அலசல்: பேசி பிரயோசனமில்லை, செயலில் இறங்குங்கள்

By செய்திப்பிரிவு

புவி வெப்பமடைவது குறித்து மாநாடுகள் நடத்தப்படுவதும், தலைவர்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பதும் வருடாந்திர சடங்காக மாறிவருகிறது. உண்மையிலேயே இதன் தீவிரத் தன்மையை வளர்ச்சியடைந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணரவில்லை என்பதைத்தான் கடந்த பத்தாண்டு காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவி வெப்பம்  உயர்ந்தாலே  லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இது மிகவும் மெதுவாக நடக்கும் என்றும் இதன் பாதிப்பு அவ்வளவாக இருக்காது என்று கருதினால் அது தவறு. வளரும் நாடுகளில் உள்ள பல கோடி பேர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் எச்சரித்துள்ளது.

ஏற்கெனவே புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகளை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. பருவ காலத்தில் மழை பொய்த்துப் போவது, எதிர்பாராத சூழலில் கடுமையான வெள்ளம் அல்லது கடும் வறட்சி ஆகிய சூழலை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் எதிர்கொண்டு வருகின்றன.

இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதும் கண்கூடு. சென்னை நகரில் பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துவிட்டது. இதற்குக் காரணம் பருவ மழை பொய்த்துப் போனதுதான்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம் 2015-ல் ஆரம்பமானது. இப்போது அங்கு தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. உலகில் தண்ணீர் வறண்டு போன முதலாவது நகரமாக கேப்டவுன் அறிவிக்கப்பட்டுவிட்டது. உணவு தட்டுப்பாடு, பசி, பஞ்சம், பட்டினி ஆகியன புவி வெப்பமடைதலால் ஏற்படும் விளைவுகள். இதன் விளைவாக பசிக் கொடுமையும், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.

பருவநிலை மாறுபாட்டால் ஆப்பிரிக்காவில் 23 நாடுகளில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏறக்குறைய 4 கோடி மக்கள் உணவுக்காக கையேந்தும் நிலை உருவாகி விடும் என்று குறிப்பிட்டுள்ளது.

நாடுகளிடையே மட்டுமல்ல ஒரு நாட்டிற்குள்ளேயே மக்கள் இடம்பெயரும் போக்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை 143 நாடுகளில் நிலவும் என்றும் அதில் இந்தியாவும் ஒன்று என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

பருவ நிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் அகதிகள் என்ற ஒரு பிரிவினரே உருவாவர் என்றும் இத்தகையோர் வங்கதேசம், பியூர்டோ ரிகா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய யூனியனிலும் அதிகமாக உருவாவர் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக அளவில் புவி வெப்பமடைவதால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் 5-ம் இடத்தில் இந்தியா இருப்பது இங்குள்ள அரசியல்வாதிகள் எத்தனை பேருக்குத் தெரியும். இந்தியாவில் 80 கோடி மக்கள் கிராமங்களில்தான் வாழ்கின்றனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் சார்ந்துதான் வாழ்கின்றனர்.

மொத்தமுள்ள விவசாய நிலங்களில் 50 சதவீதம் மழை சார்ந்ததாகும். பருவ மழை மாறும்போது விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். இது இங்குள்ள மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். ஏற்கெனவே ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இன்னும் வறிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

புவி வெப்பமடைவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை. தேர்தல் வாக்குறுதி போல மேடைக்கு மேடை இதுபற்றி பேசுவதில் பிரயோசனம் கிடையாது. உறுதியான நடவடிக்கை மட்டுமே மக்களைக் காக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

29 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்