ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 5 | மூச்சை சீராக்குங்கள்; உங்கள் பாதை தெளிவடையும்: ‘ஆம்பியர்’ மின்வாகன நிறுவனர் ஹேமா அண்ணாமலை பேட்டி

By முகம்மது ரியாஸ்

அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் சிஇஓ-வாக மேரி பாரா 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம், நவீன வாகனத் துறையின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் சிஇஓ அவர்தான். உலக அளவில் வாகனத் துறையில் தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணிவிடலாம். முற்றிலும் ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த துறை அது. இப்படியான சவால்களுக்கு மத்தியில், ஹேமா அண்ணாமலை 2008-ம் ஆண்டு, கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஆம்பியர் மின்வாகன நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று உலகமே மின்வாகனத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்னால் நிலைமை வேறு. மின்வாகனங்கள் மீது மக்கள் ஆர்வம் கொண்டிராத காலகட்டம் அது.

இத்தகைய ஒரு சூழலில், ஆம்பியர் நிறுவனத்தை தொடங்கிய ஹேமா அண்ணாமலை, பல்வேறு தடைகளைக் கடந்து, பத்து ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் கவனிக்கப்படும் இருசக்கர மின்வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக அதை மாற்றிக்காட்டினார். ரத்தன் டாடா, கிருஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆம்பியர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஹேமா அண்ணாமலையின் ஆம்பியர் பயணம், சூரரைப் போற்று படத்தை நினைவூட்டக்கூடியது. தன்னுடைய இந்தப் பயணத்தை ‘தடைகளைத் தகர்த்து’ என்ற நூலாக எழுதியுள்ளார். 2019-ம் ஆண்டு ஆம்பியரை கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் வாங்கியது. அதைத் தொடர்ந்து வேளாண் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஹேமா அண்ணாமலை, 2022-ம் ஆண்டு ‘கிரீன் காலர் அக்ரிடெக் சொல்யூசன்’ என்ற வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். தன்னுடைய ஸ்டார்ட்அப் பயணத்தில் அவர் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஹேமா அண்ணாமலையிடம் உரையாடினேன்...

உங்கள் குடும்பப் பின்புலம் என்ன? அடிப்படையில் மென்பொருள் பொறியாளரான நீங்கள் எப்படி, வாகனத் துறை நோக்கி வந்தீர்கள்? - என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் திருச்செங்கோடு. அப்பா கல்லூரி பேராசிரியர். அம்மா பள்ளி ஆசிரியர். பணபலம் மிக்க குடும்பம் இல்லை. நடுத்தர வர்க்கம்தான். என்னோடு சேர்ந்து 6 பிள்ளைகள். அதில் 5 பெண் குழந்தைகள். கடைசிப் பெண் குழந்தை நான்தான். எனக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்று என் அம்மாவும் அப்பாவும் விரும்பினார்கள். தரமான பள்ளியில் சேர்த்தார்கள். பள்ளிப் படிப்பு முடிந்து, கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அங்கு பட்டம் பெற்று வெளியே வந்தேன். விப்ரோவில் வேலை கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் அங்கு வேலை பார்த்தேன். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புப் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அந்த சமயத்தில் எனக்கு திருமணம் ஆகி இருந்தது.

என் கணவர் குக்கிராமத்திலிருந்து வந்தவர். தொழில்முனைவில் மிகத் திறமைமிக்கவர். அவர் வழியாகவே, எனக்கு தொழில்முனைவு சிந்தனை வந்தது. 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சின்னச் சின்னதாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கி நடத்த ஆரம்பித்தேன். அவை அனைத்தும் சேவைத் துறை சார்ந்தவை. ஒருமுறை ஜப்பானில் வாகனத் துறை சார்ந்து கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என் கணவரும், நானும் கலந்து கொண்டோம். அப்போது டொயோட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உரையாற்றுகையில்,“ஐசி இன்ஜினின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மின்வாகனங்கள்தான் உலகில் புழங்கப்போகின்றன” என்றார்.

அவரது உரை எனக்கு பெரும் திருப்பமாக அமைந்தது. அதுவரையில் மென்பொருள் துறையில் புழங்கிவந்த எனக்கு, அவரது உரையைக் கேட்டப் பிறகு, மின்வாகனம் சார்ந்து செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அது குறித்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில், ஏனைய நாடுகள் மின்வாகனத் தயாரிப்பில் முன்னால் சென்று கொண்டிருந்தன. இந்தியா தொடக்க நிலையில் இருந்தது. மிகக் குறைந்த விலையில், உள்ளூர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருசக்கர மின்வாகனத்தை உருவாக்குவோம் என்று முடிவு செய்தேன். என் கணவர் மின்னணு பொறியாளர். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது. இப்படித்தான் என்னுடைய ஆம்பியர் பயணம் தொடங்கியது.

உங்கள் பயணத்தில் மிக மோசமான காலகட்டம் எது, அதை எப்படி சமாளித்தீர்கள்? - நாங்கள் ஆரம்பத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்டுவந்த முன்னணி பிராண்ட் பேட்டரியை எங்கள் மின் வாகனங்களில் பயன்படுத்திவந்தோம். அந்தப் பேட்டரிகளின் செயல்திறன் 6 மாதங்களிலேயே குறைய ஆரம்பித்தது. மின்வாகனங்களுக்கு அடிப்படையே பேட்டரிதான். அதுவே பழுதடைகிறதென்றால், நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்துவிடுவார்கள். எங்கள் வாகன விற்பனை கேள்விக்குறியானது. பல விநியோகஸ்தர்களை இழந்தோம். இந்த சமயத்தில் என் கணவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். புதிய பேட்டரிகளை வாங்கி அவற்றை வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு விநியோகஸ்தர்களையும் தேடிப் போய், பழைய பேட்டரிகளுக்குப் பதிலாக புதிய பேட்டரிகளை மாற்றிக்கொடுத்தோம். இதனால், விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தோம்.

அதேபோல் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 16 மணி நேரம் மின் தடை நிலவிய சமயத்தில் நொந்துவிட்டோம். மின்சாரம் இல்லையென்றால், யார் மின்வாகனம் வாங்குவார்கள். எப்படியோ, அந்தச் சூழலையும் சமாளித்து மேலெழுந்தோம். அடுத்ததாக, நிதிநெருக்கடி எங்களுக்கு மிகப் பெரிய சோதனையாக அமைந்தது. ஒரு வெளிநாட்டு நிறுவனம், எங்களுக்கு வழங்கிய முதலீட்டை திரும்பக் கோரியது. இந்தச் சூழலில், மத்திய அரசு மாற்று எரிசக்தி கட்டமைப்பை ஊக்குவிக்க வழங்கி வந்த மானியத்தை திடீரென்று நிறுத்தியது. இதனால், மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளானோம். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம்இல்லை. கடன் கழுத்தை நெரித்தது என்பார்களே அப்படியான ஒரு சூழல்.

நிறுவனத்தை மூடிவிட்டு செல்வதுதான் ஒரே தீர்வு என்று சொன்னார்கள். நான் நிறுவனத்தை மூடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். என் வாழ்நாள் சம்பாத்தியம், சொத்து, நகை என என்னிடம் இருந்த அனைத்தையும் இந்த நிறுவனத்துக்காக போட்டிருக்கிறேன். இந்த நிறுவனத்தை கைவிட்டுவிட்டால் எங்கள் உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். நான் இறை நம்பிக்கை உடையவள். இந்த மாதிரியான சமயத்தில் நான் இறைவனிடம் தஞ்சம் அடைந்துவிடுவேன். சீக்கிரமே, நிலைமை மாறியது. இறைவன் ஒரு வழியைக் காட்டினார். ரத்தன் டாடா.

வெளியீடு: எழுத்து பிரசுரம்

ஆமாம். ஆம்பியர் என்றால் கூடவே ரத்தன் டாடாவும் நினைவுக்கு வருகிறார். எப்படி ரத்தன் டாடாவிடமிருந்து முதலீடு பெற்றீர்கள்? - ரத்தன் டாடா ஒரு நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூர் வருவதாக கேள்விப்பட்டேன். எப்படியாவது அவரைச் சந்தித்து, ஆம்பியர் நிறுவனத்தைப் பற்றி எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். இணையத்தில் டாடா நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி இருந்தது. அதற்கு ஒரு மின்னஞ்சல் செய்தேன். அதை ரத்தன் டாடா பார்ப்பாரா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஒரு நம்பிக்கையில் அனுப்பினேன். அதன் பிறகு, ரத்தன் டாடாவின் உதவியாளர் நம்பரை தேடிப்பிடித்தேன். அவர் சொன்னார், “ஹேமா, உங்களுடைய மின்னஞ்சல் எங்களுக்குக் கிடைத்தது. டாடா விரைவில் பதிலளிப்பார்” என்றார். அது எனக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. அவர் சொன்னது போலவே, பதில்வந்தது. “டிசம்பர் மாதம் டாடா கோவை வருகிறார். அவருடனான சந்திப்புக்கு 10 நிமிடம் உங்களுக்கு ஒதுக்கி இருக்கிறோம்.” 10 நிமிடத்துக்குள் அவரிடம் நிறுவனத் தைப் பற்றி விளக்கிவிட வேண்டும்.

இதனால், எங்கள் நிறுவன தயாரிப்பு, யாரெல்லாம் அவற்றை பயன்படுத்துகிறார்கள் என்பவற்றை புகைப்பட ஆல்பமாக எடுத்துச் சென்றேன். டாடா அவற்றை ஆர்வமாக பார்வையிட்டார். “சார், எங்கள் தயாரிப்பை நீங்கள் நேரில் பார்வையிட முடியுமா” என்று கேட்டேன். “எனக்கு இப்போது வேறொரு ஒரு சந்திப்பு இருக்கிறது. அதன் பிறகு கொஞ்சம் நேரம் கிடைக்கும். நீங்கள் காத்திருக்க தயார் என்றால் நாம் பார்க்கலாம்” என்றார். சந்திப்பு முடிந்து வந்தார். நான் கொண்டு வந்திருந்த ஆம்பியர் மின்வாகனங்களைப் பார்வையிட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்தது. “ஹேமா எங்கள் அலுவலகத்திலிருந்து உங்களைத் தொடர்பு கொள்வார்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஓரிரு மாதங்களில் எங்கள் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்தார். அந்தச் செய்தி வெளியான பிறகு, எங்கள் நிறுவனம் இந்திய அளவில் கவனம் பெற்றது. இன்போசிஸ் கிருஷ் கோபாலகிருஷ்ணனும் முதலீடு செய்தார். அதன் பிறகு ஆம்பியர் வேகமாக வளர்ச்சி காண ஆரம்பித்தது.

பொதுவாக வாகனத் துறை என்பது ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறை. ஒரு பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன, அதை எப்படி எதிர்கொண்டீர்கள்? - ஆரம்பத்தில் நிறுவனத்துக்கு வரும் பலர், ‘சார்’ எங்கே என்று கேட்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், வாகன நிறுவனம் என்றால் ஆண்கள்தான் தலைமையில் இருப்பார்கள். நான் அவர்களிடம், “இங்கு நான்தான்‘சார்’. என்ன வேண்டும் சொல்லுங்கள்” என்பேன். அதன் தொடர்ச்சியாகவே பேண்ட், சட்டைக்கு மாறினேன். எங்கள் நிறுவனத்தின் பெண்களை அதிக எண்ணிக்கை வேலைக்கு அமர்த்த ஆரம்பித்தேன். நம் சமூகத்தில் பெண்களை தலைமைப் பொறுப்புக்கு நியமிப்பதற்கு தயக்கம் நிலவுவதை தொடர்ந்து பார்க்கிறேன். பெண்களால், நிறுவனத்தை தலைமையேற்று நடத்த முடியாது என்ற பார்வை பரவலாக உள்ளது. இந்தப் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். அனைத்துத் தொழில்முனை வோரிடமும் நான் சொல்வது இதுதான்: உங்கள் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் இருந்தால், அதை 30 சதவீதமாகவும், 50 சதவீதம் என்றால் அதை 80 சதவீதமாகவும் மாற்றுங்கள். உங்கள் நிறுவனம் வெற்றிபெறும்.

உங்கள் தொழில்முனைவு பயணத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் என்ன? - எதிர்காலம் குறித்து ரொம்பவும் பயப்படக்கூடாது. நாம் இப்போது இருக்கும் நெருக்கடிச் சூழலை மனதில் வைத்து எதிர்காலமும் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது என்பதை இந்தப் பயணத்தில் ஆழமாக உணர்ந்தேன்.மிகவும் நெருக்கடியான தருணங்களில், கண்ணை மூடி 15 நிமிடங்கள் அமைதியாக இருந்தால் போதும், பாதை புலப்படும். குழப்பமும், எதிர்மறையான சூழலும் நிலவும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில், நம் பாதையில் கவனம் சிதறாது, சிந்தையில் தெளிவுடன் பயணிக்க வேண்டுமென்றால் யோகாவும், தியானமும் அவசியம் என்பதை அனுவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். அவற்றை செய்யும்போது, நான் பிரபஞ்சத்துடன் ஒன்றுகிறேன். என் மூச்சு சீராகிறது. என்னுள் பெரும் ஆற்றல் ஊற்றெடுக்கிறது. குடும்பத்தில்இணக்கமானச் சூழலை உருவாக்குவது அவசியம். குடும்பத்தில் பிரச்சினை இருந்தால், வேலையில் நம்மால் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒருங்கிணைய வேண்டும். அப்படி ஒருங்கிணையும்போது, வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம்.

- riyas.ma@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

மேலும்