பாஜகவின் ‘ராஜ தந்திர’ பட்ஜெட்

By செய்திப்பிரிவு

எதிர்பார்த்தது போலவே பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட் என்பது உறுதியாகிவிட்டது. ப.சிதம்பரமும் எதுகை மோனையாக Vote on Account அல்ல, Account for Votes என்று கூறிவிட்டார்.

கிட்டதட்ட வருகிற பொதுத் தேர்தலுக்கு வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கையின் ட்ரெய்லர் தான் இந்த இடைக்கால பட்ஜெட். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்துமே பெருவாரியான மக்களைக் கவரும் வகையில் அமைந்தது. அந்த அளவுக்கு ராஜ தந்திர பட்ஜெட் என்றே சொல்லலாம். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் மேலோட்டமாக அனைவரையும் கவர்ந்துவிட்டது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால்தான், பல சிக்கல்கள்.

பட்ஜெட்டில் கூறப்பட்ட வரிச் சலுகை, வரி செலுத்துவோர் அனைவருக்குமே உண்டு என்றே ஆரம்பத்தில் பெரும்பாலானோர் புரிந்துகொண்டனர். ஊடகத்தினர் உட்பட. அனைத்து தலைப்பு செய்திகளிலும் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு என்றே கூறப்பட்டது. ஆனால், வரி விதிப்புக்குரிய தொகை ரூ. 5 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் எப்போதும் போல செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த வேண்டும் என்பது  பிறகுதான்  புரிந்தது.

ஆனாலும், இந்த வரிச் சலுகையின் மூலம் மொத்த வரிச் செலுத்துவோரின் எண்ணிக்கையான 6.84 கோடியில் 3 கோடி பேருக்கு வரி என்பது இருக்காது என்பதும் உண்மை. இவர்கள் இதுவரை செலுத்தி வந்த வரியில் அதிகபட்சமாக ரூ. 12,500 வரை மிச்சமாகியுள்ளது. ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் கூட இந்தச் சலுகையில் வரியிலிருந்து தப்பிக்க முடியும்.

ஆனால், அதற்கு இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தை முதலீடு, வீட்டுக்கடன் போன்றவற்றைக் கணக்கில் காட்ட வேண்டும். இந்த வரிச் சலுகையின் மூலம் 3 கோடி குடும்பங்களின் வருமானம் என்பது சிறிதளவு உயர்கிறது.

இந்த வருமானம் சேமிப்பாகவும், செலவுகளாகவும் மாறும். சேமிப்பாக மாறினால் அந்தந்த குடும்பங்களுக்கு பலன் உண்டு. செலவுகளாக மாறினால் இந்த வருமான வரிச் சலுகைகளால் பெரிய பயனில்லை.

முதலில், இடைக்கால பட்ஜெட்டில் இதுபோன்ற மக்களைக் கவரும் திட்டங்களை அறிவிப்பதே வழக்கத்தில் இல்லை. ஆனால், இதுபோன்ற வருமான வரி சலுகையைத் தருவதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும். ஏனெனில், வருவாயை விட்டுக் கொடுப்பது, சலுகைகளை வாரி வழங்குவது போன்ற நடவடிக்கைகளால் அரசு கருவூலத்துக்கு வருவாய் குறைந்துகொண்டே போகுtம். கடன் அதிகரிக்கும். ஏற்கெனவே அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு எட்டப்படாமல் அதிகரித்துள்ளது.

ஆனால், பாஜக இந்த அபாயங்களை எல்லாம் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறது. பாஜகவுக்கு அந்த தைரியம் ஜிஎஸ்டி மூலமாகவே கிடைத்திருக்கிறது. ஜிஎஸ்டி மூலமாக வரும் வருவாய் ஏற்கெனவே அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகைகளால் மிச்சமாகும் பணத்தை நாம் செலவு செய்யும்போது மறைமுக வரி செலுத்துவோம். அதாவது ஜிஎஸ்டி வரி. ஜிஎஸ்டி வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும். அதைவைத்து பற்றாக்குறையை சரிசெய்துகொள்ளலாம் என்ற கணக்கில் இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளது.

பல்வேறு சவால்கள்...

ஒருவேளை வரும் தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும், தற்போது அறிவித்துள்ள திட்டங்களால் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு பல சிக்கல்கள் உருவாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ள செலவினங்கள், செயல்படுத்தியுள்ள திட்டங்கள், அதன் விளைவுகள் என அனைத்துமே பாஜகவுக்கு மட்டுமே அத்துப்படி.

அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் கண்ணை கட்டி காட்டில் விட்டது போலத்தான். பாஜக தனது நடவடிக்கைகளை எல்லாவகையிலும் அதற்குச் சாதகமாகவே திட்டமிட்டுள்ளது. வருவாய் குறைவு, செலவினங்கள் அதிகம், நிதிப் பற்றாக்குறை அதிகம், பட்ஜெட் கணக்கில் வராத செலவினங்கள், வாராக்கடன்கள், திவால் நிறுவனங்கள் எனப் பல்வேறு சவால்கள் வரிசைகட்டி இருக்கின்றன.

எனவே, பாஜகவின் திட்டமிடல்கள் அதற்கு வெற்றியைத் தருகிறதா, அல்லது புதிதாக ஆட்சியில் அமர்பவர்களுக்குத் தலைவலியைத் தருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்