தூர்வாரினால் எல்லாம் சரியாகிவிடுமா?

By சு.பாரதிதாசன்

ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரப் படாததே ஒரு பகுதியில் வெள்ளத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு நீர்நிலைகளில் தன்னார்வமாக மேற்கொள்ளப்படும் தூர்வாருதலும் சூழலியல் புரிதலுடன் அறிவியல் முறைப்படி மேற்கொள்ளப்படுகிறதா? தூர்வாருவது என்பது வெறுமனே மண்ணை அள்ளிக்கொட்டும் வேலையா?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே விடைதான்.

முதலாவதாக, தூர்வாருவதில் சூழலியல் புரிதலுடன் கூடிய அறிவியல் அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். தூர்வாருவதற்கு முன் உள்ளூர் மக்களையும் வயதானவர்களையும் பயனாளிகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதி வயல்களில் விளைச்சல் இருக்கும்போது, தூர்வாரினால் நீர்நிலையிலிருந்து பூச்சிகள் இடம்பெயர்ந்து வயல்வெளிகளில் தஞ்சமடையலாம். அப்போது விளைச்சல் பாதிக்கப்படும்.

உயிரினப் பெட்டகம்

அடிப்படையில் குளங்களைத் தண்ணீரைத் தேக்கும் தொட்டியாக மட்டும் பயன்படுத்தக் கூடாது. அதை ஒரு உயிரினப் பெட்டகமாகப் பார்க்க வேண்டும். அதை ஒரு சங்கிலித் தொடரின் கண்ணியாகவும் அணுக வேண்டும். இல்லாவிட்டால் குளத்துக்குத் தண்ணீர் வராது. அப்படியொரு அவலம்தான் வேடந்தாங்கலுக்கு அருகிலுள்ள கரிக்கிளி குளத்துக்கும் நேர்ந்தது. இத்தனை கியூபிக் மீட்டர் தூர்வாரினால் இவ்வளவு தொகை என்று கணக்கு பார்த்து ஒப்பந்ததாரர் ஆழமாகத் தூர்வாரியதால், அங்கு பறவைகள் வரத்து சரிந்து போனது.

பள்ளிக்கரணையில் தண்ணீரும் சகதியுமாய் இருக்கிறது என்று நீரை வடித்துவிட்டது அரசு நிர்வாகம். பள்ளிக்கரணையை கழிவேலி நிலம் என்றே உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். கழிவேலிகள் சேறும் சகதியோடும்தான் இருக்கும். அதுதான் அந்த நிலத்தின் இயல்பு, மழைத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இந்த நிலத்துக்கு உண்டு.

இயற்கைக் கல்லறை

தூர்வாருதல் என்ற பெயரில் கரைகளை அகலப்படுத்தி வாகனங்கள் செல்ல வசதியாகப் பாதையை உருவாக்கி விடுகிறார்கள். நீர்நிலைகள், அருகேயுள்ள காலியிடங்களில் கழிவு, குப்பையைக் கொட்டுபவர்களுக்கு அந்தப் பாதை வசதியாகிவிடுகிறது. அத்துடன் கரையில் புல் பூண்டு முளைக்காத வகையில் அமெரிக்கத் தொழில்நுட்பம் என்ற பெயரில் செயற்கைப் படுக்கை, விரிப்புகளை விரித்து இயற்கைக்குக் கல்லறை கட்டப்படுகிறது.

ஆறுகளிலும் குளங்களிலும் ஓடைகளிலும் புதர்களும் நாணல்களும் முட்செடிகளும் இருப்பது அசிங்கம் என்ற மனநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். புல், பூண்டு, செடிகளுடன் ஓர் இடம் இருப்பது, உயிரினப் பன்மை கொண்ட தனித்துவம்மிக்க சூழல் தொகுப்பு. இவற்றை மொட்டையடிப்பதால் மண்ணரிப்பும் கூடுதலாகிறது. நீர்நிலை அழியும் வேகமும் விரைவாகிறது. இதனால் விளைவாக மண் படிந்து மேடுதட்டி விடுகிறது.

ஒட்டுமொத்த அழிவு

புதர்கள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. வறிய நிலையிலுள்ள உள்ளூர் மக்களுக்கு அவை மூலிகையாக, கீரையாக, கிழங்காகப் பயன்படுகின்றன. அத்துடன் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் அவை பயன்படுவதால் கிராம வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காக இருக்கின்றன. புதர்களை நம்பிப் பூச்சிகள், புழுக்கள், தேனீக்கள், பறவைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன.

அதனால் தூர்வாருவதை இயன்றவரை மனித உழைப்பைக்கொண்டே செய்ய வேண்டும். அத்தியாவசியத் தேவைக்கும் மிகக் கடினமான வேலைக்கு மட்டுமே இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

தூர்வாருதலில் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது புல், பூண்டு, செடி கொடிகள் எல்லாம் அடியோடு புரட்டிப் போடப்படுகிறது. இதனால் விதைகளும் பூண்டுகளும் அடி ஆழத்தில் அமிழ்ந்துபோய் முளைக்க முடியாமல் போய்விடுகின்றன. தவிர நண்டு, நத்தை, சங்கு, சிப்பி, பூச்சிகள், ஊர்வன உள்ளிட்டவையும் அழிய நேரிடுகிறது. குளங்களில் புதைந்திருக்கும் மீன் முட்டைகளும் அழிகின்றன. நீர்வாழ் செடியின் கிழங்குகளும் அடியோடு பெயர்த்து எடுக்கப்படுவதால் துளிர்விடும் வாய்ப்பை இழக்கின்றன.

எதை அகற்றலாம்?

சுருக்கமாகச் சொன்னால் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தூர்வாரும்போது இவை எல்லாம் சமாதியாகிவிடுகின்றன. அதனால், தவிர்க்கவியலாத இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது அவசியம். அதேநேரம் மனித உழைப்பின் மூலமாகவும் புதர்கள் அகற்றுவதை அறிவியல் கண்ணோட்டத்தோடு மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், புதர்களையும் களைகளையும் அகற்றுவதற்குக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனால் செடிகள் கருகுவதுடன் நிலமும் கெட்டியாகி நாளடைவில் எந்தச் செடியும் முளைக்க முடியாமல் போய்விடும்.

கரைகளிலும் தண்ணீரிலும் வளரும் தாவரங்களை ஒன்றுக்கும் உதவாதவை எனக் கருதாமல் பல்லுயிர் வளமாகப் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் நெய்வேலிக் காட்டாமணக்கு, வெங்காயத் தாமரை, சீமை கருவேலம் போன்ற அயல் தாவரங்களைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு மாறாகச் செய்யும் எல்லாச் செயல்களுமே மடி அறுத்துப் பால் குடிக்கும் செயல் என்பதை உணர வேண்டும்.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர்,
தொடர்புக்கு: arulagamindia@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

8 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்