வெறுப்பலை தென்னாப்பிரிக்காவில் ஓயவில்லை. சக சிறுவர்கள் ஈலானோடு விளையாட மறுத்தார்கள்.

ஒருநாள் ரத்தம் சிந்தும்படி அடித்து உதைத்தார்கள். இந்தப் பிரச்சனைகள் குறைவான அமெரிக்காவுக்கு மகனை அனுப்ப அவன் அம்மா முடிவெடுத்தார். ஆனால், அங்கே நுழைவுக்குப் பல கட்டுப்பாடுகள். படிப்புச்செலவும் அதிகம். கனடா நாட்டுக்குப் போய் இளங்கலைப் படிப்பை முடித்தால், அங்கிருந்து அமெரிக்கா போவது சுலபம். அத்தோடு, ஈலானின் தாத்தாவின் சொந்தநாடு கனடா. பல தூரத்து உறவினர்கள் அங்கே இருந்தார்கள்.

அதனால், அம்மா ஈலானைக் கனடாவுக்கு அனுப்பினார். தவிர்க்கமுடியாத பல காரணங்களால், ஈலானுக்கு உதவிசெய்வதாக உறுதியளித்திருந்த மாமாத் தாத்தா கனடாவில் இல்லை. அவன் தளரவில்லை. கனடா நாட்டு பஸ்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு சலுகைத் திட்டம் இருந்தது. 100 டாலர்கள் டிக்கெட். நாடு முழுக்க எங்கேயும் போகலாம். 1,900 மைல்கள் தூரத்தில் இருந்த ஸ்விஃப்ட் கரென்ட் என்னும் ஊரிலிருந்த தாத்தாவின் தூரத்து உறவுக்காரர் வீட்டுக்குப் போனான். வரவேற்றுத் தங்கள் வீட்டில் தங்கவைத்தார்.

ஈலான் சொந்தக் காலில் நிற்பவன். வறட்டு கெளரவம் பார்க்காமல் தோட்டக்காரன், மரம் அறுப்பவன், கிடங்குகளில் தானியங்கள் அள்ளிக் கொட்டுபவன், கொதிகலன் சுத்திகரிக்கும் உடல் வருத்தும் வேலை என அனைத்தையும் தயங்காமல் செய்தான். மிகச் சிக்கனமாக வாழ்ந்து பணம் சேமித்தான். அம்மா, தம்பி, தங்கை ஆகியோரைக் கனடாவுக்குத் தன்னோடு அழைத்துக் கொண்டான். கல்லூரியில் சேர்ந்தான்.

இரண்டாம் வருடத்தில், மேற்படிப்புக்காக அமெரிக்கக் கல்லூரிகளுக்கு அப்ளை செய்தான். உலகின் டாப் 10 கல்விநிலையங்களில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உதவித்தொகையோடு அட்மிஷன் கிடைத்தது. அங்கே பிசிக்ஸ்படிப்பும், அதே வளாகத்தில் இருந்த பிரபல வார்ட்டன் ஸ்கூலில் பொருளாதாரப் படிப்பிலும் சேர்ந்தான். கடுமையாக உழைத்தான். சூரிய சக்தி, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய இரு துறைகளிலும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது.

அமெரிக்கக் கல்வித் திட்டத்தின்படி, கோடை விடுமுறையில் தொழிற்சாலையில் நடைமுறைப் பயிற்சிக்குப் போக வேண்டும். அவன் தேர்ந்தெடுத்தவை இரண்டு நிறுவனங்கள்; பகலில், மின்தேக்கிகள் தயாரிக்கும் ‘‘பினாக்கிள் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்”; இரவில், “ராக்கெட் சயின்ஸ் கேம்ஸ்” கம்பெனி. படிப்பு முடிந்தது. கலிபோர்னியா மாநிலத்தில் இருந்த சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதிதான், தொழில்நுட்பத்தின் மையமாக இருந்தது. ஈலான் பென்சில் வேனியாவை விட்டான். சிலிக்கான் பள்ளத்தாக்கில் குடியேறினான்.
தொழிலதிபரை ஒருமையில் விளிக்கக்கூடாது. ஆகவே, இனி, ஈலான், ‘‘அவர்.”

அன்று அதிவேகமாக வளர்ந்துகொண்டிருந்த இன்டர்நெட் தொடர்பான பிசினஸ் தொடங்க முடிவெடுத்தார். அன்று பலரும் இணையதள வியாபாரம் தொடங்கினார்கள். ஈலான் “க்ளோபல் லின்க் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்” என்னும் கம்பெனி தொடங்கி, ‘‘மஞ்சள் பக்கங்கள்” என்னும் தொழிலகங்களின் விவரங்கள் கொண்ட கையேடு தயாரித்து, தனிப்பாதை போட்டார். அவர்களின் வளரும் வாய்ப்புகள் கண்ட ஒரு துணிகர முதலீட்டு நிறுவனம் 10,000 டாலர்கள் முதலீடு செய்தார்கள். அவர்கள் ஆலோசனைப்படி, கம்பெனி பெயரை ‘‘ஜிப் 2” (Zip 2) என்று மாற்றினார்.

கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்த “காம்பாக் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன்” ஜிப் 2 – வை 307 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்கள். ஈலானுக்குக் கிடைத்த பங்கு 22 மில்லியன். 9 வயதிலிருந்து வறுமையில் வாடிய ஈலான், 29 – ஆம் வயதில் மில்லியனைர். இந்தப் பணத்தை அடிப்படையாக வைத்து, சில கூட்டாளிகளோடு சேர்ந்து ‘‘எக்ஸ்டாட்காம்” (X.com) என்னும் நிறுவனம் தொடங்கினார். இன்டர்நெட் வங்கி நடத்தும் இலக்கு. இந்தச் சாதனையைக் கொண்டாடும் வகையில். 2000 –ஆம் ஆண்டில் காதலி ஜெஸ்ட்டின் வில்சனைத் திருமணம் செய்துகொண்டார்.

பிசினஸுக்குப் பலமான அடித்தளம் போட்டுவிட்டோம் என்று மணவாழ்க்கையில் இறங்கிய ஈலானுக்கு வந்தது ஒரு பூகம்ப அதிர்ச்சி. ‘‘கன்ஃபினிட்டி” (Confinity) என்னும் போட்டிக் கம்பெனி. பீட்டர் தீல், மாக்ஸ் லெவிச்சின் ஆகிய இருவரின் கூட்டு முயற்சி. போட்டி நிலை தொடர்ந்தால், இரண்டு கம்பெனிகளின் ஆட்டமும் க்ளோஸ் என்று மூவரும் உணர்ந்தார்கள். இணைந்தார்கள். துணிகர முதலீட்டார்களிடமிருந்து பணம் கொட்டியது. இப்போது பங்காளிகளுக்குள் சண்டை. தீல், லெவிச்சின் இருவரும் ஈலானிடமிருந்து நிர்வாகப் பொறுப்புக்களைப் பறித்தார்கள்.

ஈலான் தன் இன்னொரு கனவான விண்வெளி ஆராய்ச்சியைத் துரத்த ஆரம்பித்தார். அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் விண்வெளி ஆராய்ச்சியின் மையமாக இருந்தது. அங்கே வீடு மாற்றினார். 30 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்பும் கம்பெனி தொடங்கப்போவதாகச் சொன்னார். அவர் பகல்கனவு காண்பதாகக் கேலி செய்தார்கள். ஏனென்றால், அன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் மட்டுமே, கோடிக்கோடியாகச் செலவிட்டு ராக்கெட் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

ஈலான் கண்டது பகல் கனவல்ல, அவர் மனதில் இருந்து தெளிவான திட்டம். பொருளாதார நெருக்கடியால் ரஷ்யா தன் ராக்கெட்களை மலிவு விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது. ஈலான் ரஷ்யா போனார். மூன்று ராக்கெட்கள் 24 மில்லியனுக்குத் தருவதாகச் சொன்னார்கள். மலிவுவிலைதான். ஈலான் பாதி விலைக்குக் கேட்டார். பேரம் படியவில்லை. இது முரட்டுப் பிடிவாதமல்ல, 7 மில்லியனில் தானே ராக்கெட் தயாரிக்கலாம் என்று அவர் போட்டிருந்த கணக்கு. இதற்காக, “ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜீஸ்” (Space Exploration Technologies) கம்பெனி தொடங்கினார். சுருக்கமாக ஸ்பேஸ் எக்ஸ்.

இந்தக் காலகட்டத்தில் X.com கம்பெனியில் ஒரு முக்கிய மாற்றம். பெயர்‘‘பே பால்” (PayPal) என்று மாறிவிட்டது. டாட்காம் என்று அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இன்டர்நெட் கம்பெனிகள் திவாலாயின. X.com –க்குப் பணம் தேவைப்பட்டது. தருவார் யாருமில்லை. பே பால் – ஐக் காப்பாற்ற வந்தார் ஒரு மீட்பர் – “ஈ பே” (e-Bay) கம்பெனி. 1,500 மில்லியன் தந்தார்கள். ஈலானுக்குக் கிடைத்த பங்கு 250 மில்லியன் டாலர்கள். திருமகள் கோடிக்கோடியாக ஈலான் கூரையைப் பிய்த்துக் கொட்டிக் கொண்டிருந்தபோது, காலதேவன் அவர் வீட்டில் மரணக் கயிற்றை வீசிக் கொண்டிருந்தான்.

அடுத்த வாரம் – 21 – ஆம் அத்தியாயம்

slvmoorthy@gmail.co

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஓடிடி களம்

3 mins ago

விளையாட்டு

18 mins ago

சினிமா

20 mins ago

உலகம்

34 mins ago

விளையாட்டு

41 mins ago

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்