குறள் இனிது: விதிமுறை.. மனநிலை.. நடைமுறை..!

By சோம.வீரப்பன்

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்

(குறள்: 637)

சமீபத்திய செய்தி தெரியுமா? பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை, பெங்களூரு போன்ற 6 பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் ரூ.5,000 ஆக உயர்த்தப்படுகிறதாம்!

இதுவரை காசோலை வசதி பெறாத வாடிக்கை யாளர்களுக்கு ரூ.500 ஆக இருந்த இத்தொகை தற்பொழுது 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது! நகரங்களில் உள்ள கணக்குகளுக்கு இத் தொகையை ரூ.3,000 என்றும், சிறு நகரங்களுக்கு ரூ.2,000 எனவும், கிராமங்களுக்கு ரூ.1,000 எனவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்!

ஏப்ரல் 1 முதல் இவ்வங்கியுடன் இணையும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் போன்ற 5 துணை வங்கிகளுக்கும் இது பொருந்தும்! அவர்கள் சொல்லும்படி மாதத்திற்கான சராசரித் தொகை வங்கியில் இல்லையென்றால் போச்சு அண்ணே! ரூ.100 வரை அபராதம் போட்டுத் தாளித்து விடுவார்கள்! அதாவது ஒரு வருடத்தில் உங்கள் கணக்கிலிருந்து அபராதமாக ரூ.1,200 வரை எடுத்துக் கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது!

அதற்கு ‘சேவை’ வரி வேறு உண்டாம்! இதென்னங்க கபளீகரம்? வங்கிகளின் பெரிய அண்ணன் யார்? ஸ்டேட் வங்கி தானே? அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழி என இனி மற்ற வங்கிகளும் இதையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்! ஐயா, உங்கள் மனதின் எண்ண ஓட்டம் எனக்குப் புரிகிறது. ‘இது என்ன அநியாயம்? நாங்க தானா மாட்டினோம்? விஜய் மல்லைய்யா போன்றவர்கள் ஏமாற்றிச் செய்த நட்டத்தை எல்லாம் சரிக்கட்ட எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கின்றார்களா?'என்று கோபம் வருகிறதா?

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் தெரிந்தவை தானே?

ஒவ்வொரு கணக்கையும் பராமரிப்பதற்கு நிறையச் செலவாகும், கணினிகளில் மூலதனம், அவற்றின் தேய்மானம், பணியாளர்களின் சம்பளம், கிளையின் வாடகை போன்ற செலவுகள் என கணக்குப் போட்டுச் சொல்வார்கள். இது தர்க்க ரீதியாகவும், கணக்காளர்களின் ஆய்வுப் படியும் சரியாக இருக்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா?

தற்பொழுது வங்கிகளைக் குறித்த மக்களின் பார்வை என்ன? வாராக் கடன்களின் சுழலில் தத்தளித்துக் கொண்டு மீள முடியாமல் தவிக்கின்றன என்பது தானே? இருக்காதா பின்னே? ஜூன் 2016 நிலவரப்படி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் வாராக்கடன் ரூ.6 லட்சம் கோடியாம்! இதில் ஸ்டேட் வங்கியின் பங்கு மட்டும் ரூ.93,000 கோடி!

`என்னம்மா, இப்படிச் செய்யலாமா, அபராதத்தைக் குறைங்களேன்னு' கேட்டால் ஜன்தன் கணக்குகளால் ஆகும் செலவைச் சரிக்கட்டுகிறோம் என்கிறார் அருந்ததி பட்டாச்சார்யா! எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் பொழுது நியாய அநியாயங்களுடன் அப்பொழுது உள்ள சூழ்நிலையையும் மக்கள் மனநிலையையும் பார்த்துச் செய்ய வேண்டுமில்லையா? ஒரு செயலைச் செய்யும் முறையை நூலறிவால் அறிந்த போதிலும், அதனை உலகத்தின் இயல்புக்குப் பொருந்தும்படியே செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

- somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

க்ரைம்

10 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்