முதல் செலவு: முதலீடுகளும் டெஸ்ட் மேட்ச்தான்

By ஸ்ரீகாந்த் மீனாட்சி

திரைப்படத் துறையின் வர்த்த கத்திற்கும் நிதிச்சந்தைகளின் வர்த்தகத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒரு படம் வெளிவந்த பிறகு அது ஏன் ஓடியது, அல்லது ஓடவில்லை என்பது பற்றி நிறைய கருத்துகள் வரும். அவற்றில் பல சரியானதாகவும் இருக்கும். ஆனால் ஒரு படம் வெளி வருவதற்கு முன்பு செய்யப்படும் ஊகங்கள் பெரும்பாலும் தவறாக இருக்கும். ஒரு படம் ஓடுமா ஓடாதா, மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா, நிராகரிக்கப்படுமா என்று முன்னமே தெரிந்து விட்டால் எத்தனை வசதியாக இருக்கும்? ஆனால் அது எப்பேற்பட்ட நிபுணருக்கும் சாத்தியமே இல்லை என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

வெறும் ஊகம்

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களும் அது போலத்தான். சந்தை மூடியதும் அந்த நாளில் ஏன் பங்குகள் உயர்ந்தன அல்லது சரிந்தன என்பது பற்றி ஓரளவுக்குச் சரியாக சொல்ல முடியும். ஆனால் நாளை அதே சந்தை எப்படி நகரும் என்று கேட்டால் வரும் பதில்கள், அவை எத்தனை உறுதியுடன் சொல்லப்பட்டாலும், அவை வெறும் ஊகங்கள் மட்டுமே.

ஒரு தேர்ந்த ஆலோசகரிடம் நல்ல வாடிக்கையாளராக இருப்பது எப்படி என்பதைத் தொடர்ந்து பார்க்கையில் இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அனுபவ முதிர்ச்சியுள்ள ஆலோசகர், ஒரு சில கேள்விகளுக்கு, ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லத் தயங்க மாட்டார்.

முதலீட்டாளர்கள் பல சமயம் மிகத் துல்லியமான கணிப்புகளையும் கருத்துகளையும் எதிர்பார்த்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, ‘சார், கையில் கொஞ்சம் பணம் இருக்கு; ஒரு மூணு வருஷத்துக்கு முதலீடு செய்யலாம்னு பாக்கறேன். இப்பவே பண்ணலாமா, இல்லை இன்னொரு ஒரு வாரம், பத்து நாள் கழிச்சு செய்யலாமா?’ என்பது அடிக்கடிக் கேட்கப்படும் கேள்வி வகை. இன்னொன்று, ‘என்ன சார் மார்க்கெட் நல்லா மேல போயிட்டிருக்கு, பணத்தை வெளியே எடுத்துடலாமா, இல்ல இன்னும் கொஞ்சம் மேல போகுமா?’

இந்த இரண்டு வகைக் கேள்வி களுமே பதில் ‘எனக்குத் தெரியாது’ என்று தான் ஆரம்பிக்கும். ஒரு நல்ல ஆலோசகர் இது போன்ற விஷயங்களை தொலைநோக்குப் பார்வையில் பொருட் படுத்தப்பட வேண்டியவை அல்ல என்று விளக்குவார்.

டெஸ்ட் பந்தயம்

ஏனெனில் அதுதான் உண்மை. திட்டமிட்ட முதலீடுகள் என்பது ஒரு டெஸ்ட் பந்தயம் போல; அதை டி20 பந்தயம் போல ஆட முயற்சி செய்யக் கூடாது. உங்கள் ஆலோசகர் உங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது போல ஏதேனும் ஒரு காரணம் சொல்லித் திருப்திபடுத்தி விடலாம். அப்படிச் செய்தால் அது அவரது விற்பனைத் திறத்தை மட்டுமே குறிக்கும். ஒரு நல்ல ஆலோசகர் உங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் ஒரு ஆசிரியராகவும் இருப்பார். அப்படி இருக்க அவருக்கு அவகாசமும் வாய்ப்பும் நீங்கள் அளிப்பீர்களாயின் அதுவே உங்களுக்கும் நல்லது; உங்கள் நிதி வளத்திற்கும் நல்லது.

நாயும் மனிதனும்

பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை குறித்து ஒரு உவமை சொல்வார்கள். ஒரு மனிதன் ஒரு நாயை நடை பயணத்தில் அழைத்துச் செல்வது போலத்தான் பொருளாதாரமும் பங்குச் சந்தையும் என்று சொல்லலாம். ஒரு மனிதன் அப்படி நடந்து செல்கையில் நாய் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருக்கும். ஆனால் நடத்திச் செல்லும் மனிதனோ நேரே முன்னேறி நடந்து கொண்டிருப்பான்.

பொருளாதாரம் என்பது அந்த மனிதனைப் போல் - முன்னேறிக் கொண்டே இருப்பது; பங்குச் சந்தை அந்த நாயைப் போல - முன்னும் பின்னும் போய்க் கொண்டிருக்கும். ஆனால், கடைசியில் பொருளாதாரம் இழுக்கும் இழுப்பில் பங்குச் சந்தையும் முன்னே சென்று தான் ஆக வேண்டும், அந்த நாயைப் போல.

இந்த உண்மை உங்கள் ஆலோசகருக்குத் தெரியும். ஆகையால் சந்தையின் அன்றாட சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டார். உங்களையும் அஞ்சாதவாறு பார்த்துக் கொள்வார் - அவரது அறிவுரைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால்.

அதற்காக நீங்கள் பொருளாதாரச் செய்திகளை அறிந்து கொள்ளவே வேண்டாம் என்றோ, அது குறித்து உங்கள் ஆலோசகரிடம் கேட்கக் கூடாது என்றோ சொல்ல வரவில்லை. இத்தகைய உரையாடல்கள் உங்களுக்கு பொருளாதாரம் மற்றும் சந்தைகள் பற்றிய நல்ல புரிதல்களை உருவாக்கும்; உங்கள் ஆலோசகருக்கும் உங்கள் கண்ணோட்டம் குறித்து அறிய உதவும். துல்லியமான கணிப்புகள், மற்றும் எதிர்காலம் குறித்த தீர்மானமான கருத்துக்களை எதிர்பார்த்து உங்கள் ஆலோசகரை நாடாதீர்கள். ஏதாவது ஒரு விதத்தில் அது உங்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.

விளம்பரங்கள் பயன் தராது

முதலீட்டாளர்கள் அடிக்கடி செய்யும் இன்னொரு விஷயம், விளம்பரங்களால் கவரப்பட்டு தங்கள் ஆலோசகரிடம் சென்று ஒரு குறிப்பிட்ட சாதனத்தில் முதலீடு செய்யலாமா என்று வினவுவது. இப்படிக் கேட்பதில் தவறேதுவுமில்லை. ஆனால், என்னுடைய அனுபவத்தில் மிக அதிகமாக விளம்பரம் செய்யப்படும் முதலீட்டுச் சாதனங்கள் பெரும்பான்மையும் முதலீட்டாளர்களுக்கு நல்லவையாக இருப்பதில்லை. இது ஒரு நல்ல ஆலோசகருக்கும் தெரிந்திருக்கும். ஆதலால், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் வழக்கமான பதில், ‘இது உங்களுக்குத் தேவையில்லை’ அல்லது, ‘இது உங்களுக்கு சரி வராது' என்பதாகவே இருக்கும்.

சிக்க வேண்டாம்

உங்களுக்கு நல்ல முதலீடுகளைப் பரிந்துரைப்பது மட்டுமல்ல; உங்களை மோசமான முதலீடுகளிலிருந்து பாதுகாப்பதும் ஒரு நல்ல ஆலோசகரின் பணி. ஆகையால், உங்கள் ஆலோசகர் இவ்வாறெல்லாம் சொல்லும் போது ஏமாற்றமடையாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். சந்தையில் ஏராளமான முதலீட்டுச் சாதனங்கள் உள்ளன; அவற்றில் ஒரு சில நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டாலும் பரவாயில்லை, மோசமானவற்றில் போய் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே நலம்.

கடைசியாக ஒரு விஷயம் - உங்கள் நிதி ஆலோசகரிடம் முதலீடுகள் செய்வதற்கு மட்டும் செல்ல வேண்டும் என்றில்லை. உங்களது முதலீடுகளிலிருந்து உங்களுக்குப் பணம் தேவைப்படும் போதும் கண்டிப்பாக அவரை கலந்தாலோ சியுங்கள். எந்த சாதனத்திலிருந்து எப்படி எடுத்தால் உங்களுக்கு வரி மற்றும் கட்டணங்கள் மிச்சமாகும் என்பதை உணர்ந்து சரியாக பணம் எடுப்பது எப்படி என்று பரிந்துரை செய்வார்.

திட்டமிட்ட முதலீடுகள் என்பது ஒரு டெஸ்ட் பந்தயம் போல; அதை டி 20 பந்தயம் போல ஆட முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் எதிர்பார்ப்பது போல ஏதேனும் ஒரு காரணம் சொல்லித் உங்கள் ஆலோசகர் உங்களை திருப்திப்படுத்தி விடலாம். அப்படிச் செய்தால் அது அவரது விற்பனைத் திறத்தை மட்டுமே குறிக்கும்.

srikanth@fundsindia.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்