மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?

By வ.ரங்காசாரி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குக் கிடைத்துள்ள கடைசி நிதியாண்டு இது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பல துறையினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, விவசாயம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடைந்த பாதிப்புகளுக்கு ஈடாக பெரிய நிவாரணம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர்.

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. 14-வது நிதிக்குழு வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்கை 42% ஆக உயர்த்திப் பரிந்துரை செய்தது. குஜராத் முதலமைச்சராக இருந்து பிரதமரான நரேந்திர மோடி, ஒரு முதல்வராக இருந்தபோது எதிர்பார்த்ததை பிரதமரானவுடன் செய்ய வேண்டும் என்ற முடிவில் அதை அப்படியே முழுதாக ஏற்றார். இதனால் மாநிலங்களுக்குப் பிரித்துத் தரப்பட்ட நிதியளவு அதிகரித்தது. மத்திய அரசுக்கு செலவுக்கான நிதியாதாரம் குறைந்தது. மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டுவிட்டதால் திட்டச் செலவு, திட்டமல்லாச் செலவு என்ற பா

குபாடுகள் மறைந்தன. மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்வு செய்து நிறைவேற்றிக்கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த மூன்று முடிவுகளால் நல்ல நிர்வாகக் கட்டமைப்புள்ள மாநிலங்களாக இருந்தால் நிர்வாகத்தைச் சீரமைத்து நல்ல திட்டங்களை அமல் செய்திருக்கலாம். தமிழகம் உள்பட எங்குமே அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இதன் விளைவு அடுத்த (இந்த) ஆண்டில் வருமானம் பெருகவில்லை.

இதனாலேயே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு முன்பிருந்த அளவுக்குக்கூட செலவழிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டுகின்றன. இது பிரதமரின் தாராள மனதால் ஏற்பட்ட நெருக்கடி என்பதை வெளியில் சொல்ல முடியாமல் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது.

இதை உணர்ந்ததால்தான் என்.கே. சிங் தலைமையில் 15-வது நிதிக் குழுவை நியமித்தபோது, மத்திய அரசின் செலவுகளுக்கு ‘போதிய நிதி’ கிடைக்கும் வகையில் பரிந்துரை இருக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாதச் சம்பளக்காரர்களும் வருமான வரி செலுத்துவோரும் ஆண்டுதோறும் எதிர்பார்த்து ஏமாந்து போவது போல இந்த முறையும் அடையாளமாக ரூ.50,000 அளவுக்கே வரிவிலக்கு வரம்பு உயர்த்தப்படும் என்று அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செல்வ வரி போன்றவற்றை முற்றாக ரத்து செய்துவிடலாம் என்கிற கருத்தும் ஒரு பக்கம் உள்ளது. முற்றாக ரத்து செய்யாவிட்டாலும் கூட ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் இனி வருமான வரியும் செலுத்த வேண்டாம், கணக்கும் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கலாம். இப்படி அறிவிப்பதால் கோடிக்கணக்கானவர்கள் வருமான வரி வரம்பிலிருந்து விடுதலை அடைவார்கள்.

குறைந்த வருவாய்ப் பிரிவினர் நீக்கப்படுவதால் உயர் வருவாய்ப் பிரிவினர் மட்டுமே கணக்கையும் கொடுத்து வரியையும் செலுத்த நேரும். வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலர்களுக்குப் பணிச் சுமை கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும் வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களிடம் விசாரணை நடத்தவும் போதிய நேரமும் ஆள் பலமும் கிடைக்கும்.

வருமான வரி செலுத்துவோருக்குச் சலுகைகளை அதிகப்படுத்த ப. சிதம்பரம் தொடங்கி அருண் ஜேட்லி வரை பலரும் தயங்குவதற்குச் சொல்லும் முதல் காரணம், ‘வரி செலுத்துவோரைப் பிடியிலிருந்து நழுவவிட்டால் அவர்களை மீண்டும் பிடிக்குள் கொண்டு வருவது கடினம்’. இது 100% பச்சைப் பொய்.

பெரும்பாலான வருமான வரிதாரர்கள், டிடிஎஸ் என்ற முறையில் பணிபுரியும் துறை, நிறுவனம் ஆகியவற்றால் மூல வருவாயிலிருந்தே வரிப் பிடிப்புக்கு உள்ளாகின்றனர். ஓரிரு ஆண்டுகள் சோதனை அடிப்படையில் இவர்களை நீக்கினாலும், மீண்டும் இவர்களை அடையாளம் காண்பதோ வரி வசூலிப்பதோ கடினமான செயலே இல்லை.

அதுவும் இப்போது ஆதார், பான் கார்டு, கணினி மூலமான வங்கிக் கணக்கு போன்றவை இருக்கும்போது இது 100% சாத்தியமே. ஆனால் இதை முயற்சிகூட செய்யாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், வருமானவரி அலுவலகங்களையும் அதிகாரிகளையும் குறைந்த வருவாய்க் கணக்குதாரர்களைக் கொண்டு சளைக்க வைக்காமல் இருந்தால் அவர்கள் உயர் வருவாய்ப் பிரிவினரின் கணக்குகளை ஆராய நேரம் கிடைத்துவிடும், அதன் பலனை மக்கள் எதிர்பார்ப்பார்கள் என்பதுதான்.

அதாவது அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்பதால் அல்ல பெரும் பணக்காரர்களிடமிருந்து அதிக வரி வசூலிக்க நேரிடுமே, வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயம் நேரிடுமே என்ற கவலைதான். இப்படிச் சொல்வதற்குக் காரணமே அரசு அளித்துள்ள சில புள்ளி விவரங்கள்தான். அவற்றைப் பார்ப்போம்.

# 2014-15 நிதியாண்டில் வருமான வரி அலுவலகத்தில் கணக்கு சமர்ப்பித்தோர் 3.65 கோடி.

# 2015-16 நிதியாண்டில் வருமான வரி அலுவலகத்தில் கணக்கு சமர்ப்பித்தோர் 4.07 கோடி.

# இவர்களில் வருமான வரி செலுத்தியோர் மொத்தம் 2.06 கோடி.

# 2015-16-ல் மொத்த மக்கள் தொகையில் வருமான வரி செலுத்தியவர்கள் 1.7%.

# 2014-15-ல் வருமான வரியாக திரட்டப்பட்ட தொகை ரூ.1.91 லட்சம் கோடி.

# 2015-16-ல் வருமான வரியாக திரட்டப்பட்ட தொகை ரூ.1.88 லட்சம் கோடி.

# 2.01 கோடிப் பேர் கணக்கு தாக்கல் செய்தனரே தவிர வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை.

# 9,690 பேர் மட்டும்தான் தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தினார்கள்.

# ஒரே ஒருவர் மட்டுமே ரூ.238 கோடி வரி செலுத்தியுள்ளார்.

# 2.8 கோடிப் பேர் ரூ.19,931 கோடி வரியாகச் செலுத்தினர். அவர்களுடைய ஆண்டு வருமானம் ரூ.5.5 லட்சம் – ரூ.9.5 லட்சம்.

# 1.84 கோடிப் பேர் ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்துக்கும் குறைவு என்று கணக்கு கொடுத்தனர்.

# இவர்களுடைய சராசரி மாத வருமானம் ரூ.24,000.

# கணக்கு தாக்கல் செய்த 4.07 கோடிப் பேரில் 82 லட்சம் பேர் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை என்று கூறியுள்ளனர்.

# ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை வருமானமுள்ளவர்கள் 1.33 கோடிப் பேர்.

தொழில், வியாபாரம் செய்து வீடு, வாகனம் என்று வசதியாக உள்ள ஏராளமானோர் தங்களுடைய வருமானம் ‘விவசாயத்திலிருந்து கிடைத்தது’ என்று கணக்கு கொடுத்து முழு வரி விலக்கு பெற்றுள்ளனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் சொந்தமாக வீடு, நிலம் உள்ளவர்கள் கூட ‘கூலி வேலை’ என்று கூறி வருவாய்த்துறையிடமிருந்து வருமானச் சான்று பெறுகின்றனர்.

மிகப் பெரிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தணிக்கையாளர்கள், பொறியாளர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் செலுத்தும் வருமான வரி அவர்கள் காட்டும் ஆண்டு வருமானத்தில் (மறைப்பது அதிகம்) அதிகபட்சம் 30% ஆக இருந்தாலும் அதற்கும் பல விலக்குகளையும் கழிவு களையும் தகுந்த தணிக்கையாளர்களைக் கொண்டு பெற்றுவிடுகின்றனர். வாங்கும் தொகைக்கு ரசீது தரும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள் உண்டா?

மாதச் சம்பளக்காரர்களுக்கு தரும் வருமான வரிச் சலுகைகளான கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் போன்றவை எல்லோருக்கும் உதவுவதில்லை. மாற்றுத் திறனாளிகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டவர்கள், வயதான தாய் தந்தையரைப் பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், குடும்பச் சூழல் காரணமாக தான் ஓரிடமும் குடும்பம் ஓரிடமுமாக இருந்து பணியாற்ற வேண்டியவர்களின் செலவுகளையும் நிதியிழப்புகளையும் எந்த நிதியமைச்சருமே கருத்தில் கொள்வதில்லை.

அவர்களைப் பொருத்தவரை வருமானத்தை மறைக்க முடியாதவர்கள், குறைக்கத் தெரியாதவர்கள் எல்லாம் வரி செலுத்த வேண்டியவர்களே. ‘தக்கது பிழைக்கும்’ என்ற கருத்துக்கு ஏற்ப கறுப்புப் பணக்காரர்களுக்கு ஆதரவாகத்தான் வரி விதிப்புக் கொள்கைகள், நடைமுறைகள், சலுகைகள் தொடர்கின்றன.

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலான பிறகு இந்தக் கட்டுரையில் உள்ள உண்மைகள் மாதச் சம்பளக்காரர்களின் நினைவுக்கு வரும்.

-

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்