குறள் இனிது: கோபத்தை அடக்கணும் குமாரு!

By சோம.வீரப்பன்

ஆத்திச்சூடி ஞாபகம் இருக்கிறதா? சரி, அதன் முதல் இரண்டு வரிகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்........ ‘அறம் செய விரும்பு’ என ஆரம்பித்து உடனே ‘ஆறுவது சினம்’ என்பாள் ஒளவை! ஏனெனில் இந்த கோபம் இருக்கிறதே, அது மிகப் பொல்லாதது! கோபம் வந்தால் யாருக்கும் ஒரு படபடப்பு, ஆற்றாமை வந்து விடுகிறது. அது வார்த்தைகளாகவோ, செயலாகவோ வெடித்தும் விடுகிறது. விஞ்ஞானிகள் கூட ஒருவர் கோபம் கொள்ளும்போது மூளை சிந்தித்து முடிவெடுக்கும் திறனை இழந்து விடுவதாகக் கூறுகின்றனர்.

தம்மைவிட பலம் மிகுந்த பகைவர்கள் தம்மைக் கோபம் கொள்ளச் செய்தால் புத்திசாலிகள் அந்த கோபத்தைச் சட்டென வெளிக்காட்டாமல், தமக்கு ஏற்ற காலம் வரும்வரை அதை மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள் என்கிறார் வள்ளுவர்!

நமது அன்றாட வாழ்க்கையில் நமது கோபத்தைக் கிளறும் சந்தர்ப்பங்கள் ஒன்றா, இரண்டா? காலையில் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வண்டிச்சாவியை இடம் மாற்றி வைத்த மகன் மீது தொடங்கி, சட்னியில் சிறிது உப்பு கூடி விட்டதற்கு மனைவியிடம் தொடர்ந்து, சில்லரை கொடுக்காத பேருந்து நடத்துனரிடம் அதிகமாகி, வேலை செய்யாத அலுவலக லிஃப்டில் உச்சமடைந்து, ‘தாமதம் ஏன்?’ எனக் கேட்கும் மேலாளரிடம் போய் அது வெடித்தால் என்ன ஆகும்?

எனது நண்பர் ஒருவர் ஒரு தனியார் விற்பனை நிறுவனம் ஒன்றின் சென்னைக் கோட்ட மேலாளர். அரையாண்டு ஆய்வுக் கூட்டத்திற்காக மும்பை தலைமையகம் சென்றிருந்தார். 25% வளர்ச்சி காண்பித்து தேசியளவில் அந்நிறுவனத்தின் நான்காவது இடத்திலிருந்தார். கடைசி ஆள் 10 சதவீத வளர்ச்சியுடன் 20வது இடத்திலிருந்தார். எனவே இவர் பேச எழுந்ததும் தாம் சாதித்தவைகளையும் அதற்கான முயற்சிகளையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், அவரது போறாத காலம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அவர் இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று கூறியதுடன் ‘முடிந்தால் இங்கு வேலை செய், இல்லாவிட்டால் இடத்தைக் காலிசெய்’ என்கிற ரீதியில் பேசிவிட்டார். பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை, திட்டிவிட்டாரே என நண்பருக்குக் கோபமும், ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்தன.

ஆனால் நாடெங்கிலுமிருந்து வந்திருந்த பல பிரதிநிதிகள் முன்னிலையில் முதன்மை அதிகாரியை எதிர்ப்பது எப்படி? எது சொன்னாலும் எடுபடாது! உயரதிகாரியின் அன்றைய போக்கு தவறாகவே இருந்தாலும் அவருடன் மோதுவதற்கு இது சரியான சந்தர்ப்பம் அல்ல எனப் பொறுத்துக் கொண்டார். ‘சரி சார், இன்னும் முயற்சி செய்கிறேன்’ என்று கூறி அமர்ந்து விட்டார்.

ஆனால் பின்னர் உணவு இடைவேளையில் உயரதிகாரியைத் தனியாகச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்ததோடு தனது மனவருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். இச்செயலால் மகிழ்ந்த முதன்மை அதிகாரி அன்று மாலையே நமது நண்பரை கூட்டத்தில் பாராட்டி பேசினார் என்பது பின்னர் நடந்த நல்ல விஷயம்!

சூழ்நிலை சரியில்லை என்றால் கோபத்தை அடக்குவது தானே கெட்டிக்காரத்தனம்!

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் -குறள் 487

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்