ஜொலிக்காத வைர வியாபாரம்

By செய்திப்பிரிவு

தங்க நகை வர்த்தகர் என்பதை விட வைர வியாபாரி என்றால் ஒரு படி மேல்தான். ஒரு கிராம் தங்கத்தை எல்லோராலும் வாங்க முடியும். ஆனால் ஒரு கேரட் வைரத்தை வாங்க சற்று வசதியிருப்பவர்களுக்குத்தான் சாத்தியமாகும். இதனாலேயே வைரத் தொழிலும் வைரத்தைப் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இந்தியாவில் வைரத் தொழில் மிகவும் சிக்கலான கால கட்டத்தில் உள்ளது. பட்டை தீட்டாத வைரத்தின் (கச்சா வைரம்) வரவு அதிகமாக இருந்தாலும், பட்டை தீட்டிய வைரத்துக்கான தேவை குறைந்துள்ளதே இத்தொழிலின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

வைரத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் சீனா உள்ளிட்ட மேற்கு ஆசியா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக கிராக்கி. இதனால் இந்தியாவிலிருந்து கச்சா வைரம் பட்டை தீட்டப்பட்டு வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை இந்தத் தொழில் சிறப்பாக இருந்ததால், இத்துறையிலிருந்தவர்களும் மிகுந்த ஜொலிப்போடு வலம் வந்தனர்.

சீனா உள்ளிட்ட நாடுகளில் சிக்கன நடவடிக்கை, பொருளாதார தேக்க நிலை காரணமாக வைரத்தின் தேவை குறைந்தது. இதனால் இப்போது உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்தியாவில் வைர நகை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் லாப அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஜெம் அண்ட் ஜூவல்லரி அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் பங்கஜ் பரேக். கச்சா வைரத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் விற்பனை குறைந்து வருகிறது.

மேலும் இங்கிருந்து கச்சா வைரத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் குறைந்துள்ளது. ஏனெனில் கச்சா வைர ஏற்றுமதிக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் சலுகைக் காலம் 180 நாட்களிலிருந்து 60 நாட்களாகக் குறைந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆண்ட்வெர்ப் வைர வங்கி தனது செயல்பாட்டை கடந்த ஜூன் 30-ம் தேதியோடு மூடிவிட்டது. ஏபிஎன் ஆம்ரோ வங்கி வைரம் சார்ந்த தொழிலுக்கு கடன் அளிப்பதையும் படிப்படியாகக் குறைத்து வருகிறது.

வெளிநாட்டிலிருந்து கச்சா வைரத்தை இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்வதானது குறுகிய காலத்துக்கு வேண்டுமானால் பலனளிக்கும். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் வைர வர்த்தகம் முற்றிலுமாக முடங்கிப் போகும் என்று இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வங்கிகள் வைரம் சார்ந்த தொழிலுக்குக் கடன் அளிப்பது குறைந்து வருவதால் இத்துறையில் பணப் புழக்கமும் குறைந்துவிட்டது. ஏற்றுமதியாளர்களுக்கு அவர்கள் ஆர்டர் வைத்திருந்தாலும் பணம் பெறுவதற்கு 2 மாதம் வரை கால தாமதம் ஆவதாக இத்துறையினர் புலம்புகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து கச்சா வைரம் இறக்குமதி செய்வது கடந்த ஏப்ரல் முதல் மே வரையான காலத்தில் 24 சதவீதம் வரை சரிந்துவிட்டது. இறக்குமதியான கச்சா வைரத்தின் மதிப்பு 26 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 35 கோடி டாலர் மதிப்பிலான கச்சா வைரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை இத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் வைர ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 10 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தம் ஏற்றுமதியான வைரத்தின் மதிப்பு 337 கோடி டாலராகும்.

கடந்த நிதி ஆண்டில் (2014-15) இந்தியா மொத்தம் 1,600 கோடி டாலர் மதிப்பிலான கச்சா வைரத்தை இறக்குமதி செய்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மதிப்பை 2,300 கோடி டாலராகும். வைர வர்த்தகம் பழையபடி ஜொலிக்குமா என்று காத்திருக்கின்றனர் வைர நகை வர்த்தகர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்