உன்னால் முடியும்: மக்களின் நம்பிக்கைதான் எங்களின் முயற்சி

By நீரை மகேந்திரன்

வெளிநாட்டில் நல்ல ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் வசந்த். பொருளாதார நெருக்கடி காலத்தில் அங்கு வேலையை விட்டு விட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தவர். சொந்த ஊரிலேயே தொழில் செய்வதன் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இ-காமர்ஸ் துறையில் இறங்கி இன்று தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.

இ-காமர்ஸ் துறை என்று முடிவான பிறகு வீட்டு தினசரி உபயோகப்பொருட்களுக்கான சந்தையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். ஏனென்றால் இந்த துறையில் பெரிய ஜாம்பவன்களாக உள்ள நிறுவனங்களில் உள்ளூர் பிராண்டுகள் கிடைக்கவில்லை. உள்ளூர் தயாரிப்பாளர்களையும் தங்கள் வலைப்பின்னலுக்குள் அவர்கள் கொண்டுவந்தது இப்போதுதான்.

பொதுவாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு அருகில் உள்ள சில்லரை வணிகர்கள் அல்லது பல்பொருள் அங்காடிகளைத்தான் மக்கள் நாடுவார்கள். அப்படியிருக்க இந்த துறையில் நிற்க முடியுமா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இ-காமர்ஸ் துறையில் எந்த பொருளையும் விற்க முடியும் என்கிற மிகப்பெரிய சந்தையை இந்த ஜாம்பவான்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

பல ஆன்லைன் சந்தைகளில் மொத்தமாக சப்ளை செய்யும் பெரிய தயாரிப்பாளர்களின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்வார்கள். ஆனால் நாங்கள் சிறிய அளவிலான தயாரிப்பாளர்கள், உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொள்முதல் செய்தோம். விளம்பரங்கள் கொடுத்தால் அதற்கான செலவை ஈடுசெய்ய முடியாது என்பதால் எந்த விளம்பரங்களும் இதுவரை செய்யவில்லை. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலிருந்துதான் எங்களுக்கான வாடிக்கையாளர்களை பிடித்தோம்.

பொருட்களை ஆர்டர் கொடுத்தால் அடுத்த நாளில் கொண்டுவந்து சேர்த்துவிடுவோம். தவிர எங்களது இணையதளம் ஆங்கிலத்தில் மட்டுமே இல்லாமல் தமிழிலும் படித்து ஆர்டர் செய்யலாம் என்கிற வகையில் வடிவமைப்பைக் கொண்டு வந்தோம். இதனால் சாதாரணமாக வீட்டிலிருக்கும் குடும்பத்தலைவிகளும் ஆர்டர் கொடுக்கின்றனர்.

தமிழக அளவில் விருதுநகர்தான் இந்த பொருட்களுக்கு மொத்த வியாபார சந்தை என்பதால் அங்கிருந்து இயங்கி வருகிறோம். தற்போது தமிழக அளவில் 18 நகரங்களில் விநியோகம் செய்யும் அளவுக்கு கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இந்த பொருட்களை அந்தந்த ஊர்களில் உள்ள சந்தை விலைக்கு வாங்கி அனுப்புவதுதான் முதலில் திட்டம். ஆனால் முகவர்கள் செய்கிற சின்ன தவறும், மொத்த தொழிலையும் பாதிக்கும் என்பதால், ஒரே இடத்திலிருந்து அனுப்புவது என்பதை முடிவு செய்து விருதுநகரிலேயே கொள்முதல் செய்து, இருப்பு வைத்து அனுப்புகிறோம்.

மொத்தமாக கொள்முதல் செய்து இருப்பு வைப்பதால், பொருட்கள் காலாவதி தேதியில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் இன்னும் நான்கு மாதங்களுக்கு பிறகுதான் காலாவதி ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். எப்போதாவதுதான் அதை பயன்படுத்துவோம் என்று சொல்பவர்களுக்கு அதை சப்ளை செய்ய மாட்டோம். இப்படி ஒவ்வொன்றையும் வாடிக்கையாளரிடமிருந்தே ஆலோசனை பெற்று வடிவமைத்துக் கொள்கிறோம்.

ஒரு வாடிக்கையாளர் முதல் முறையாக ஆர்டர் கொடுக்கிறார் என்றால், அவர் பதிவு செய்துள்ள முகவரி, தொலைபேசி எண்ணை குறிப்பிட்ட ஊரில் உள்ள முகவர் ஊர்ஜிதப்படுத்துவார். அதற்கடுத்துதான் பொருட்கள் பேக்கிங் தொடங்கும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தனியாக அட்டைபெட்டிகளில் பேக்கிங் செய்து அனுப்புவதால், அந்த பொருட்களுக்கு மரியாதை கொடுப்பதுபோல வாடிக்கையாளர்களை உணரச் செய்கிறோம்.

தற்போது பதினைந்து நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் பல ஊர்களிலும் விநியோகத்துகாக முகவர்கள் நியமிக்கப்படுவதால், பகுதிநேர வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம். பல உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் தொழில் வாய்ப்பைக் கொடுத்து வருகிறோம். இந்தத் தொழில் பிரிவில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும், குறிப்பிட்ட ஊர் அல்லது ஏரியாக்களில் மட்டுமே இயங்கி வருகின்றனர். பிராண்டடாக இயங்குபவர்கள் வெளியிலிருந்து முதலீடுகளை திரட்டுவதன் மூலம் விளம்பரங்களையும் சலுகைகளையும் அளிக்கிறார்கள். இது இரண்டும் இல்லாமல் தமிழக அளவில் இயங்குவது சாதாரணமானதல்ல.

தயாரிப்பாளர் கொடுக்கும் விலையிலிருந்து குறைவான லாபம் வைத்துதான் எல்லா விற்பனையாளர்களும் விற்பனை செய்கின்றனர். இதில் மாற்றம் செய்ய முடியாது. ஒப்பீட்டளவில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அளவில்தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆட்டோ பிடித்து மாத தேவைகளை மொத்தமாக வாங்கி வருபவர்களுக்கு இந்த சிறிய ஏற்ற இறக்கங்கள் சுமையாக தெரியாது என்கிற நம்பிக்கைதான் எங்களின் வளர்ச்சி என்று நம்புகிறோம் என்று முடித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

35 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

58 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்