விமானம் இல்லா விமான நிலையம்!

By செய்திப்பிரிவு

ஆள் நடமாட்டம் இல்லாத பிராந்தியத்தில் அமைந்துள்ள பழங்கால பங்களா அல்லது பாழடைந்த மண்டபங்களை பேய் உலாவும் இடம் என்போம். அறிவியல் முன்னேற்றமடைந்த இந்தக் காலத்திலும் பேய் உலாவும் இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுவும் ஆயிரக் கணக்கில் பணத்தை முழுங்கிவிட்டு அமைதியாக இருக்கும் இந்த கட்டிடங்களைத்தான் பேய் பங்களா என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

இந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெய்சால்மர் சர்வதேச விமான நிலையம்.

இந்த விமான நிலையம் கட்டுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது. செலவிடப்பட்ட தொகையோ சுமார் ரூ. 1,100 கோடி. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 3 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 180 பேர் பயணிக்கும் ஜெட் விமானங்கள் மூன்று இறங்குவதற்கான தளங்களும் (பே) இங்குள்ளன.

ஆனால் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டு இன்று வரை ஒரு விமானம் கூட இந்த விமான நிலையத்துக்கு வரவில்லை என்பதுதான் உண்மை நிலை. 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசு 8 விமான நிலையங்களில் ரூ.3,200 கோடி வரை செலவிட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் ஒன்று கூட வழக்கமான சேவை அளிக்கும் விமானங்கள் (ஷெட்யூல்டு) எதுவும் வந்து செல்லவில்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.

இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான நிலை யங்களில் பாதிக்கும் மேலானவற்றை ஷெட்யூல்டு விமான சேவை எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் பரிதாப நிலையாக உள்ளது.

43 உள்நாட்டு விமான நிலையங்களில் மட்டும்தான் விமான சேவை நடை பெறுகிறது. மற்ற 59 விமான நிலையங்களில் எப்போதாவது தனியார் விமானங்கள் தங்கள் உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

பொருளாதார வளர்ச்சியின் அடையாளங்களாக கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் அமைகின்றன. அந்த வகையில் வளர்ச்சியடைந்த நாடாக பறைசாற்றிக்கொள்ள விமான நிலையங்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கமும் தவறில்லை.

ஆனால் அதிக முதலீடு செய்து உருவாக்கும் விமான நிலையங்கள் இப்படி பயனின்றி போனால் என்ன பயன்?

ஜெய்சால்மார் விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளைக் கையாளும் கன்வேயர் பெல்ட் பயன்படுத் தப்படாமலே இருப்பதால் அதன் மேல் பகுதியில் புறாக்கள் கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளனவாம்.

விமான நிலையங்களை கட்டிவிட்டால் போதும் என்று அரசு நினைக்கிறது. அல்லது விமான நிலையங்களை உருவாக்கினாலே நாங்கள் விமான சேவையைத் தொடங்கி விடுவோம் என்று நினைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்வியெழுப்புகிறார் ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சஞ்ஜீவ் கபூர்.

மைசூருக்கு விமான சேவையை நடத்தி வந்த இந்நிறுவனம் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு மைசூருக்கான சேவையை ரத்து செய்து விட்டதாகக் கூறுகிறார் இவர்.

இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில் நான்கு விமான நிலையங்கள் கட்ட ரூ. 2,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். செப்டம்பர் 11-ம் தேதி சண்டீகரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா நடைபெற உள்ளது. பொருளாதாரத்தில் வெள்ளை யானை என்ற பதமும் ஒன்றுண்டு. அதாவது நிறுவனம் செயல்படும் ஆனால் லாபமீட்டாது.

இதைப் போல இப்போது கோடிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட விமான நிலையம் விமானங்களே வராத விமான நிலையமாக காட்சியளிக்கிறது.

எந்த ஒரு திட்டத்தைத் தொடங்கும் முன்பு அதற்கான நடைமுறை சாத்தியம், லாப, நஷ்ட கணக்கு பார்க்காமல், அரசியல் ஆதாயத்தை மட்டுமே பார்த்தால் இதைப் போன்ற வெள்ளை யானைகளும், பேய் உலவும் விமான நிலையங்களும் அதிகரிக்கத்தான் செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

52 mins ago

வாழ்வியல்

41 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்