கிழக்கில் விரியும் கிளைகள் 30: பித்தம் நீக்கும் புளிப்பு பழம்

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

ஏறத்தாழ 20 மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய மரமான விளாமரம், முட்கள் நிறைந்தது. ‘அருகாது ஆகிப் பல பழுத்த கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா' என்ற நாலடியாரின் 261-வது பாடல் விளா மரத்தை வௌவால் குறுகாததற்குக் காரணம், அதன் முள்ளும் பழத்தின் தடித்த ஓடும்தான். விளா மரத்தின் பட்டை உடும்பு போன்றது, பொரிந்து காணப்படுவது என்பதை 'பொரியரை விளவின்', ‘உடும் படைந்தனை நெடும் பொரி விளவின்' போன்ற சங்கப் பாடல் சொற்றொடர்கள் குறிக்கின்றன.

இந்த மரம் மூன்று முதல் ஒன்பது சிற்றிலைகள் கொண்ட கூட்டிலைகளைப் பெற்றது. தளிர் இலைகள் மென்மையானவை, சற்றுப் பிசுபிசுப்பானவை. கிராமத்தில் சிறுவர்களாகிய நாங்கள் இந்தத் தளிர் இலைகளை நண்பர்களின் முதுகிலும், கன்னத்திலும், கைகளிலும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்று அப்பி ஒட்டிவிடுவதுண்டு. இதே நிகழ்வைப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, திருமுருகாற்றுப்படையில் படித்துவிட்டு (“வெள்ளிற குறுமுறி கிள்ளுப தெரியாக்” திருமுருகாற்றுப்படை 37) வியப்படைந்துள்ளேன். இலைகள் சீரக மணம் கொண்டவை. விளா வேர்கள் மிக ஆழமாகத் தரையைப் பிளந்துகொண்டு செல்பவை.

காயும் கனியும்

விளாமரம் டிசம்பர் முதல் மே மாதம்வரை பூக்கும். பூக்கள் இளம் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தவை. சற்றுத் திருகி (Twisted) காணப்படுபவை. மணமுடையவை என்றாலும் அணியத்தக்கவையல்ல. காய்களும் கனிகளும் ஜனவரி முதல் ஆகஸ்ட்வரை, குறிப்பாகக் கோடைக் காலத்தில் காணப்படும் 'பொரியரை விளவின் புண்புற விளைபுழல், அழலெறி கோடை தாக்கலிற்கோவல குழலென நினையும் நீரில் நீளிடை' (அகநானூறு 219) என்ற சங்க இலக்கிய வரிகள் இரண்டு தகவல்களை அளிக்கின்றன: ஒன்று, கனிகள் கோடையில் காணப்படுபவை; இரண்டு, கனிகளில் அடிக்கடி உள் சதை சிதைந்து வெறும் ஓடு மட்டும் உள்ளீடற்றுக் காணப்பட்டு ஓட்டில் உள்ள ஒன்றிரண்டு துளைகள் வழியாகக் கோடைக் காற்று உள்ளும் வெளியும் சென்று குழல் போன்று இசை பாடும். இதை நாம் இன்றும்கூடக் காணலாம்.

காயும் கனியும் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையவை, தடித்த ஓட்டை பெற்றவை. பந்து போன்ற உருவம் கொண்டவை. ‘….. விளவி ஆட்டொழி பந்திற்கோட்டு மூக்கிறுபு' (நற்றிணை 24.2). 'விளாம்பழங்கமழுங் கமஞ்சூற்குழி சிப் பாசந்திறை தேய் கான் மத்த நெய் தெரியியக்கம் வெளில் முதன் முழங்கும்' (பந்து கிடப்பது போன்று விளாம்பழம் தரையில் பரவி இருக்கும்) - (நற்றிணை 12). 'விளங்காய் திரட்டினார் இல்லை' (நாலடியார் 107) போன்ற இலக்கிய வரிகள் விளாம்பழம் உருண்டு, திரண்டு, பந்து போன்று இருப்பதைச் சுட்டுகின்றன.

மனிதனுக்கும் யானைக்கும் உணவு

‘பொருள் விளங்கா உருண்டை' என்று இன்று பயன்பாட்டில் உள்ள சொற்றொடர் ‘பொரி விளாங்காய் உருண்டை' என்ற சொற்றொடரின் மருவே என்று பி.எல். சாமி `சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம்’ என்ற அவருடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். (விளாங்காய் போன்ற உருண்டையான பொரி உருண்டை) கனியின் சதைப்பற்றான உள்ளீடு புளிப்பு சுவை கொண்டது ('புளிவிளங்கா' நாலடியார் 328)

விளாம்பழம் நல்ல உணவுப் பொருள். நற்றிணையில் இந்தப் பழத்தை ‘வெள்ளியில் வல்சி' என்று கூறியிருப்பதிலிருந்து இது ஒரு நல்ல உணவுப் பொருளாகப் பன்னெடுங்காலமாகத் திகழ்ந்து வந்துள்ளது என்பது தெரியவருகிறது. சுபச் சடங்குகளில் மட்டுமின்றி, ஒருவர் சாகுந்தறுவாயில் இருக்கும்போதும் இறந்த பின் ஈமச்சடங்குகளைத் தொடர்ந்து செய்யப்படும் சாந்தி சடங்குகளிலும் விளாம்பழம் ஒரு உண்ணும் பொருளாகக் கொடுக்கப்பட்டுவந்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி யானைகளும் விளாம்பழத்தை உண்டதை (‘வேழம் உண்ட விளம்பழம்’) தமிழிலக்கியம் குறிப்பிடுகிறது.

பித்த மருந்து

கனியில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டீன், தயமின், சிட்ரிக் அமிலம், டேன்னிக் அமிலம், புரதங்கள், கார்போஹைட்ரேட்கள் போன்ற ஊட்டப் பொருட்கள் பல உள்ளன. ஊட்டச் சத்துகள் மட்டுமின்றி மருத்துவ வேதிப் பொருட்கள் பல உள்ளதால் விளாம் பழம் உணவாக மட்டுமல்லாமல், நல்ல மருந்தாகவும் பயன்பட்டுள்ளது. காயின் சதைப்பற்றைக் கிராமங்களில் சட்னி போன்று தயாரித்துத் தோசை, இட்லி, பொங்கல் போன்றவற்றோடு சேர்த்து உண்பார்கள்.

கனியின் சதை, தொண்டைப் புண்களை நீக்கும். ஓடு, சதை விஷக்கடி விளைவுகளைப் போக்கும். கனியின் மிக முக்கியமான பங்கு, பித்தத்தைப் போக்குவதுதான். இதனுடைய வடமொழிப் பெயரான `கபித்தம்’, இதன் காரணமாக ஏற்பட்டதுதான். கனியின் சதை கபித்தாஷ்டக சூரணமாகப் பித்தத்துக்குக் கொடுக்கப்படுகிறது.

இந்தச் சூரணத்தில் சதையோடு திப்பிலி, மிளகு, ஏலக்காய், லவங்கப்பட்டை, சித்திர மூலம், பிரியாணி இலை, தனியா, ஓமம், திப்பிலி வேர், இந்துப்பு, பேராமூட்டி வேர் போன்றவை தகுந்த அளவில் கலக்கப்படுகின்றன. இதை உண்பதால் பித்தம் நீங்குவதோடு நரம்பும் எலும்பும் வலுப்படுத்தப்படுகின்றன. இதயத் துடிப்பு சரியான அளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.

(அடுத்த வாரம்: ஊட்டம் நிறைந்த உள்நாட்டு தாவரம்)
- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 mins ago

விளையாட்டு

59 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்