அதிக தள்ளுபடி தருவது எப்படி?

By செய்திப்பிரிவு

கடந்த வாரம் e-commerce நிறுவனங்கள் சந்தையில் போட்டி யை நிர்மூலமாக்கக்கூடிய தள்ளுபடி அளிப்பது, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதாகப் பார்த்தோம். ஆன்லைன் வர்த்தக சந்தையை (e-commerce) நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுப்பதற்கு அதிகபட்ச தள்ளுபடி அளிப்பதே பிரதான காரணம் என்று சொல்லமுடியும்.

தள்ளுபடி செயல்முறை

பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு இருப்பதால், இந்நிறுவனங்கள் நேரடி சில்லறை வியாபாரத்தில் ஈடுபட முடியாது, எனவே இவற்றின் இணையதளங்கள் market place என்ற வகையில் விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இருக்கின்றனர். இதில் விற்பனையாளர் குறிப்பிடும் விலையே இணையத்தில் இருக்கும்.

எனவே விற்பனையாளர்தான் தள்ளுபடி கொடுப்பதாக இந்நிறுவனங்கள் கூறுகின்றன. மேலும் விற்பனையாளர்கள் இந்நிறுவனங்களின் இணையத்தை பயன்படுத்தவும், பொருட்களை வாடிக்கையாளருக்குக் கொண்டு செல்லவும் வியாபாரிகள் இவர்களுக்கு கமிஷன் தருவதாகக் கூறப்படுகிறது.

``Mint’’ என்ற ஆங்கில நாளிதழ் இந்நிறுவனங்கள் எப்படி விலைக் கழிவுக் கொடுக்கின்றன என்று உறுதி செய்யப்படாத ஒரு செய்தியை வெளியிட்டது. விற்பனையாளர்களை தள்ளுபடி கொடுக்கச்சொல்லி நிறுவ னங்கள் கூறுகின்றன. அவ்வாறு விலைக்கழிவினால் ஏற்படும் நஷ்டத்தை வணிக மேம்பாட்டுச் செலவுகள் என்று இந்நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு அளித்து ஈடுசெய்கின்றன. அல்லது தங்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையை குறைத்துகொள்கின்றன. இவ்வாறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்தான் விலைக்கழிவை மறைமுகமாகத் தருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பலநேரங்களில் இந்த ஆன்லைன் நிறுவனங்களே தங்கள் நிழல் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்கி அதிக தள்ளுபடிகொடுத்து விற்கின்றனவோ என்ற சந்தேகமும் உண்டு. பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் 75% வியாபாரம் WS Retail என்ற நிறுவனம் செய்கிறது. WS Retail நிறுவனத்தில் பிளிப்கார்டின் உரிமையாளர்கள் பெரும் பங்கு வைத்திருந்ததாகவும், இப்போது பிளிப்கார்டுடன் தொடர்புடையவர்களுக்கு முதலீடு கைமாறியதாகவும் தெரிகிறது.

நஷ்டத்திலும் தொடரும் முதலீடு

தொடர்ந்து அதிக தள்ளுபடி கொடுப்பது எப்படி சாத்தியம்? ஒன்று விலையை ஏற்றி பிறகு தள்ளுபடி கொடுக்கலாம். பிரபலம் இல்லாத பொருட்களில் இது சாத்தியம். அல்லது மேலே குறிப்பிட்டவாறு நஷ்டப்பட்டாவது தள்ளுபடி கொடுக்கவேண்டும். இந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றனவா? அப்படியானால் அதில் முதலீடு செய்ய ஏன் துடிக்கின்றனர்?

2012-13 ல் ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கு ரூ.264.6 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் பிளிப்கார்டுக்கு ரூ 281.7 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருந்தாலும், ஆன்லைன் நிறுவனங்களுக்குள் போட்டியைக் குறைக்கவும் வியா பாரத்தை விரிவாக்கவும் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குகின்றது. கடந்த மே மாதம் பிளிப்கார்ட் நிறுவனம் myntra என்ற fashion e-commerce நிறுவனத்தை ரூ.2,000 கோடி விலை கொடுத்து வாங்கியது.

அதே போன்று ரூ.7000 கோடிவரை மதிப்பிடப்பட்டுள்ள jabong என்ற fashion e-commerce நிறுவனத்தை அமேசான் நிறுவனம் வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிளிப்கார்டின் மதிப்பு ரூ 60,000 கோடி இருக்கும் என்றும் ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மதிப்பு ரூ 18,000 கோடி இருக்கும் என்றும் இதில் முதலீடு செய்ய பலர் தயாராக இருப்பதாக செய்திகளை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. இப்போது நஷ்டம் ஏற்பட்டாலும் எதிர் காலத்தில் பெரிய லாபத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக முதலீடுகளை இந்த நிறுவனங்கள் ஈர்க்கின்றன, அதைக் கொண்டு தள்ளுபடி கொடுப்பதாக தெரிகிறது.

வரிச் சிக்கல்

நிறுவனங்களின் வியாபார அமைப்பு விற்பனை வரிச் சிக்கல்களை ஏற்படுத்து கின்றது. e-commerce நிறுவனங்கள் ஓரிரு மாநிலங்களில் தங்கள் இருப்புகளை வைத்துக்கொண்டு மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புகின்றன. இதில் மாநில விற்பனை வரி (12.5%) செலுத்த வேண்டுமா அல்லது மத்திய விற்பனை வரி (2%) செலுத்த வேண்டுமா என்ற சிக்கல் உள்ளது.

மாநில விற்பனை வரிதான் செலுத்தவேண்டும் என்று மாநில அரசுகள் சொல்கின்றன. கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் அம்மாநிலத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறுகிறது. இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது. இந்த சிக்கலில் இருந்து வெளிவர GST என்ற புதிய வரி அமைப்பு செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும் போது இந்த வரிச் சிக்கல் மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.

அடுத்தது என்ன?

இந்த சிக்கலை எல்லாம் மீறி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மென்மேலும் வளர்வதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. GST அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடும், அப்போது வரி சிக்கல் தீர்ந்துவிடும். தேவையைவிட அதிக முதலீடுகள் இந்நிறுவனங்களை நோக்கி வருகின்றன. எனவே வரும் காலத்தில் வியாபாரத்தை பெருக்க முடியும். தொலைதொடர்பு வசதிகளும், குறிப்பாக broadband இன்டர்நெட் வசதியும், மொபைல் இன்டர்நெட் வசதியும் வேகமாக பரவிவருவது இத்துறையின் வளர்ச்சிக்கு உதவும். இந்திய அரசின் தபால் நிலையங்களையும் e-commerce நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வேரூன்றி வருகிறது.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் எல்லா கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆன்லைன் வர்த்தகம் பரவும், தபால் துறைக்கும் கூடுதல் வருவாய் வரும் என்று கூறுகின்றனர். வியாபாரம் விரிவடையும் போது விற்பனை செலவு குறைந்து பொருட்களின் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் ஒரு சில நிறுவனங்களே e-commerce துறையில் இருக்கும் போது வாடிக்கையாளரின் நன்மையை பாதுகாப்பது அவசியம். அதேபோல் இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. அரசு என்ன செய்ய உள்ளது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்போது நஷ்டம் ஏற்பட்டாலும் எதிர்காலத்தில் பெரிய லாபத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதிக முதலீடுகளை இந்த நிறுவனங்கள் ஈர்க்கின்றன, அதைக்கொண்டு தள்ளுபடிகொடுப்பதாக தெரிகிறது.

- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்