உன்னால் முடியும்: ’வெற்றி ஒரு நாளில் உருவாகி விடுவதில்லை’

By நீரை மகேந்திரன்

தொழில்முனைவோராக வெற்றிபெற மன உறுதியும் வைராக்கியமும் முக்கியம் என்பதை உணர்த்து கிறார் திருச்சி துறையூரைச் சேர்ந்த மீனா ஹரிகிருஷ்ணன். பள்ளி கல்லூரிகளுக்கான போர்டுகளை தயாரித்து வரும் இவரது கல்வித்தகுதி பிளஸ் 2. மாதம் 5 ஆயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்ட இந்த குடும்ப தலைவி இன்று சொந்த வாகனம், வீடு, சொந்த கட்டிடத்தில் தொழிற்சாலை என வெற்றிகர மான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

நான் என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இரண்டு வீட்டிலுமே கடுமையான எதிர்ப்பு இருந்தது. நான் பனிரெண்டாவதுதான் படித்திருக்கிறேன். என கணவர் எம்காம் வரை படித்திருந்தார். எனது கணவரது குடும்பத்தினர் பள்ளிகளுக்கான மேப் தயாரிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தனர். அவரோடு உடன் பிறந்தவர்கள் ஆறு பேரும், ஏரியாவுக்கு ஏற்ப அந்த தொழிலையே பிரித்துக் கொண்டு வேலை செய்ததால் அதில் பெரிதாக வருமானமில்லை. என் கணவருக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். இதில் குடும்பம் நடத்தவே கடும் நெருக்கடியாக இருக்கும். கடும் எதிர்ப்பு இருந்தாலும், சொந்த வீடு வாங்கும் வரை இங்கேயே இருப்போம் என சமாதானம் செய்து கொண்டு கணவரது வீட்டிலேயே சமாளித்துக் கொண்டிருந்தேன்.

பள்ளிகளுக்கு மேப் ஆர்டர் எடுக்க போகும்போது ``நீங்கள் போர்டுகள் செய்கிறீர்களா, வாங்கி தர முடியுமா’’ என்று கேட்பார்கள். ஆனால் அதை செய்வதற்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதுகூட எங்களுக்கு தெரி யாது. ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட நான் தயாராக இல்லை. சந்தையில் ஏற்கெனவே இருந்த போர்டுகளை வாங்கி அது எப்படி செய்துள்ளனர் என்பதை பார்த்து, இன்டர்நெட் மூலம் அந்த பொருட்கள் எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

இதை தொடங்குவதற்கு முதலீடு தேவை என்கிற நிலையில் எனது கணவரது தம்பி அவரது ஒரு இடத்தை விற்று 2 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதை வைத்து மூலப் பொருட்களை வாங்கி ஆட்களை கொண்டு தயாரித்தோம். முதலில் சின்ன சைஸில் சாம்பிள் போர்டுகளை தயார் செய்து பள்ளிகளுக்குக் காட்டினோம். பிறகு ஆர்டர்களுக்கு ஏற்ற சைஸில் தயாரித்து அனுப்பினோம்.

கணவர் மார்க்கெட்டிங் வேலைகளை கவனித்துக் கொள்ள, நான் மூலப் பொருட்கள் வாங்குவது, வேலை செய்யும் ஆட்களை கவனிப்பது, செலவுகள், பள்ளி கல்லூரிகளின் முகவரிகளை பட்டியலிடுவது, நிர்வாக வேலைகளை கவனித்துக் கொண்டேன். 2008-ல் இந்த தொழிலை தொடங்கியபோது நான் கருவுற்றிருந்தேன். இருந்தாலும் வெற்றிபெற வேண்டும் என்கிற வைராக்கியத்தில் தீவிரமாக உழைத்தேன். எங்களது முயற்சிகள் நன்றாக இருக்கவே ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின.

மூலப்பொருட்கள் டெல்லி, ஹைதரா பாத் போன்ற இடங்களில்தான் தரமாகவும், விலை குறைவாகவும் கிடைக்கும். இந்த வியாபாரிகளுடன் பேசிப் பேசி எனக்கு ஆங்கிலம், ஹிந்தி என மொழி பழக்கமும் கிடைத்தது. எங்களது தயாரிப்புகளுக்கு நானே பிரவுசர் தயாரித்தேன். இந்தியா மார்ட் போன்ற இணையதளங்களில் பதிவு செய்தோம். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டிங் வேலைகளை குறைத்துக் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு இமெயிலில் பிரவுசர்களை, கொட்டேஷன்களை அனுப்பியே ஆர்டர்கள் எடுக்கத் தொடங்கினோம்.

முதல் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை என்று இருந்த ஆண்டு பரிவர்த்தனை மெல்ல மெல்ல உயரத்தொடங்கியது. கனரா வங்கி மூலம் ரூ. 10 லட்சம் வங்கி கடனுதவியும் கிடைக்க தொழிலை விரிவுபடுத்தினோம். 2013-ல் எங்களது வருமானத்திலிருந்து வீடு கட்டி குடியேறும்போது எங்களை புறக்கணித்த அத்தனை பேரும் தேடி வந்தார்கள்.

இப்போது பத்து நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன், தொழிலகத்துக்கும் சொந்த இடம், போர்டுகளை சப்ளை செய்ய சொந்த வாகனம் என அடுத்த கட்ட வளர்ச்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டில் ஆண்டு பரிவர்த்தனை இலக்கு ரூ.75 லட்சம் என நிர்ணயித்திருக்கிறேன் என்றார்.

எனது நம்பிக்கையை பார்த்துதான் கடனை அளிக்கிறோம் என்று வங்கியில் சொன்னார்கள். சொந்த பந்தங்களைத் தாண்டி வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்த நான், முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியம் உருவாக்கிய நம்பிக்கை அது என்கிறார். நீங்கள் இன்னும் உயரத்துக்கு போக வேண்டும் மீனா. வாழ்த்துகள்.

maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்