இப்போ நான் விவசாயி : பயிர்களைத் தேடும் பெண் டிடெக்டிவ்

By வா.ரவிக்குமார்

“மண் வெட்டி, கடப்பாரை, தாவரம் வெட்டும் கத்தரிக்கோல், மறுசுழற்சி செய்யக்கூடிய பெரிய பைகள் அத்தனையும் என்னுடைய கார் டிக்கியில் எப்பவும் தயாரா இருக்கும். காரை ஓட்டிக்கிட்டுப் போகும்போது, ரோட்ல எங்கயாவது மாட்டுச் சாணம் இருப்பதைப் பார்த்தால் உடனே காரை நிறுத்திட்டு, அந்தச் சாணத்தைச் சேகரித்த பின்னாடிதான் வண்டி நகரும். சாணத்தை அள்ளுவதற்கு முகம் சுளிப்பவர்கள் விவசாயத்துக்கு லாயக்கில்லாதவர்கள்,” என்கிறார் ஏ.எம். மாலதி. முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட டிடெக்டிவ் ஏஜென்சி நடத்திவந்தாரே, அதே மாலதிதான். இப்போது அவருடைய ஆர்வம் மாடித் தோட்டம், இயற்கை வேளாண்மை மீது திரும்பி நாளாகிவிட்டது.

அவரது வீட்டு மாடிக்குப் போனால் எங்கெங்கும் கொடிகள் படர்ந்திருக்கின்றன, செடிகள் தோள் உயரம் வளர்ந்திருக்கின்றன, குட்டி மரங்கள் எனச் சிலிர்த்து நிற்கப் பசுமையாய்ச் சிரிக்கிறது தோட்டம். செடி வளர்க்கணும்ணு ஆசை இருக்கு, ஆனா வீட்ல இடம் இல்லையே… என்பவர்களுக்கு, உண்மையில் அவர்களுடைய மனதில்தான் இடம் இல்லை என்கிறார் மாலதி. ஆரம்பத்தில் அவரது வீட்டின் சமையலறையை ஒட்டியிருக்கும் 2 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட சின்ன சந்தில்தான் செடிகளை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்.

சவால் தோட்டம்

“பராமரிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காகச் சமையலறையை ஒட்டியிருக்கும் 2 அடி இடத்தைச் சிமெண்ட் பூசி மெழுகிவிடலாம் என்றார்கள். நான் சம்மதிக்கல. அந்த இடத்தில் நான் செடி போடப் போறேன்னு சொன்னதற்கு வீட்டில் இருப்பவர்களே சிரித்தார்கள். இதென்ன உங்க கிராமம்னு நெனச்சுகிட்டியா… செடி வெச்சா போதுமா.. அதைப் பராமரிக்க உன்னால முடியுமான்னு யோசி என்று அக்கம்பக்கத்திலிருந்தும் விதவிதமாக உபதேசங்கள் வந்துவிழுந்தன. இப்படிப் பலரும் செடி வைப்பதற்கு எதிராகக் கூறிய கருத்துகள், அந்த இடத்தில் செடிகளை வளர்த்தே தீருவது என்று தீர்மானமாக என்னை இயங்க வைத்தது.

அந்த இடத்தில்தான் முருங்கை, புடலை, தக்காளி போன்றவற்றை வளர்த்தேன். இது நடந்தது 2005-ல். அடுத்த ஆண்டிலேயே அந்தச் சின்ன இடத்திலேயே திராட்சை நட்டேன். கீழேயிருந்து வளர்ந்த கொடியை இரண்டாவது மாடியில் படரவிட்டேன். அந்த ஆண்டின் இறுதியிலேயே ஒரே கொடியிலேயே நல்ல விளைச்சல் எடுத்தேன். அது பேப்பர்ல வரவும் நிறைய பேர் என்னிடம் பேசினார்கள். நம்மாழ்வாரின் சீடரான சித்தர் என்பவரின் இயற்கை விவசாய ஆலோசனையும் எனக்குக் கிடைச்சது. இந்தத் துறையில் தீவிரமாக இறங்கிட்டேன்” என்கிறார் மாலதி.

கலப்புப் பயிர் வேளாண்மை

இரண்டு அடி நிலத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் செடிகள் வளர்க்க ஆரம்பித்தவர் இன்றைக்கு 20 சென்ட் நிலத்தில் புடலை, சுரைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், தக்காளி, மிளகாய், சோளம், 20 வகைக் கீரைகள் ஆகியவற்றை இயற்கை வேளாண் முறையில் பயிரிட்டு, அடையாறில் உள்ள ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் என்கிற இயற்கை அங்காடிக்கு விற்பனைக்குக் கொடுத்துவருகிறார்.

“நானும் ஆரம்பத்துல நெல் போட்டிருக்கிறேன். கால் ஏக்கருக்கும் குறைந்த நிலத்தில் ஏழு மூட்டை விளைச்சல் எடுத்தேன். இந்தப் பகுதியில் சாலை வசதிக்காக எங்களுடைய நிலத்தைக் கொடுக்க வேண்டி வந்தது. பிறகுதான் ஒட்டியம்பாக்கத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்துவருகிறேன். என்னுடைய வழிகாட்டி சித்தரின் அறிவுறுத்தலின்பேரில் மரப் பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கிள்ளினால் கீரை, பறித்தால் காய்கறி, உலுக்கினால் பழம், தோண்டினால் கிழங்கு, தேடினால் முட்டை, அலைந்து தேடினால் தேன், வேட்டையாடினால் மாமிசம். இப்படி மனிதர்களின் எல்லாச் செயல்களோடும் விவசாயமும் அதில் விளையும் பொருட்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

ஒரு வயல் என்றால், அதில் எல்லாப் பயிர்களும் விளைய வேண்டும். இந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் விதமாகவே என்னுடைய வயலில் கலப்புப் பயிர்களைப் பயிரிட்டு வருகிறேன். தகுந்த கால இடைவெளிகளில் இதற்கான விதைகளை விதைக்க வேண்டும். நேரடி பராமரிப்பும் வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஊட்டக் கரைசல் அளிப்பது, இயற்கை பூச்சிவிரட்டி தெளிப்பது, நுண்ணுயிரி உரத்தைத் தகுந்த அளவில் நீருடன் கலந்து தெளிப்பது போன்றவை கவனமாகப் பின்பற்றப்பட வேண்டியவை.

நட்புப் பயிர்களின் பலம்

சமூக அமைப்பில் நாம் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, மார்க்கெட் எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல்தான் பயிர்களும் நினைக்கும். ஒரு பயிருக்கு அருகில் வளர்க்கப்படும் இன்னொரு பயிரை நட்புப் பயிர் என்பார்கள். என்னுடைய நிலத்தில் பத்தடியிலேயே தென்னையை அடுத்து வாழை, முருங்கை, மா, இன்பம்புளி (கேரள நெல்லி ரகம்), பலா ஆகியவற்றைப் போட்டிருந்தேன். இதில் 10 ஆண்டுகளுக்குப் பின் வாழை பட்டுவிட்டது. பலா வளரவில்லை. ஆனால், மீதி பயிர்கள் எல்லாம் நன்றாக வளர்ந்துள்ளன.

ஒன்றையொன்று சார்ந்து வளரும் வாய்ப்பு நட்புப் பயிர்களை வளர்க்கும்போது கிடைக்கும், பலன்களும் அதிகம். வெண்டைப் பயிர் காய்விடும்போதே, அதன் நட்புப் பயிரான அவரை விதையைத் தூவிவிடவேண்டும். வெண்டை அறுவடைக்குப் பின், அதன் மீதே அவரைக்கொடி படர்ந்துவிடும். வெண்டை-காராமணி, சோளம்-காராமணி, துவரை-வாழை, தென்னை-வாழை, மிளகாய்-வெங்காயம், மஞ்சள் பயிருக்கு நடுவில் ஏழு பயிர்கள் என ஊடுபயிர்களாகப் போடலாம்” என்று தன் தோட்டத்தைப் பற்றி பேச்செடுத்தால் உற்சாகமாகப் பேசிக்கொண்டே போகிறார் மாலதி.

சமீபத்தில் கோவா சென்றிருந்தபோது மல்டி-ஃபார்மிங்கில் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நேரடியாகப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகச் சொல்லும் மாலதி, மாடித் தோட்டம் போடுபவர்களுக்கு ஆலோசனைகளையும் வாரி வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

மாடித் தோட்டம் சில யோசனைகள்

# சிறிய அளவில் தோட்டம் போட நினைப்பவர்கள், முதலில் கீரை போடுவதில் தொடங்குவது சிறந்தது. சின்னச் சின்னதாகப் பாத்தி கட்டி, முறையாகப் பராமரித்தாலே சிறு கீரை, முளைக்கீரை, பச்சை, சிவப்புப் பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாலக் கீரை, பசலைக் கீரை, முருங்கை கீரை என ஏழு வகையான கீரைகளை வளர்க்கலாம்.

# அறுவடைக்குத் தயாராகும் பருவம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகக் கீரை நன்கு வளர்ந்தவுடன் பூச்சிகள் வர ஆரம்பிக்கும். அதை விரட்ட இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைத்து நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

# வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் கொட்டை, மஞ்சள்தூளை நீரில் கலந்து ஐந்து மணி நேரம் கழித்துத் தெளிக்கலாம். இதுவும் ஒரு கிருமிநாசினிதான், பூச்சிகளை விரட்டும்.

# சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு உரத் தண்ணீர் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டுபவர்கள் மாடித் தோட்டம் போடுகிறேன் பேர்வழி என்று ஆர்வக் கோளாறாக ஈடுபடக் கூடாது.

தொடர்புக்கு: 9791072194

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்