கிழக்கில் விரியும் கிளைகள் - 22: எப்படி வந்தது வெளிக் கடம்பு?

By கு.வி.கிருஷ்ணமூர்த்தி

பண்டைய தமிழரின் ஆன்மிக வாழ்வில் இந்தியாவின் மற்ற பகுதிகளின் தாக்கம் அதிகமாக ஏற்படத் தொடங்கியபோது, கடம்ப மரமும் முருகனோடு அதற்கு இருந்த தொடர்பும் அதிக விவாதங்களுக்கு உள்ளாகின. சிவன் (மகாதேவன், ருத்ரன்), விஷ்ணு, சுப்பிரமணியா, கணேசா (பிள்ளையார், கணபதி, விநாயகா) போன்ற கடவுள்களின் தமிழக நுழைவாலும், தாக்கத்தாலும் அவர்களுடன் அந்தந்தப் பகுதிகளில் தொடர்புபடுத்தப்பட்ட தாவரங்களும் ஆன்மிக முக்கியத்துவம் பெறத் தொடங்கின.

தமிழகத்தில் ஏற்கெனவே இந்த உள்ளகத் தெய்வங்களின் (Indigeous Gods), குறிப்பாக முருகனின் தற்போதைய பன்முகத்தன்மை சிக்கலான - கூட்டான - ஒன்றியமைந்த தன்மைகளாலும் தோற்றங்களாலும் ஏற்பட்டதாகும். பல சங்க இலக்கியப் படைப்புகளில் குறிக்கப்பட்டுள்ளதைப் போன்று, குறிப்பாகப் பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையிலும் முருகன், சேயோன் (செய்யோன்), செவ்வேள், வேலன், கடம்பன் போன்ற முற்றிலும் தமிழகப் பெயர்களால் அழைக்கப்பட்ட முருகன், பிறகு குமரன், கார்த்திகேயன், ஸ்கந்தன் (கந்தன்), சண்முகன் (ஆறுமுகன்), சுப்பிரமணியன் போன்ற இதர பெயர்களால் அழைக்கப்பட்டான். முருகனின் தமிழ்க்கூறுகளுடன் வேறு பகுதிகளின் கூறுகள் இணைந்தன.

வெளிக் கடம்பு வந்த விதம்

சுப்பிரமணியன் என்ற பெயர் கர்நாடகா கோவா பகுதிகளில் தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. தமிழகத்தில் சுப்பிரமணியனுக்கான பழைய கோயில்களில் எதுவுமே 8 9 நூற்றாண்டுக்கு முந்தையதல்ல என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. கர்நாடகா-கோவா பகுதியில் நியோலமார்க்கியா கடம்பா என்ற வெளிக் கடம்ப மரம் மிகவும் இயல்பாக வளர்கிறது என்பதும் சுப்பிரமணியனுடன் இந்தக் கடம்ப மரமும் தமிழகத்துக்கு ஒரு வளர் தாவரமாக வந்திருக்க வேண்டும் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில்தான் கடம்பத்தீவும் காணப்பட்டது.

இத்தகைய வரவின் காரணமாக நியோலமார்க்கியா கடம்பா முருகனின் தமிழ்க்கூறுகளில் ஒன்றாகத் திகழாமல், பின்னால் வந்த சுப்பிரமணியனின் கூறாக, வெளிக் கடம்ப மரமாக, தமிழகத்தில் ஒரு வளர்ப்புத் தாவரமாகத் திகழ்ந்திருக்க ஒரு வாய்ப்பு உள்ளது என்றாலும் இதற்கான நிச்சயமான ஆதாரங்கள் இல்லை.

புராணப் பதிவுகள்

நியோலமார்க்கியா கடம்பா சித்ரகூடா மலை, பஞ்சவடி, இந்திரப்பிரஸ்தா போன்ற காட்டுப் பகுதிகளில் காணப்பட்டதாகப் பண்டைய புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீதை காணாமல் போனபோது, அவள் எங்கு சென்றாள் என்று ராமர் கடம்ப மரத்திடம் கேட்டதாக ராமாயணத்திலும், இது காட்டுப் பகுதிகளில் வளர்க்கப்பட்டதாக மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர, இந்த மரம் காளிதாசரின் சாகுந்தலத்திலும், பிரஹத் சம்ஹிதாவிலும், சரகச் சம்ஹிதாவிலும் சுட்டப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இந்த மரமும் நீர்க்கடம்பும் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருந்ததற்கான பண்டைய ஓவியச் சான்றுகள் உள்ளன (பார்க்க ஓவியம்).

புராணக் காலியநர்த்தனா கதையில் கிருஷ்ணர் கடம்ப மரத்திலிருந்து காலியா என்ற பாம்பின் மீது குதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இது ஹரிப்ரியா என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இந்த மரம் சுப்பிரமணியருடன் தொடர்புபடுத்தப்படுவதில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழக முருகனுடன் தொடர்புடைய நிஜமான கடம்ப மரம் மித்ரகைனா பார்விஃபோலியாதான் என்பதும், பிற்காலத்தில் பக்தி இலக்கியக் காலத்துக்குப் பின்பு, அதாவது 7-ம் நூற்றாண்டுக்குப் பிறகு நிஜமான கடம்ப மரத்தைப் பற்றி கண்டறிய முடியாத மக்கள் தமிழகத்துக்கு வெளியிலிருந்து வளர் தாவரமாக வந்த நியோலமார்க்கியா கடம்பாவை, நிஜக் கடம்ப மரத்தோடு தொடர்புபடுத்தியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது தாவரவியல் அறிஞர்களின் பொதுவான கருத்து.

(அடுத்த வாரம்: மகிழ்விக்கும் மகிழம்)

- கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்