வளர்ச்சியில் அக்கறை காட்டுகிறதா தமிழக பட்ஜெட் ?

By நீரை மகேந்திரன்

அடுத்த நிதி ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை சுமார் 3.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்கிறது தமிழக அரசின் பட்ஜெட். குறிப்பாக 2016-17-ம் ஆண்டில் ரூ. 2,62,431 கோடியாக இருந்த கடன் அளவு 2017-18-ல் ரூ. 3,14,366 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாநிலத்தின் கடன் ரூ. 51, 935 கோடி அதிகரித்துள்ளது. தவிர நிதிப் பற்றாக்குறையின் மதிப்பு ரூ.44,480 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 3 சதவீதமாக உள்ளது.

ஆக கடன் அதிகரிப்பு, நிதிப் பற்றாக்குறை உயர்வு என தள்ளாட்டமாக உள்ள மாநிலத்தில் வளர்ச்சி எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருமா என்பதை அறிந்து கொள்வதற்கும் அது அவசியமாக உள்ளது.

நிதி நிலை குழப்பம்

2018-19 ஆண்டில் ரூ.43,962 கோடி கடன் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஜிடிபி மதிப்பில் 25 சதவீதம் வரை கடன் வாங்கலாம் என்றாலும் இது 22.29 சதவீதமாகும். நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலங்களில் அதிக கடன் வாங்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. வரும் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தாலும் அதற்கான திட்டங்கள் என்ன என்பது விளக்கப்படவில்லை. செலவினங்களும் குறைக்கப்படவில்லை.

குறிப்பாக ஜிஎஸ்டிக்கு பிறகு தமிழகத்துக்கு மத்திய அரசின் வரி வருவாய் குறைவாக கிடைத்து வருகிறது. இதற்காக சிறப்பு மானிய நிதி கேட்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் ஜிஎஸ்டி-யால் தமிழக அரசுக்கு குறைந்துள்ள வரி வருவாய் மொத்தமாக மத்திய அரசு அளிக்கும் சாத்தியங்கள் இல்லை. அப்படியே கிடைத்தாலும் மாநில அரசின் வருவாய் இழப்பை ஓரளவு பூர்த்தி செய்வதாகத்தான் இருக்கும்.

ஆனால் தமிழக அரசின் அறிவிப்போ நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசிடம் பெறலாம் என நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் ஏற்கெனவே மத்திய அரசின் பல திட்டங்களின் நிதியை மாநில அரசு முழுமையாக பெறாத நிலையில் நிதி இழப்பை பெறுவதில் முன்னேற்றம் இருக்கும் என்பதை சொல்ல முடியாது.

தொழில் வளர்ச்சி

மாநிலத்தின் தொழில்வளர்ச்சி அதிகரித்தால் அரசின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உயரும். ஆனால் இப்போதுவரை தொழில் தொடங்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. விஷன் 2023 திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு அறிவித்த போதும் இதனைக் குறிப்பிட்டார்.

6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கட்சி ஆட்சியிலிருந்தும் இதை நடைமுறைப் படுத்த முடியாத நிலைதான் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் இல்லை என பல நிறுவனங்கள் வெளியேறி இருக்கின்றன.

தவிர புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தை பொறுத்த வரையில் மாநிலங்களிடையே கடும் போட்டி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக இருந்த சட்டீஸ்கர், பீகார், குஜராத் மாநிலங்களின் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால் 2015-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்ட முதலீடுகள்கூட தமிழகத்துக்கு முழுமையாக வந்து சேரவில்லை. அரசின் நிதிநிலை அறிக்கை விவரங்களே இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

குறிப்பாக அப்போது ரூ.2.42 லட்சம் கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ரூ.62,738 கோடி அளவிலான முதலீடுகள் மட்டுமே தற்போது வரை தமிழகத்துக்கு வந்துள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாகியுள்ளன என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட முதலீடுகள் வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது ஆராயப்படாமலேயே அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

சிறுதொழில் துறை வளர்ச்சிக்காக ஏற்கெனவே ஏரேஸ்பேஸ் பூங்கா, ஆயுத தளவாட உற்பத்தி நெடுஞ்சாலை, செங்கல்பட்டில் மருத்துவ தொழில் பூங்கா, உணவுப் பதப்படுத்தல் தொழில் பூங்கா, ஓசூர் மற்றும் தோவாளையில் மலர் பதப்படுத்தல் பூங்கா, திருவாடணை பட்டு பூங்கா போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கு இப்போதும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

நஷ்டத்தை அதிகரிக்கும் மின்சாரம்

தமிழகம் கடனில் தத்தளிக்கும் நிலையில் மின்சாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில், மின் உற்பத்தி அதிகரிப்பில் தமிழக அரசு பின்தங்கியுள்ளதாக எச்சரிக்கை செய்தது. தமிழகத்தில் குறைந்த செலவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிக்க வாய்ப்பிருந்தும், மின்சார வாரியம் அனல் மின்சார தயாரிப்பில் ஆர்வம் காட்டுகிறது.

இதனால் மின் வாரியத்துக்கு அதிக நஷ்டம் உருவாகிறது என்று குறிப்பிட்டது. கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகத்தின் மின்சார தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தில் நஷ்டம்தான். குறிப்பாக 22,500 மெகாவாட் திறனுக்கு அனல் மின் நிலைய திட்டங்களை செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான செலவில் மாற்று எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த முடியும். நிதி ஒதுக்கீட்டில் மட்டுமல்ல, நிலக்கரியும் தேவையும் வெளிமாநிலங்களையும், இறக்குமதியையும் நம்பி உள்ளது. இப்படி முறையான திட்டமிடல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட செய்யூர் அனல் மின்நிலைய திட்டம் நடைமுறைக்கே வரவில்லை.

உடன்குடி திட்டமும் தேங்கி உள்ளது. அனல் மின்சார தயாரிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதும் நிதிநிலை மோசமடைய காரணமாகும். ஆனால் சூரிய மின்சக்தி திட்டமான உதய் திட்ட உருவாக்கத்தின் மூலம் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்தின் நஷ்டம் ரூ. 3,783 கோடி குறைந்துள்ளது. ஆனால் அனல் மின் திட்டங்களுக்கு திரும்பவும் நிதிநிலை முன்னுரிமை அளித்துள்ளது.

மீனவர்களின் நலனுக்கான திட்டங்கள், வேளாண்மை துறை மேம்பாடு என பல அறிவிப்புகள் அறிக்கையில் உள்ளன. ஆனால் இவற்றை செயல்படுத்துவதைக் காட்டிலும், சாகர்மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை குறித்த அச்சமும் குழப்பமும் தமிழக கடலோர மற்றும் விவசாய மக்களிடத்தில் உள்ளதால் இதற்கு உறுதியான முடிவு எடுப்பது தீர்வாக இருக்கும்.

விஷன் 2023-க்கான திட்ட உருவாக்கத்துக்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் அதற்கான திட்ட உருவாக்கத்துக்கு நிதி ஒதுக்கும் நிலையில்தான் தமிழக அரசு உள்ளது. இதிலிருந்தே தொழில் வளர்ச்சியில் அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். மொத்தத்தில் அதிகரித்து வரும் கடனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் இல்லை. தொழிலை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளிலும் அக்கறை இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

-maheswaran.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்