முருகப்பா குழுமத்தில் வீசும் சூறாவளி!

By செய்திப்பிரிவு

முருகப்பா குழுமம் – தென்னிந்தியாவில் பாரம்பரியம் மிக்க நிறுவனமாகும். குடும்பத் தொழில் பெரும்பாலும் மூன்றாவது தலைமுறை வரை நீடிக்காது என்ற வழக்கத்தை முற்றிலுமாக தகர்த்து ஐந்தாவது தலைமுறையினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

இக்குழுமத்தில் இப்போது சூறாவளி வீசத் தொடங்கியுள்ளது. குடும்ப வாரிசுகளில் ஒருவரே பாலின பேதம் பார்க்கப்படுவதாக புகார் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் குழுவில் தனக்கு இடம் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான எம்.வி. முருகப்பனின் மூத்த மகள்வள்ளி அருணாச்சலம்.

நியூயார்க்கில் குடியேறி 23 ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனத்தில் நியூக்ளியர் விஞ்ஞானியாக பணியாற்றியவர் இவர். முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம்தான் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (ஏஐஎல்). இந்நிறுவனத்தில் 8.15 சதவீத பங்குகள் இவருக்கும், இவரது சகோதரிவெள்ளச்சி முருகப்பன் மற்றும் இவரது தாயார் வள்ளி முருகப்பனுக்கும் உள்ளது.

2017-ம் ஆண்டு தனது தந்தை எம்.வி. முருகப்பன் காலமான பிறகு அம்பாடி இயக்குநர் குழுவில் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று தான் வைத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்.

இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரில் ஆறு பேர் தனது குடும்ப உறுப்பினர். ஆனால் இவர்களே இயக்குநர் குழுவில்இடம்பெற தனக்கு அனுபவம் இல்லை என்று இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். பார்ச்சூன் 500நிறுவனங்கள் ஒன்றில் பணியாற்றிய தனக்குஅனுபவம் இல்லை என்று கூறுவது வியப்பளிப்பதாக குறிப்பிடுகிறார்.

அதேசமயம் தற்போது இயக்குநர் குழுவில் உள்ள உறவினர்கள் இளம் வயதிலேயே இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. அவர்களே இடம்பெறும்போது, பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிய தனக்கு இடமளிக்க மறுப்பது பாலின பேதத்தைத்தான் காட்டுகிறது என்கிறார்.

தான் மட்டுமல்ல தனது சகோதரியும் உயர்படிப்பு படித்தவர்தான். தங்களது அனுபவத்தை, தங்களது தந்தை வளர்த்தெடுத்த நிறுவனத்தில் பகிர்ந்து மேலும் வளர்க்கலாம் என்ற ஆர்வத்துக்கு உறவினர்களே முட்டுக்கட்டை போடுவது வியப்பளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு உள்ள பங்குகளுக்கு உரிய நேரத்தில் டிவிடெண்ட் உள்ளிட்டவை கிடைத்துவிடுகின்றன. அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் இயக்குநர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் மறுக்கப்படுவது நியாயமற்றது என்கிறார்.

120 ஆண்டுகளாக செயல்படும் இக்குழுமத்தின் மொத்த மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடியாகும்.ஏறக்குறைய 30 நிறுவனங்கள் இக்குழுமத்தின் கீழ் செயல்படுகின்றன. இவற்றில் இஐடி பாரி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், கோரமாண்டல் ஃபெர்டிலைசர்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டிஐ பைனான்சியல் ஹோல்டிங்ஸ், சாந்தி கியர்ஸ், சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், கார்போரண்டம் யுனிவர்சல் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை.

தென்னிந்தியாவில் தொழில்துறைக்கு மிகவும் பரிச்சயமான நகரத்தார் சமூகத்தால் தொடங்கப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் கோலோச்சும் நிறுவனமாக வளர்ந்துள்ள முருகப்பா குழுமத்தில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிகின்றனர். தான் முன்வைத்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் சட்ட ரீதியாக இதை அணுகப்போவதாக வள்ளி அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத் தொழில் சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு இடமில்லை என்பது பத்தாம் பசலித்தனமானதாகத்தான் தெரிகிறது. முருகப்பா குழுமம் ஆணாதிக்க மனோபாவத்தில் செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தில் இப்போது வள்ளி அருணாச்சலம் ரூபத்தில் சூறாவளி வீசத் தொடங்கியுள்ளது.

திறமைக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும் என்று தொழில் வட்டாரத்தில் முருகப்பா குழுமத்துக்கு பெயர் உண்டு. இயக்குநர் குழுவிலும் அது பிரதிபலிக்க வேண்டுமெனில் வள்ளி அருணாச்சலத்துக்கு இடமளிக்கவேண்டும். அவர் வசம் உள்ள பங்குகளுக்கு உரிய விலை அளித்து அவரை வெளியேற்றி இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயலலாம். அதையே அவரும் ஏற்று பிரச்சினை செய்ய விரும்பாமல் ஒதுங்கிப் போகலாம். ஆனால், பாலின பேதம் முருகப்பா குழுமுத்தின் அங்கம் என்றாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்