தலைகீழாக மாறும் பொழுதுபோக்கு கலாச்சாரம்

By செய்திப்பிரிவு

பொழுதுபோக்கு கலாச்சாரத்தையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கின்றன ஸ்மார்ட்போன்கள். சினிமா தியேட்டர் வாசலில் வரிசையில் நின்று, காத்திருந்து தள்ளுமுள்ளுகளுக்கிடையே டிக்கெட் வாங்கி படம் பார்த்ததெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் இருந்த இடத்திலிருந்தே புதுப் படங்களைச் சுடச்சுட பார்க்கும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டன. சில வாரங்கள் பொறுத்திருந்தால் மட்டும் போதும். அதில் நெட்பிளிக்ஸும், அமேசானும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றன.

காரணம், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவை பிராந்திய மொழிகளில் பிரத்யேகமான புரொடக்‌ஷன்களை உருவாக்கிக் களமிறக்கிவருகின்றன. ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ வகையில் உருவாக்கப்படும் இந்த படங்கள் எந்தவித தணிக்கை பயமும் இல்லாமல் இயக்குநர் விரும்பியதை விரும்பியவாறே பார்வையாளர்களுக்கு வழங்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழிவகை செய்துகொடுக்கின்றன.

நெட்பிளிக்ஸ் ஒரிஜினல், அமேசான் பிரைம் ஒரிஜனல் புரொடக்‌ஷன்களில் உருவாக்கப்படும் படங்களுக்கும், சீரியல்களுக்கும் ஸ்மார்ட்போன் பயனாளிகளிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகெங்கும் சென்று சேர்ந்தது இந்த வகையில்தான். நெட்பிளிக்ஸில் ‘சாக்ரட் கேம்ஸ்’ என்றால் அமேசான் பிரைமில் ‘மிர்ஸாபூர்’.

இப்படி திரில்லர், காதல், ரொமான்ஸ் என அனைத்து வகைகளிலும் படங்களைத் தந்துகொண்டிருக்கின்றன. அல்ட்ரா ஹெச்டி தரத்தில், சப்டைட்டிலுடன் படங்களைப் பார்க்க முடிவது பார்வையாளர்களுக்குக் கூடுதல் வசதி. அதுமட்டுமல்லாமல் திரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்களைக் கூட வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக அளிக்கின்றன.

இதனால் வீடுகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தாலும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இப்போது பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் டிவிகளுக்கு மாறிவருவதால், நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றவற்றிலுள்ள படங்களை டிவிகளிலேயே பார்க்க முடிகிறது. இதனால் தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை வீடுகளில் உள்ள ஸ்மார்ட் டிவி, ஹோம் தியேட்டர்கள் மூலமாகவே பெற முடிகிறது.

அமெரிக்க நிறுவனமான அமேசான் இந்தியாவில் 2016 டிசம்பரில்தான் அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்க ஆரம்பித்தது. இரண்டே வருடங்களில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தியாவில் அமேசான் பிரைமில் அதிகமாகப் பார்க்கப்படுவது இந்தி மொழி படங்கள். இந்தி மொழியில் பரவலாக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், பிராந்திய மொழிகளிலும் தனது விநியோக நெட்வொர்க்கைப் பலப்படுத்தி வருகிறது அமேசான்.

தமிழ், கன்னடா, மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் வீடியோக்களைக் களமிறக்கி வருகிறது. முக்கியமாக மக்களால் அதிகம் விரும்பப்படும், அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களை அமேசான் வாங்கிவிடுகிறது. அப்படி சமீபத்திய தமிழ் சினிமா வரவு விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘பரியேரும் பெருமாள்’. இது இன்னும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். (96 படத்தை சன் டிவியில் போட்டதைவிடவா?)

திரைப்படங்களை வாங்குவதற்கும், ஒரிஜினல் புரொடக்‌ஷன்களை உருவாக்குவதற்கும் தொடர்ந்து அமேசான் பெருமளவிலான முதலீடுகளைச் செய்துவருகிறது. இதனால் நெட்பிளிக்ஸ் சர்வதேச அளவிலான படங்களை வழங்குவதில் ஜாம்பவனாகத் திகழ்ந்தாலும், இந்தியாவில் அதற்கு சரியான போட்டியாக அமேசான் பிரைம் இருக்கிறது. நகரங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளார்கள். தற்போது அமேசான் பிரைமுக்கு 38 சதவீதம் கிராமப்புற வாடிக்கையாளர்கள். 2021ல் இது 52 சதவீதமாக உயரும் என்கிறது அமேசான் நிறுவனம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் மட்டுமல்ல அனைத்து டிவி நிறுவனங்களும் தங்களுக்கென பிரத்யேக செயலிகளை வைத்துள்ளன. டிவி நிகழ்ச்சிகளையும், ஒளிபரப்பும் படங்களையும் செயலிகளிலும் வழங்க ஆரம்பித்துவிட்டன.

போகிறப் போக்கைப் பார்த்தால் திரையரங்குகளில் வெளியிடப்படும் அதேநாளில் ஸ்மார்ட்போன்களிலும் நேரடியாக படங்களை வெளியிட ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. அப்படி நடந்தால் கேபிள் டிவி நிறுவனங்களுக்கும், டிஷ் நிறுவனங்களுக்கும், திரையரங்கங்களுக்கும் நெருக்கடிதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்