அலசல்: தொழிலாளர் நலனை உறுதி செய்யுமா புதிய சட்டம்?

By செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டுக்குள்  தொழில் செய்ய ஏற்ற சூழல் பட்டியலில் இந்தியா 50 இடங்களுக்குள் இருக்க வேண்டுமென இலக்கு வைத்து, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதியாக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

இதில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு சாதகமானதாகவும், தொழிலாளர் நலனை, பாதுகாப்பை குறைக்கும்படியாகவும் இருப்பதுதான் வேதனை.  தற்போது 7 பேர் இருந்தாலே தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாம்.

ஆனால், புதிய சட்டத்தில் 100க்கு மேல் இருந்தால் அல்லது மொத்தப் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே தொழிற்சங்கம் ஆரம்பிக்க முடியும்.  இது தொழிலாளிகளின் குரலை நசுக்கும் நடவடிக்கையாகவே இருக்கிறது. 

மேலும், 100 அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்கள் ஊதியமில்லாத விடுமுறை (லே-ஆப்) அளிப்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், புதிய சட்ட வரைவில் அதற்கு அவசியமில்லை. கூடவே, 300 தொழிலாளர்களுக்குக் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலைகள்,தொழில் நிறுவனங்கள் அரசின் அனுமதியின்றி மூடப்படுவதற்கு புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் இனி தொழில் நிறுவனங்கள் 299 பேரைக் கொண்ட சிறிய நிறுவனங்களை தொடங்குவார்கள். நினைத்த நேரத்தில் நிறுவனத்தை மூடுவார்கள். இது தொழிலாளர்களின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஓராண்டுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களை 3 மாதம் நோட்டீஸ் அளித்து பணி நீக்கம் செய்யவும் புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. ஆள்குறைப்பு செய்ய வேண்டியிருந்தால் இத்தகைய விதிமுறைகளை தொழில் நிறுவனங்கள் பின்பற்ற புதிய சட்டம் அனுமதி அளிக்கிறது.

இந்தியாவில் தொழில் வளர்ச்சி குறைவாக இருக்கக் காரணம் நடைமுறைக்கு ஒத்துவராத தொழிலாளர் நலச் சட்டங்கள் என தொழிலதிபர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலானவர்கள் லாபக் கணக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தொழிலாளர்களுக்கு முறைப்படி தரவேண்டிய வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு, பணிக்கொடை போன்றவற்றைக் கூட சுமையாக நினைக்கிறார்கள்.

மேலும், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு சட்ட விரோதமான நடவடிக்கைகளிலும் சில தொழிலதிபர்கள் ஈடுபடுவதுண்டு. இதிலிருந்தெல்லாம் தொழிலாளர்களையும் அவர்களது உரிமைகளையும் காப்பதற்காகவே தொழிற்சாலை சட்டம், சிறார் தொழிலாளர் தடைச் சட்டம், தொழில் தகராறு தீர்வு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு முறை சட்டம், ஒப்பந்தப் பணியாளர்கள் முறைபடுத்துதல் சட்டம் என 144 தொழிலாளர் நல சட்டங்கள் அமலில் உள்ளன.

ஆனால், இந்தச் சட்டங்களிலிருந்தெல்லாம் தப்பிக்கும் வகையிலான சட்ட திருத்தங்களை தொழிலதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசு செய்துள்ள சட்ட திருத்த வரைவும் அதற்கு ஏற்றார்போலவே இருக்கிறது.

முதலாளிகள் செய்யும் தவறுகளுக்கு எதிராக உள்ள சட்டங்கள் திருத்தப்படுவதை சீர்திருத்த நடவடிக்கைகள் என்று எப்படி சொல்ல முடியும். மொத்தத்தில் புதிய தொழிலாளர் சட்ட திருத்த மசோதா, அரசின் தலையீடு ஏதுமில்லாமல், தொழிலாளர்களுக்கு எதிராக, தொழில் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கு வழிசெய்து தருவதாகவே உள்ளது.

தொழில் செய்வதற்கு எந்த அளவுக்கு முதலீடு முக்கியமோ அந்த முதலீட்டை லாபமாக்க உழைக்கும் தொழிலாளர்களும் முக்கியம். எனவே வளர்ச்சியோடு தொழிலாளர்கள் நலனும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அந்நிய முதலீடு, தடையற்ற வர்த்தகம், ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு போன்றவற்றுக்கெல்லாம் தரும் முக்கியத்துவத்தை தொழிலாளர் நலன்களுக்கும் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் தொழில் வளர்ச்சியும் தொழிலாளர்களும் துலாபாரத்தின் இரண்டு பக்கங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்