முத்ரா வங்கி எதற்காக?

By இராம.சீனுவாசன்

இந்தியாவில் மொத்தம் 57.7 மில்லியன் முறைசாரா தொழில் நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றில் மிகமிகச் சிறிய வகை தொழில் நிறுவனங்களில் நான்கு சதவிகிதம் மட்டுமே வங்கிகள் மூலம் கடன் வாங்குகின்றன, இந்த நிலையைப் போக்க முத்ரா வங்கி என்ற ஒன்றைத் துவங்க இருப்பதாக 2015-16 ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டது.

முறைசாரா தொழில் நிறுவனங்கள்

இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளில் முறைசாரா தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக பெருகி வரும் மக்கள் தொகையில் அனைவருக்கும் சரியான வேலை கிடைக்காதபோது சுயதொழில் செய்வது முறைசாரா தொழில் நிறுவனங்கள் அதிகமாவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அதே போல் பல பொருட்களின் தேவை ஒவ்வொரு இடத்திலும் மிகக் குறைவாக இருக்க, அந்த குறைந்த தேவையை பூர்த்தி செய்ய மிகச் சிறிய நிறுவனங்களால் முடியும் என்பதாலும் முறை சாரா நிறுவனங்கள் பெருகுகின்றன. பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ளீட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள் பல முறைசாரா தொழில்களாக இருக்கக்கூடும்.

இந்த பலவகை முறைசாரா தொழில் நிறுவனங்களில் ஒரு வகை Own-account entreprise என்பதாகும். இத்தகைய நிறுவனங்களில் அதன் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே வேலை செய்வர். இந்த வகை முறைசாரா நிறுவனங்கள் இந்தியா முழுக்க நிரம்பியுள்ளன. உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடை, பழ வியாபாரம் எல்லாம் இந்த வகை நிறுவனங்கள்தான்.

சிறிய நிறுவனங்களுக்கு முறையான வங்கிகளிலிருந்து கடன் கிடைப்பதில்லை என்பதுதான் அரசின் தற்போதைய கவலை. வியாபாரத்திற்கு கடன் அவசியம். குறைந்த வட்டியில் சரியான காலத்திற்கு எளிமையான முறையில் கடன் பெறுவது இந்த வகை சிறிய நிறுவனங்களுக்கு முடியாத காரியம். இதற்குத் தீர்வாக முத்ரா வங்கித்திட்டம் முன் வைக்கப்படுகிறது. இவ்வங்கி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் மிக சிறிய நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று அரசு தெரிவிக்கிறது.

முத்ரா வங்கி

Micro Units Development Refinance Agency (MUDRA) Bank, என்பது மத்திய அரசால் துவங்கப்பட உள்ளது. முதலில் சிட்பி (SIDBI) என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கும், பிறகு ஒரு பாராளுமன்ற சட்டம் மூலமாக தனி வங்கியாக உருவாக்கப்படும். முத்ரா வங்கியில் ரூ. 20,000 கோடி நிதி தொகுப்பு உருவாக்கப்படும். கடன் உத்திரவாத தொகுப்புக்காக ரூ 3,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

குறு நிதி எனப்படும் மைக்ரோ பைனான்ஸ் முறையில் மிகச் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா வங்கி கடன் அளிக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் வங்கிகள் வளர்ந்த அளவிற்கு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அதிகம் இல்லை. இந்தக் குறையை முத்ரா வங்கி நீக்கும் என்பதும் மற்றும் ஒரு எதிர்பார்ப்பு. அடுத்ததாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த முத்ரா வங்கி முயற்சிக்கும் என்பதும் அரசின் குறிக்கோள்.

சிறு தொழில் கடன்

‘முன்னுரிமை துறை கடன்” (Priority Sector Lending) என்ற திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு எல்லா வங்கிகளும் கடன் கொடுக்கவேண்டும் என்ற நிலை உள்ளது.

அதே போல் சிறு தொழில் கடனுக்காக மறு நிதியாக்கம் செய்ய (Refinance) SIDBI என்ற அரசு நிறுவனமும் உள்ளது. விவசாயக் கடனுக்கு மறு நிதியாக்கம் செய்ய நபார்டு (NABARD) என்ற நிறுவனமும் அரசிடம் உள்ளது. இந்த இரு நிறுவனங்களும், அரசு வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுக்கின்றன.

இருந்தும் மிக சிறிய தொழில் நிறுவனங்களுக்கும், மிக சிறிய விவசாயிகளுக்கும் குறைந்த வட்டியில் போதுமான கடன் கிடைப்பதில்லை. இப்போது முத்ரா வங்கியும் அதே முறையில் கடன் கொடுக்க வந்திருப்பது நல்ல முன்னேற்றத்தை இத்துறையில் ஏற்படுத்துமா?

கடனை திருப்பி செலுத்தும் திறனின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கடன் கொடுக்கப்படும். சொத்தும் இல்லாமல், நிலையான இடமும் இல்லாமல், வியாபார நிலைத்தன்மையும் இல்லாமல் இருக்கும் இந்த வகை மிக சிறிய தொழில்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாகத்தான் சிறு நிதிகள் கொடுக்கலாம்.

இந்த வகையில் சராசரியாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரைதான் கடன் கொடுக்கப்படுகின்றன. ஒரு சில லட்சங்கள் வரை பணம் இருந்தால் மட்டுமே சிறு தொழில்களை இன்று நடத்தமுடியும். ஆனால் மேலே குறிப்பிட்ட பல குறைகள் உள்ள இந்தவகை சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏராளம்.

இவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது, வங்கிகளே இல்லாத கிராமங்களில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு எப்படி கடன் அளிப்பது, என்ற பல கேள்விகளுக்கு விடை தேடவேண்டிய கட்டாயம் முத்ரா வங்கிக்கு உண்டு.

என்ன செய்யலாம்?

சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கவேண்டிய கட்டாயம் எல்லா வங்கிகளுக்கும் உள்ளது. ஆனால் அவ்வாறு செய்யமுடியாத வங்கிகள், அதற்காக ஒதுக்கியத் தொகையை சிட்பி மற்றும் நபார்டு நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இவ்வாறு திரட்டப்பட்ட தொகையை இவ்விரு நிறுவனங்கள் கடன் அளிக்க பயன்படுத்துகின்றன. இதே போன்று, முத்ரா வங்கியின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வங்கிகள் தூண்டப்படும். அவ்வாறுதான் அதன் நிதி தொகுப்பு ரூ.20,000 கோடி சேர்க்கப்படும்.

சிட்பி மற்றும் நபார்டு செய்ய முடியாததை முத்ரா வங்கி செய்யவேண்டும் எனில், அடுத்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட உள்ள சிறிய வங்கிகளுடன் இணைந்து செயல்படவேண்டும். இந்த சிறிய வங்கிகள் மிக சிறிய நிறுவனங்களுக்கு, சுய உதவிக் குழுகளுக்கு கடன் அளிப்பதில் தனி சிறப்பு தகுதி பெற்றிருக்கும். சிறிய வங்கிகளும் முத்ரா வங்கியும் நல்ல கூட்டணிதான்.

சிறிய நிறுவனங்களுக்கு இனியாவது கடன் சென்றடைகிறதா என்று பார்ப்போம்.

seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்