எண்ணித் துணிக: மார்க்கெட்டரின் தகுதி எது?

By செய்திப்பிரிவு

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

மார்க்கெட்டிங் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மார்க்கெட்டருக்குத் தேவையான குணங்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம். மார்க்கெட்டிங் என்பது அநியாயத்துக்கு ஈசி என்று தொழில் தொடங்குபவர்கள் பலர் எண்ணுகின்றனர். அதனால்தானோ என்னவோ தங்களை மார்க்கெட்டர் என்று விபரீதமாக கற்பனை செய்துகொள்கின்றனர்.

பிராண்டுக்கு பெயர் வைப்பது முதல் பாக்கேஜிங் வடிவமைப்பது வரை, பிராண்ட் லோகோ டிசைன் செய்வது முதல் விளம்பரம் தயாரிப்பது வரை அனைத்தையும் தாங்களே செய்து தங்களையும் படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களையும் பாடாய் படுத்துகின்றனர்.

சினிமா பார்த்துவிட்டு பார்ப்பவர்களிடம் படத்துல காமெடி டிராக்கை குறைச்சு, கடைசி பாட்டு சீன கட்பண்ணி, வில்லன் கேரக்டர கொஞ்சம் தூக்கலாக்கி, க்ளைமாக்ஸ சுருக்கியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும் என்று `கே. பாலச்சந்தர்’, `மகேந்திரன்’ லெவலுக்கு தங்களை நினைத்து கொள்பவர்கள் போல் பாவப்பட்டு போயிருக்கிறது மார்க்கெட்டிங். ஸ்டார்ட் அப் தொடங்குபவர்கள் திறமையான ஒருவரை மார்க்கெட்டிங் கிகுக்கென பிரத்யேகமாக நியமிப்பது தான் உசிதம் என்றாலும் பலர் அந்த பொறுப்பை தானே எடுத்துக்கொள்கின்றனர்.

எல்லோரும் செய்ய மார்க்கெட்டிங் லேசுப்பட்டதும் அல்ல, எல்லாவற்றையும் தானே பார்க்க அவ்வளவு சல்லிசானதும் அல்ல. பெரிய கம்பெனிகள் பட்டு தெரிந்து கொண்டதை ஸ்டார்ட் அப்ஸ் படாமல் தெரிந்துகொள்வது பயன் தரும். மார்க்கெட்டிங் என்னும் வண்டியை தானாய் ஓட்டினாலும், தேர்ந்த ஒருவரை நியமித்து அவரை கொண்டு செலுத்தினாலும் மார்க்கெட்டருக்கு சில அடிப்படை தகுதிகள் அவசியம். மார்க்கெட்டர் ஆவதற்கு எம்பிஏ படிப்பு அவசியமில்லை. படித்திருந்தால் புண்ணியம். மற்ற தகுதிகளை பார்ப்போம்.

முதலில் நீங்கள் ஒரு வாடிக்கையாளர்

நாம் மனிதனாக இருக்கிறோமா என்று தெரியாது. ஆனால் நாம் வாடிக்கையாளர்களாக இருக்கிறோம். சதா எதையாவது வாங்கிக்கொண்டே இருக்கிறோம். அல்லது வாங்கிக்கட்டிக் கொண்டே இருக்கிறோம். ஆக, முதலில் நாம் வாடிக்கையாளர், அடுத்துதான் மார்க்கெட்டர். புத்தகம் எழுத நிறைய படிக்க வேண்டும். இசை கலைஞன் ஆக இசை ரசிகனாக இருக்க வேண்டும். மார்க்கெட்டர் ஆக நல்ல வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

‘வாடிக்கையாளரை முட்டாள் என்று நினைக்காதே அவள் உன் மனைவி’ என்றார் விளம்பர மேதை ‘டேவிட் ஒகில்வி’. உங்கள் மனைவியே வாடிக்கையாளர் என்பதைத்தான் அப்படி கூறினார். வாடிக்கையாளராய் உங்கள் அனுபவங்களை அலசி ஆராய்ந்து அதிலிருந்து மார்க்கெட்டிங் பாடங்களைப் பெறுங்கள். அந்தப் பாடங்கள்தான் உங்களை நல்ல மார்க்கெட்டராக்கும் உரங்கள்.

மக்களைப் பாருங்கள், படியுங்கள், புரிந்துகொள்ளுங்கள்!

மார்க்கெட்டருக்கு இருக்கவேண்டிய அதிஅவசிய குணம் இது. வாடிக்கையாளரை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து அவரை ஆதி முதல் அந்தம் வரை சப்ஜாடாய் புரிந்துகொள்ளாதவன் மார்க்கெட்டரே இல்லை. வாடிக்கையாளரோடு நிறைய பேசுங்கள். இதற்கு முதல் படி மக்களை நேசிக்கிறீர்களோ இல்லையோ, அவர்களை நிறைய பாருங்கள், படியுங்கள், புரிந்து
கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரருடன் மாடியில் நின்று பேசுவது அல்ல நான் சொல்வது.

கிடைத்த கேப்பில் பஸ்ஸில் பயணம் செய்யுங்கள். பக்கத்தில் இருப்பவர்களோடு பேச்சு கொடுங்கள். டாக்ஸியில், ஆட்டோவில் பயணம் செய்யும்போது டிரைவரோடு அவர் வாழ்க்கையை பற்றி பேசுங்கள். அவருக்குப் பிடித்த பிடிக்காத விளம்பரம் பற்றி கேளுங்கள். ஒவ்வொருவரின் பதிலும் உங்கள் மார்க்கெட்டிங் அறிவை உளி போல் செதுக்கும் என்பதை உணருங்கள். வாடிக்கையாளர் வாயை கிண்டினால் தான் தகவல் உப்புமா கிடைக்கும்!

செஸ் ஆடுங்கள், எந்நேரமும் செஸ் போர்டும் கையுமாய் அலையச் சொல்லவில்லை. செஸ் ஆடும்போது எதிராளி மூவ் செய்யட்டும், அதற்கேற்ப பதில் ஆட்டம் ஆடுவது எப்படி என்று சிந்திக்கிறேன் என்பவர் சிறப்பாக சம்பவம் செய்யப்பட்டு சீக்கிரமே செக்மேட் ஆவார். எதிராளி மூவை அவர் அதை நகர்த்துவதற்கு முன்னேயே கணித்து அதற்கேற்ப திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி ஆடுபவரே செஸ் கிங். மார்க்கெட்டிங்கும் சாட்சாத் செஸ் போல். மார்க்கெட் போக்கையும் போட்டியாளர் உத்தியையும் அவை நடக்குமுன் கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். லேசில் வராது. தினம் ஆட வேண்டும். அதிலிருந்து தினம் கற்க வேண்டும். செஸ் ஆட்டதிலாவது ஒருவரோடு ஆடுகிறீர்கள். மார்க்கெட்டில் ஒரே சமயத்தில் பல எதிராளிகள், பல போட்டியாளர்கள்.

ஒவ்வொருவரின் மூவையும் அவர் அதை எடுப்பதற்கு முன் பதிலடிதர தயாராய் திட்டம் தீட்டி ஆடும் கில்லாடி ஆட்டம் மார்க்கெட்டிங். மார்க்கெட்டர் ஆக ஆசையிருப்பவர்களுக்கு அந்த சவால் பிடித்திருக்க வேண்டும். 360 டிகிரியில் கண்களைச் சுழற்றி வருமுன் காக்கும் விவேகம் வேண்டும்.

கையில் காசு வாயில் தோசை போன்ற விளையாட்டல்ல மார்க்கெட்டிங். கொக்கி போட்டு வாடிக்கையாளரை இழுப்பதல்ல இந்த இயல். இதை செய்ய வேண்டும்தான். ஆனால், இதை மட்டுமே செய்துகொண்டிருந்தால் இன்றைய வாடிக்கையாளரை நேற்றே உங்கள் போட்டியாளர் கொக்கி போட்டுத் தூக்கி இருப்பார். நாளை வரவேண்டிய வாடிக்கையாளருக்கு இன்று வலை விரிக்கும் ஆட்டம் மார்க்கெட்டிங். ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.

‘தி இந்து’ பத்திரிகை விளம்பரம் செய்வதில்லை. அதற்காக மார்க்கெட்டிங் விளையாட்டு விளையாடாமல் இல்லை. ஊரெங்கும் சென்று பள்ளிகளில் ‘யங் வர்ல்ட்’ ஓவிய போட்டி நடத்துகிறது. இதனால் குழந்தைகள் இந்து படிப்பார்கள் என்பதற்கல்ல. பிஞ்சு உள்ளத்தில் ‘தி இந்து’ என்ற பெயரை விதைத்தால், அது குழந்தை மனதில் வளர்ந்து விருட்சமாகி அக்குழந்தை பெரியவனாகி தனக்கென்று பேப்பர் தேடும் போது இந்துவே முதல் சாய்ஸ் ஆகும் என்பதற்காக. ஆக, மார்க்கெட்டருக்கு அவசரம் தேவை, அதை பொறுமையாய் செய்யும் திறனோடு!

இவ்வளவுதானா தகுதிகள் என்று அசால்ட்டாய் இருக்காதீர்கள். மார்க்கெட்டருக்கு தேவையான சில தகுதிகளை இந்த பத்திக்கு பத்தும் வகையில் மட்டும் பார்த்தோம். இப்படியெல்லாம் சொல்வதால் மார்க்கெட்டிங் பெரிய கம்பசூத்திரமாக்கும் என்று கூறவில்லை. மார்க்கெட்டிங்கை கற்பது ரொம்பவே ஈசி. அதை கரைத்துக்குடிக்கத்தான் ஒரு ஆயுள் காலம் தேவைப்படுகிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

25 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்