பரஸ்பர நிதியிலும் பணம் எடுக்கலாம்

By துரைவேல் குணசேகரன்

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலானோர் தேவைப்படும் போது பணம் எடுக்க முடியாது என்பதால் மியுச்சுவல் ஃபண்டுகளில் துணிந்து முதலீடு செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நம்முடைய முதலீட்டை எடுத்துக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதுதான் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (SWP). குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி. 

ஓய்வுக்காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட காலஇடைவெளியில் குறிப்பிட்ட வருமானம் தேவைப்படலாம். அவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளானை தேர்வு செய்யலாம்.

இது எஸ்ஐபி திட்டத்துக்கு அப்படியே நேர் எதிரானது. எஸ்ஐபி திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்வோம். அதேபோல் இந்த SWP திட்டத்தில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு தொகையை, தீர்மானிக்கப்பட்ட கால இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். 

இந்தத் திட்டத்தில் முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிரந்தர தொகையையோ எடுக்கலாம். இதில் வாரம், மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது முழுஆண்டு கால இடைவெளிகளில் பணம் எடுத்துக்கொள்ளும் வசதிகள் உள்ளன.

ஆனால், இந்த சிஸ்டமேட்டிக் வித்டிராயல் வசதி ஓப்பன்-எண்டட் ஃபண்டுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 

முதலீட்டாளர்கள் இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தங்களுடைய ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சேவை மையத்துக்கோ அல்லது ஆர் அண்ட் டி ஏஜெண்டுக்கோ அனுப்புவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம். SWP செய்யும் தேதியில், உங்களுடைய ஃபண்ட் முதலீட்டில், நீங்கள் எடுக்கப் போகும் தொகைக்கு சமமான மதிப்புடைய யூனிட்டுகளை விற்று அந்தத் தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

எஸ்ஐபி போலவே, சந்தையின் நகர்வுகளுக்கேற்ப இதிலும் பலன் கிடைக்கும். சந்தை உயரும் போது விற்கப்படும் யூனிட்டுகள் குறைவாகவும், சந்தை இறங்கும்போது விற்கப்படும் யூனிட்டுகள் அதிகமாகவும் இருக்கும். ஆனால், சரியான மியூச்சுவல் ஃபண்ட்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவரவர் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறன், பணம் தேவைப்படும் காலம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றைப் பொறுத்து அமையும்.

அப்போதுதான் அதிகப் பலனை நம்மால் பெற முடியும். அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளிலும், குறைவான ரிஸ்க் எடுப்பவர்கள் கடன் ஃபண்டுகள் அல்லது ஹைபிரிட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். பல ஃபண்ட் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை எடுக்கவே அனுமதிக்கின்றன.

ஹெச்டிஎஃப்சி, ஆதித்யா பிர்லா சன்லைஃப் மற்றும் கோடக் உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் முதலீட்டின் மீது ஈட்டிய வருமானத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றன. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் பந்தன் SWP மூலம், அந்த தொகையை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றும் வசதியையும் தருகின்றது. மேலும் அனைத்து ஃபண்ட் நிறுவனங்களும், இஎல்எஸ்எஸ் எனப்படும் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டு திட்டங்களில் லாக்-இன் பீரியட் மூன்று வருடங்கள் முடிந்த பிறகே SWP செய்துகொள்ள அனுமதிக்கின்றன. 

இந்த சிஸ்டமேட்டிக் வித்டிராயல் வசதியில் எடுக்கப்படும் பணத்துக்கு வரி உண்டு. தற்போதைய கடன் வரையறைகளின்படி, ஈக்விட்டி சார்ந்த முதலீட்டு திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டை 12 மாதங்களுக்கு முன்னதாகவே எடுத்தால் அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களுக்குப் பிறகு முதலீட்டை எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதம். 

மேலும் கடன் ஃபண்டுகளில் உள்ள யூனிட்டுகளை 36 மாதங்களுக்குள் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாயவரி, அவரவர் வரி வரம்புக்கேற்றவாறு விதிக்கப்படும். 36 மாதங்களுக்குப் பிறகு விற்றால் நீண்டகால மூலதன ஆதாய வரி 20 சதவீதம் ஆகும்.  இந்த சிஸ்டமேட்டிக் வித்டிராவல் வசதியை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் ஒரு வருடத்துக்குப் பிறகும், கடன் திட்டங்களில் மூன்றாண்டுகளுக்குப் பிறகும் செயல்படுத்தினால் வரிப் பிடித்தம் குறைவாக இருக்கும்.

மேலும் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் வசதியைப் பொறுத்தவரை, வரி பிடித்தம் செய்யப்படுவதில் டிவிடெண்ட் ஆப்ஷனை விடவும், குரோத் ஆப்ஷன் சிறப்பான தேர்வாக உள்ளது. 

ஈக்விட்டி திட்டங்களில் குரோத் ஆப்ஷனில், முதலீட்டாளர்கள் ஒரு நிதி ஆண்டுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம். எனவே, சிறு முதலீட்டாளர்களின் நீண்டகால மூலதன ஆதாய வரி ரூ. 1 லட்சத்துக்குள் இருந்தால் எந்தவித வரியும் செலுத்த வேண்டியிருக்காது.

ஆனால், டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. மேலும் அவர்களுக்கு 11.65 சதவீதம் டிவிடெண்ட் டிஸ்ட்ரிபூஷன் வரியும் விதிக்கப்படும். கடன் ஃபண்டுகளில் இந்த டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி 29.12 சதவீதம் ஆகும்.

- duraivel.g@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தொழில்நுட்பம்

13 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

விளையாட்டு

51 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்