சபாஷ் சாணக்கியா: தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிடுங்க...!

By சோம.வீரப்பன்

`யா

னையிடமிருந்து 1,000 அடியும், குதிரையிடமிருந்து 100 அடியும், கொம்புள்ள மிருகங்களிடமிருந்து 10 அடியும் விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், பொல்லாதவர்கள் வசிக்கும் ஊரை விட்டே போய் விடுங்கள் ' என்பது சாணக்கியர் அறிவுரை. சாணக்கியர் சொல்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் அனுபவப் பட்டுக்கொண்டு தானே இருக்கிறோம்? முட்ட வரும் மாடு, குதற வரும் நாய், பிடுங்க வரும் குரங்கு போன்ற மிருகங்களைக் கண்டவுடன் , நாம் அவற்றின் தன்மையறிந்து, எச்சரிக்கையாக ஓடி ஒளிந்து விடுகிறோம். ஆனால் , அவற்றை விட ஆபத்தான மனிதர்களிடமிருந்தும்தான். இருந்தாலும் தப்பித்துத் தள்ளிச் சென்று விடுகிறோமா ?

நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. தான் வாங்கிய புத்தம் புதிய ஸ்கோடா காரில் திருச்சியிலிருந்து திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தார். விடிகாலை நேரம். மனைவி மக்களும் அவருடன் இருந்தனர். வண்டியை ஓட்டுனர் ஓட்டிக் கொண்டிருந்தார். பெரம்பலூர் தாண்டிய பின் டாடா சுமோ போன்ற பெரிய கார் ஒன்று அவர்களை இடதுபுறம் வேகமாகத் தாண்டிச் சென்றது. அப்பொழுது இவர்களது காரை இலேசாக உரசி விட்டது. உடனே இருவரும் வண்டியை நிறுத்தித் தம் வண்டிகளுக்கு என்ன பாதிப்பு என ஆராய்ந்தனர். நண்பரின் காரில் பெரிய சிராய்ப்பு. அத்துடன் முன் விளக்கு உடைந்து நொறுங்கியிருந்தது. சரிசெய்ய ரூ.15,000 செலவாகலாம். இடித்த அந்த வண்டியில் பாணட் முன்பிருந்த இரும்புத் தடுப்பானில் மட்டும் கொஞ்சம் வர்ணம் போயிருந்தது. வேறு பாதிப்பு இல்லை.

நண்பரின் ஒட்டுனர் மேல் எந்தத் தவறும் இல்லை. எனவே நண்பர் சத்தம் போட்டுக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினார். நண்பரின் ஓட்டுனரும் கோபப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அந்த வண்டியில் இருந்த ஐவரும் முரடர்களாய்த் தெரிந்தனர். குடித்தும் இருந்தனர். நண்பருக்கு புதிய வண்டி, அதுவும் முதன் முதலில் கோவிலுக்குச் செல்லும் பொழுது இப்படி ஆகி விட்டதே எனும் பதற்றம்.

முதலில் திட்டினார். பின்னர் பணம் கேட்டார். அவர்கள் மறுத்தபின் வழிமறித்தார்.காவல் நிலையத்திற்கு வண்டியை எடுத்துச் செல்வோம் எனச் சொல்லிப் பார்த்தார். அவர்களோ மாறாக `நீங்கள் தான் எங்களுக்கு வழிவிடவில்லை, 10,000 ரூபாய் எடுத்து வையுங்கள் ' என ஆரம்பித்து விட்டனர் !

காரில் இருந்த அவர் மனைவிக்கு , நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டிருப்பதும், எந்நேரமும் கைகலப்பு வந்து விடும் என்பதும் புரிந்து விட்டது. அவர்களிடம் நியாயம் பேசிப் பயனில்லை என்று தன் கணவரை ஒரு வழியாய் அடக்கி ரூ. 5,000 அவர்களுக்குக் கொடுத்து, அந்த இடத்தை விட்டுப் பத்திரமாகக் கிளம்ப வைத்தார்!

நீங்களே சொல்லுங்கள்.அவர் மனைவி செய்தது தானே சரி? பல சமயங்களில் நம்மிடம் தவறில்லை என்றாலும், அச்சமயத்தில் நமக்கு நட்டமேயென்றாலும், பிறகு நடக்கக் கூடிய அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, அந்த இடத்தை உடனே காலி செய்து விட்டு நகர்வது தானே நல்லது?

`அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்பார் நம்ம வள்ளுவர்! `உன்னைவிட உயர்ந்தவர்களுக்கு மரியாதை செலுத்து; உனக்கு இணையாவர்களிடம் நட்பு பாராட்டு; உனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களிடம் அன்பு காட்டு' என்றெல்லாம் கூறிய பதஞ்சலி முனிவர், `அவர்களில் யார் துஷ்டராக இருந்தாலும் விலகி ஓடியே விடு' என்கிறார்!

எனது நண்பர் ஒருவர். வங்கியில் மேலாளராகப் பதவி உயர்வு பெற்று வடநாடு சென்றார். அலுவலக நண்பர்களிடம் சொல்லியும், வீடு கிடைக்கத் தாமதமானது. எனவே யாரோ சொன்னார்கள் என்று கிடைத்த வீட்டில் குடும்பத்தை வைத்து விட்டார். பின்னர் தான் அதே வீட்டின் மாடி வீட்டில் குடியிருந்த உரிமையாளரின், அவரின் மனைவியின் உண்மைக் குணம் தெரிந்தது. பால் பாக்கெட் திருடுவது, கடிதங்க ளைத் திறந்து பார்ப்பது, வீட்டு மணியை அடித்து விட்டு ஓடுவது போன்ற தொல்லைகள்.

காரணம்? ஆற்றாமை தான், அவரைப் போல் நம்மால் வசதியாக வாழ முடியவில்லையே, அவர் இங்கே வந்து கூடப் பிழைத்துக் கொள்கிறாரே எனும் பொறாமை தான்!

`வஞ்சகர்கள் பொறாமைப்படவும், வெறுக்கவுமே செய்வார்கள். ஏனெனில் அதுதான் அவர்களின் சுபாவம், அது தான் அவர்கள் யாரையும் பாராட்டும் முறை’. என்று சொல்வார் பிரெஞ்சுக் கவிஞர் விக்டர் ஹியூகோ. நண்பர் யோசித்தார், அந்த ஆள் போல நம்மால் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியாது. நமக்கும் நம் குடும்பத்திற்கும் நிம்மதி தான் முக்கியமென்று, செலவு, சிரமென்றாலும் பரவாயில்லையென்று வேறு நல்ல இடம் பார்த்துச் சென்று விட்டார்.

பொல்லாதவர்களை, ஏமாற்றுக்காரர்களை விட்டு நாமே விலகிப் போய்விட வேண்டுமென்று சாணக்கியர் சொல்வது பொருள் பொதிந்தது.அவர்களாக விலக மாட்டார்களே! நாம் தான் விட்டு ஓடணும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்