நல்ல பாம்பு 16: ஜோசப் கண்டறிந்த ஓடுகாலி

By செய்திப்பிரிவு

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்துடன் (Zoological Survey of India (ZSI) - Kolkata) இணைந்து, கிழக்கு மகாராஷ்டிரத்தில் ஊர்வன சார்ந்த விவரம் சேகரிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் புது அனுபவமும் மகிழ்ச்சியும் கிடைத்தன. யவத்மால் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே சந்தித்த நண்பர் தான் மீட்ட பேண்டட் ரேசர் எனப்படும் (Banded Racer – Argyrogena fasciolata) ஓடுகாலிப் பாம்பைக் காண்பித்தார்.

மூன்றடி நீளத்தில் கைவிரலைவிடச் சற்று கூடுதலான தடிமனில் உடல் முழுவதும் பழுப்பு நிறத்திலிருந்தது. அதன் மீதிருந்த பட்டைகளை உற்றுப் பார்த்தால் ஒழியப் புலப்படவில்லை. ரோமுலஸ் விட்டேகர், அசோக் கேப்டன் இணைந்து எழுதிய ‘இந்தியப் பாம்புகள்’ கள வழிகாட்டி புத்தகத்தில், இப்பாம்பு பிறக்கும்பொழுது உடலில் பட்டைகளுடனும் வளர்ந்து பருவம் எய்திய நிலையில் பட்டைகளற்றும் இருக்கும் எனவும், இவை தீபகற்ப இந்தியாவில் பரவலாகவும் கிழக்கில் மேற்கு வங்கம் வரையும் தெற்கே தென்கிழக்குக் கடற்கரை தவிர்த்து தமிழ்நாட்டில் திருநெல்வேலி வரையும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஓடுகாலி

திருநெல்வேலியில் காணப்படும் அதே பாம்பைத் தென்கிழக்குக் கடற்கரை பகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையை ஓட்டிய நிலப்பரப்பு, வறண்ட நிலப்பரப்பு எனப் பல இடங்களில் மறைந்த நண்பர் நவீன் ஜோசப்பும் நானும் பார்த்துப் பல தகவல்களைக் கண்டறிந்திருந்தோம். இவை மிக வேகமாக ஊர்ந்து செல்லக்கூடியவையாக இருப்பதால் ‘ஓடுகாலிப் பாம்பு’ என அழைக்கிறார்கள். மென்மையான செதிலோடு நீண்ட ஒல்லியான உடல், வால் சற்று நீண்டு மொத்த உடலில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. மூன்றடிக்கும் கூடுதலான நீளம். பிறக்கும்பொழுதும் வளர்ந்து பருவம் எய்திய பிறகும் உடலில் காணப்படும் பட்டைகள் ஒன்றுபோல் இருந்தன. ஆரம்பத்தில் மேலுடலில் பழுப்பு நிறம் கலந்து காணப்படும் வெள்ளைப் பட்டைகள், வால் நோக்கிச் செல்ல மங்கி வைக்கோல் நிறத்தில் காணப்படுகின்றன. தலையின் மேலே சில வெள்ளைப் புள்ளிகளும் பிடரியில் ‘][‘ போன்ற குறியும் காணப்படுகிறது. இதன் நீண்ட முகவாய் இப்பாம்புடன் குழப்பிக்கொள்ளும் பிற பாம்பினங்களிலிருந்து பிரித்தறிய உதவும். வட்டவடிவ பழுப்பு நிறக் கண்ணின் நடுவே கறுப்பு பாவையைக் கொண்டுள்ளது.

கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதி, வறண்ட பூமி, விளைநிலங்கள், மனிதக் குடியிருப்பு எனப் பல சூழல்களில் இவற்றைப் பார்த்திருக்கிறோம். பகலாடியாகவும் தரை வாழ் பாம்பினமாகவும் இருக்கும் இவை கற்குவியல், பொந்துகள், இடுக்குகள் என மறைந்து வாழக் கூடிய இடங்களில் வாசம் செய்கின்றன. பிற பாம்புகள்போல் இவற்றைச் சுலபமாகப் பார்க்க முடிவதில்லை. இதன் உணவு பல்லி, ஓணான், சிறு கொறிவிலங்குகள். நஞ்சற்ற பாம்பாக இருந்தாலும் பார்க்கும் எவருக்கும் அச்சமூட்டும் (கட்டுவரியன்) தோற்றத்துடன் இருப்பதால் இவற்றை மனிதர்கள் சட்டென்று அடித்துவிடுகிறார்கள்.

எங்கள் அவதானிப்புகளை 2008இல் கட்டுரையாகப் பிரசுரித்திருந்தோம். ஆனால், 2015ஆம் வருடத்தில் ‘இந்தியப் பாம்புகள்’ புத்தகத்தின் மூன்றாம் பதிப்பிலும் இப்பாம்பு பற்றி எந்த மேம்படுத்தலும் இல்லாமல் தகவல்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது எங்களுக்குக் கேள்விகளை எழுப்பியது. ஒருவேளை இந்நிலத்தில் காணப்படுபவை தனித்த இனமாக இருக்குமோ என்கிற சிந்தனையும் தோன்றியது. இடையில் நண்பர் நவீன் ஜோசப் (2018) மறைந்துவிட்டதால், இது சார்ந்த தகவல்களை மறந்திருந்தேன்.

பெயர் கௌரவம்

2021ஆம் ஆண்டில் வெளியான இப்பாம்பு பற்றிய ஆராய்ச்சி கட்டுரை இது சார்ந்த புதிய பார்வையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இதற்கு முன் Banded Racer – Argyrogena fasciolata என்று நம்பப்பட்டது, இப்பொழுது பேரினம் மாற்றப்பட்டு இரண்டு புதிய இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகத்தின் தென்பகுதியில் மட்டும் காணப்படுவதை பிளாட்டிசெப்ஸ் ஜோசபி (Joseph’s Racer - Platyceps josephi) எனவும் இந்நிலப்பரப்பைத் தவிர்த்து இந்தியாவின் பிற பகுதியில் காணப்படுவதை பிளாட்டிசெப்ஸ் பிளினி (Banded Racer - Platyceps plinii) எனவும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்பொழுது அனைத்துக் குழப்பங்களும் தீர்ந்தன.

இந்நிலப்பரப்பில் வாழும் ஓடுகாலிப் பாம்பிற்கு நவீன் ஜோசப்பின் பெயரை (Joseph’s Racer - Platyceps josephi) வைத்திருப்பது ஊர்வன சார்ந்த அவரின் ஆராய்ச்சியைக் கௌரவப்படுத்துவதாக இருக்கிறது. நவீன் ஜோசப் மறைந்திருந்தாலும் பிளாட்டிசெப்ஸ் ஜோசபியாக நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கட்டுரையாளர். ஊர்வன ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: oorvanapalli@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்