யு டர்ன் 20: ஐடிசி நிறுவனம் ஐடிசி நிறுவனம்

By எஸ்.எல்.வி மூர்த்தி

மூழ்கும் கப்பலான சிகரெட்டிலிருந்து விடுபடவேண்டும் என்னும் முயற்சிகளை 1969 – ஆம் ஆண்டிலேயே, அன்றைய சேர்மென் ஹஸ்கர் தொடங்கிவிட்டார். கிளாசிக் ஃபைனான்ஸ் கம்பெனி, ஹோட்டல்கள், பத்ராச்சலம் பேப்பர் போர்ட்ஸ், ஐடிசி அக்ரோடெக் ஆகியவை இத்தகைய முயற்சிகள். புதிய முயற்சிகள் அத்தனையிலும் நஷ்டம். ஏதாவது உடனே செய்தாகவேண்டும்.

கிளாசிக் ஃபைனான்ஸ் கம்பெனியை விற்றதுபோல், தேவேஷ்வர், ஐடிசி அக்ரோடெக் கம்பெனியின் பெரும்பான்மையான பங்குகளை கான்அக்ரா (Conagras) என்னும் நிறுவனத்துக்கு விற்றார். ஹோட்டல்கள், பத்ராச்சலம் பேப்பர் போர்ட்ஸ், ஆகியவற்றையும் தலை முழுகிவிடலாம் என்று பலர் ஆலோசனை சொன்னார்கள். அது தப்பியோடும் செயல் என்று தேவேஷ்வர் நினைத்தார். இந்த இரு பிசினஸ்களையும் ஆழமாக ஆராய்ந்தார். அவர் எடுத்த முடிவு, வித்தியாசமான, துணிச்சலான முடிவு.

ஹோட்டல் துறைக்கு நிச்சயமாக ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று தேவேஷ்வர் நம்பினார். இதேபோல், பத்ராச்சலம் பேப்பர் போர்ட்ஸ் தன் உயர்தரத்தில் முத்திரை பதித்திருந்தது. இந்த இரண்டு பிசினஸ்களிலும், முதலீட்டை அதிகமாக்கி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால், வெற்றி நிச்சயம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது.

இந்தச் செயல்பாடுகளைத் தொடங்கினார். இது அழிவுப்பாதை என்று ஆரூடம் சொன்னார்கள். போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தொடர்ந்தார். இன்று, நாடெங்கும் 101 ஐடிசி ஹோட்டல்கள். உயர்மட்ட ஆடம்பர விரும்பிகளுக்கு ஐடிசி கிரான்ட் சோழா (சென்னை) போன்றவை; நடுத்

தர வர்க்கத்தினருக்கு ஃபார்ச்சூன் ஹோட்டல்கள் என்ற பதாகையில் பாண்டியன் ஹோட்டல் (மதுரை) போன்ற விருந்தோம்பல் தளங்கள். ``உலகின் சிறந்த ஆடம்பர ஹோட்டல் குழுமம்”, ``பாதுகாப்பில் நம்பர் 1”, ``உலகின் சிறந்த உணவுவிடுதி” என இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் ஆசியா, அமெரிக்கா எனப் பூகோளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கீகாரக் கிரீடங்கள். தேவேஷ்வரின் தொலைநோக்குப் பார்வைக்குக் காலம் தந்திருக்கும் பதில்.

பத்ராச்சலம் பேப்பர் போர்ட்ஸ் தயாரிப்புகளின் உயர்தரம் இந்திய, வெளிநாட்டுக்கஸ்டமர்களால் பெரிதும் போற்றப்பட்டது. இந்த அடித்தளத்தில் மாளிகை கட்ட தேவேஷ்வர் தீர்மானித்தார். ஆந்திராவின் (இன்று தெலங்கானா) பத்ராச்சலத்திலும், மேற்கு வங்காளத்தின் சந்திரஹாட்டி (Chandrahati) கிராமத்தில், திரிபேணி டிஷ்யூஸ் (Tribeni Tissues) என்னும் பெயரிலும் இருக்கும் இரண்டு தொழிற்சாலைகள்.

இவற்றின் வருங்கால வளர்ச்சிக்கு மந்திர சாவி தொழில்நுட்பம் மட்டுமே என்னும் உறுதியோடு நவீன எந்திரங்களைப் பல நூறு கோடிகள் செலவில் வாங்கினார். தேவேஷ்வர் கணிப்பு பலித்ததா?நிச்சயமாக. இன்று, பத்ராச்சலம், சந்திரஹாட்டி, தெலங்கானாவின் பொல்லாராம் (Bollaram) கிராமம், நம்ம கோயம்பத்தூர் ஆகிய நான்கு இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் தரம், மாசுக் கட்டுப்பாடு, சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றில் காகிதத் தொழிற்சாலைகளுக்கே முன்னோடியாக இருக்கின்றன. நான்கு தொழிற்சாலைகளும் லாபத்தில்.பேப்பர் தயாரிப்பில் ஐடிசி மாபெரும் புரட்சியே செய்திருக்கிறார்கள்.

பேப்பர் பெரும்பாலும் மரங்களின் கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஒரு மரத்திலிருந்து குத்து மதிப்பாக, 80,500 எண்ணிக்கையிலான ஏ 4 அளவு பேப்பர்கள் தயாரிக்கலாம், இவற்றின் எடை சுமார் 365 கிலோ. ஐடிசி – யின் நான்கு தொழிற்சாலைகளும் வருடம் 7 லட்சம் டன் பேப்பர்களும், போர்டுகளும் தயாரிக்கிறார்கள். இதற்குத் தேவை ஆண்டுக்கு 20 லட்சம் மரங்கள்.

ஐடிசி 6,86,000 ஏக்கர்களில் மரங்கள் நட்டுப் பராமரிக்கிறார்கள். தாங்கள் வெட்டும் மரங்களைவிடப் பலமடங்கு நட்டு, வளர்த்து, சுற்றுப்புறப் பசுமையை மேம்படுத்தும் சேவை. ஹோட்டல்கள், பேப்பர் ஆகிய இரு தொழில்களும் லாபப் பாதையில்.

கம்பெனியில் காசாக்கும் திறமை என்ன இருக்கிறது என்று தேவேஷ்வர் ஆராய்ந்தார். அது, தகவல் தொழில்நுட்பத் திறமை. 1999 – ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகில் Y2K* என்னும் பிரச்சினை வந்தது. இந்தியாவுக்கு இது ஒரு வரமாக அமைந்தது. நம் மென்பொருள் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பல அன்றாடப் பணிகளை இந்தியாவுக்குத் தரத் தொடங்கினார்கள். இதைப் பயன்படுத்திக்கொள்ள, தேவேஷ்வர் ஐடிசி இன்ஃபோடெக் (ITC Infotech) தொடங்கினார். தற்போதைய ஆண்டு வருமானம் 1,650 கோடி. லாபம் 82 கோடி. தேவேஷ்வரின் மூன்றாம் முயற்சியில் அடுத்த கிரீடம்.

ஸ்ரீகம்ப்யூட்டர் புரோக்ராம்களில் ஆண்டினைக் குறிக்கையில் முதல் இரண்டு இலக்கங்களை நிலையாக எடுத்துக்கொண்டு அடுத்த இரண்டு எண்களை மட்டுமே குறிப்பது வழக்கம். அதாவது, 1999 – ஐ, 99 என்று போடுவார்கள். 1999 என்று கம்ப்யூட்டர் கரெக்டாக அடையாளம் கண்டுகொள்ளும்.

ஜனவரி 1, 2000 – ஆம் ஆண்டு. 00 என்று போட்டால், கம்ப்யூட்டர் அதை 2000 – ஆம் ஆண்டு என்று எடுத்துக்கொள்ளுமா, அல்லது 1900 என்றா - கம்ப்யூட்டர் நிபுணர்கள் சிந்தித்தார்கள். அவை குழம்பலாம், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், சகலம் கம்ப்யூட்டர் மயம். கம்ப்யூட்டர்களின் குழப்பத்தைத் தீர்க்காவிட்டால், மின்சார சப்ளை நிற்கும், உலகமே இருளில் முழுகும், வங்கிகள், விமானங்கள், ரெயில்கள் ஆகிய சேவைகள் தடுமாறும், ஸ்தம்பிக்கும்.

இந்தத் தவறுக்கு ஒய் 2 கே என்று பெயர் வைத்தார்கள். ஒய் என்றால் ஆங்கில Y. Year என்ற சொல்லின் முதல் எழுத்து. ஆயிரத்தைக் குறிக்க “கே” என்ற வார்த்தை. கம்ப்யூட்டர்களையும் அவற்றின் பயன்பாட்டு நிரல்களையும் மேம்படுத்தி 2000 – ஆம் ஆண்டுக்கு இசைந்தவையாக மாற்றுவதற்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போர்க்கால நடவடிக்கைகள் எடுத்தன.

மொத்தச் செலவு 300 பில்லியன் டாலர்கள். அதாவது, அன்றைய மதிப்பில் பதினெட்டு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் கோடி ரூபாய்! இதற்காகப் பல்லாயிரம் இந்திய சாஃப்ட்வேர் வல்லுநர்களைப் பயன்படுத்தினார்கள்.

சாப்ஃட்வேரில் கிடைத்த வெற்றி தேவேஷ்வருக்கு உற்சாக டானிக். புதிய துறைகளில் இறங்கும் தன்னம்பிக்கை வந்தது. வில்ஸ் ஸ்போர்ட் என்னும் பிரான்டில், ஆண்களுக்கும், பெண்களுக்குமான ஆயத்த ஆடைகள். இதற்காக முக்கிய நகரங்களில் சொந்தக் கடைகளை ஐடிசி திறந்தது.  பொதுமக்களிடம் சிறந்த வரவேற்பு.

கஸ்டமர்களுக்கு வேறென்ன பொருட்கள் தரலாம்? அந்தப் பொருட்கள் ஐடிசியின் பலங்களைப் பயன்படுத்துபவையாக இருக்கவேண்டும், தேவேஷ்வர் தேடினார். தெரிந்தது அவர் கண்கள் முன்னால் ஒரு தங்கச் சுரங்கம்.

ஐடிசிக்கு இந்தியா முழுக்க விரிந்து பரந்த விற்பனைச் சங்கிலி இருந்தது. எல்லா மாநிலங்களிலும் பிரம்மாண்ட ஸ்டாக்கிஸ்ட்கள். இவர்கள் மூலமாக லட்சக்கணக்கான கிராமங்களில் சிகரெட் விற்கும் பெட்டிக்கடைகள். இந்த வியாபாரிகள் தங்கள் கடைகளில் டூத் பேஸ்ட், சோப், ஷாம்பூ, பிஸ்கெட், பள்ளிக்கூட நோட்டுப் புத்தகங்கள் போன்ற பொருட்களையும் விற்பனை செய்தார்கள்.

இத்தகைய பொருட்களுக்கு மார்க்கெட்டிங்கில் Fast-moving Consumer Goods (சுருக்கமாக FMCG) என்று பெயர். அதிவிரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் என்று சொல்லலாம். இவற்றை மார்க்கெட்டிங் செய்ய தேவேஷ்வர் முடிவெடுத்தார். FMCG பொருட்கள் விற்பது 100 மீட்டர் ஓட்டப் பந்தயமல்ல, மாரத்தான் ஓட்டம்.

ஜெயிக்கப் பல வருடங்களாகும், அத்தோடு, ரிஸ்க்கான பயணம். ஏனென்றால், அவர் மோதப்போவது, ஹிந்துஸ்தான் லீவர் (டவ், ஹமாம், ரெக்சோனா சோப்கள்), பிரிட்டானியா பிஸ்கெட், பார்லே பிஸ்கெட் போன்ற கோலியாத்களோடு. ஆகவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக முன்னே எடுத்து வைத்தார். வேகம், அதே சமயம் விவேகம்.

ஐடிசி களமிறக்கிய முக்கிய FMCG பொருட்களின் கால வரிசை:

2001 கிச்சன்ஸ் ஆஃப் இந்தியா (Kitchens of India) என்னும் பிரான்டில் ஜாம். ஐடிசி ஹோட்டல்கள் சமையல் கலைஞர்களின் கைப்பக்குவத்தில் உருவானவை.

2002 ஆசீர்வாத் ஆட்டா (கோதுமை மாவு), மின்ட் ஓ (Mint-O), கேன்டிமேன் (Candyman) மிட்டாய்கள், மங்கள்தீப் தீப்பெட்டிகள்.

2003 சன்ஃபீஸ்ட் (Sunfeast) பிஸ்கெட்கள், மங்கள்தீப் அகர்பத்திகள், க்ளாஸ்மேட் (Classmate) நோட்டுப் புத்தகங்கள்

2005 விவெல் (Vivel), ஃப்ளேமா (Flama) குளியல் சோப்கள், சாவ்லான் (Savlon) கிருமிநாசினித் தயாரிப்புகள், சார்மிஸ் (Charmis) சரும க்ரீம்.

2007 பிங்கோ (Bingo) சிப்ஸ்.

2010 சன்ஃபீஸ்ட் யிப்பீ (Sunfeast Yipee) நூடுல்ஸ்.

2014 கம் ஆன் (GumOn) சூயிங் கம்.

2015 பி நேச்சரல் (B Natural) பழ ரசங்கள், ஆசீர்வாத் நெய்.

2016 ஃபேபெல் (Fabelle) பிரான்ட் சாக்லெட்கள், சன்பீன் (Sunbean) இன்ஸ்டன்ட் காபி.

2017 (Engage) வாசனைப் பொருட்கள், மாஸ்டர்செஃப் (MasterChef) மசாலாக்கள், இறால்மீன்கள். ஃபார்ம்லேண்ட் (Farmland) பிராண்ட் உருளைக் கிழங்கு.

2017 தேவேஷ்வர் வயது 70. சி.இ.ஓ. பதவியை சஞ்சய் பூரி என்பவரிடம் ஒப்படைத்தார். 2020 வரை சேர்மெனாக மட்டும் தொடர்வார்.

2018 ஆம் ஆண்டில் ஐடிசியின் FMCG தயாரிப்புகள் விற்பனை ரூ.16,000 கோடி. இதில், பல தயாரிப்புகள் கடும் போட்டிகளை வென்று, விற்பனை சூப்பர் ஸ்டார்கள் - ஆசீர்வாத் ஆட்டா ரூ.4,000 கோடி; சன்ஃபீஸ்ட் பிஸ்கெட்கள் ரூ.3,500 கோடி; பிங்கோ சிப்ஸ் ரூ.2,000 கோடி, க்ளாஸ்மேட் ரூ.1,000 கோடி.

2030 – இல் ஒரு லட்சம் கோடியைத் தொடவேண்டும் என்பது ஐடிசியின் இலக்கு. இதற்காக ஐடிசி ஒவ்வொரு வருடமும் 30 புதிய தயாரிப்புப் பொருட்களை அரங்கேற்றும். சஞ்சய் பூரியும், சகாக்களும் தேவேஷ்வர் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர் களல்லவா? பிரம்மாண்டக் கனவுகள் காண்பார்கள். அவற்றை நடத்தியும் முடிப்பார்கள்.

மே 11, 2019. இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்கும்போது வருகிறது, தேவேஷ்வர் அமரராகிவிட்ட அதிர்ச்சி செய்தி. இந்த மூன்று வாரக் கட்டுரை, அந்த மாமனிதருக்கு நாம் செலுத்தும் சிறிய அஞ்சலி.

(புதிய பாதை போடுவோம்!)

slvmoorthy@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

22 mins ago

க்ரைம்

28 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்