அமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு...

By டி.செல்வகுமார்

“இயற்கை வேளாண்மைக்காக அமெரிக்க வீட்டையும் வேலையையும் துறந்து விட்டோம். ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீடு, இரண்டு கார் என சொகுசு வாழ்க்கையைக் கைவிட்டதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. புதிதாகச் சாதிக்கப் போகிறோம் என்ற சிந்தனையே எங்களிடம் மேலோங்கி இருந்தது” ஹேமாவும் தேவ்குமாரும் பேசும்போது எழும் ஆச்சரியத்தைச் சுலபமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை.

அமெரிக்க விஜயம்

இன்ஜினீயரிங் படிப்பு, ஐ.டி.கம்பெனியில் வேலை, கை நிறையச் சம்பளம் - இதுதான் இன்றைய இளைய தலைமுறையினர் பலருடைய கனவு, விருப்பம், லட்சியம் எல்லாமே. அவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து, அங்கேயே சொந்த வீட்டில் குடியேறியிருந்தார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அவை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் திருத்தணி அருகே ஐந்து ஏக்கர் நிலத்தில் இன்றைக்குக் காய்கறி விவசாயம் செய்துவருகிறார்கள் இருவரும்.

திருச்சி ஆர்.இ.சி.யில் (இன்றைய என்.ஐ.டி.) ஹேமாவும் தேவ்குமாரும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தபோது காதலித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் ஹேமாவுக்கும் பெங்களூரில் தேவ்குமாருக்கும், ஐ.டி. கம்பெனியில் தலா மூன்று ஆண்டுகள் வேலை. பின்னர் அமெரிக்க ஐ.டி. கம்பெனிக்கு இடம்பெயர்ந்தார்கள். அங்கே சொந்த வீடு வாங்கினார்கள். 13 ஆண்டுகள் உருண்டோடின. அபினவ் (12), அபர்ணா (10) என இரண்டு குழந்தைகள்.

சத்தான உணவு தேடி

குழந்தைகளுக்குச் சத்தான உணவு கொடுப்பதற்காக இணையத்தில் தேடியபோதுதான் இயற்கை விவசாயம் குறித்த அறிமுகம் ஹேமாவுக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினர். ஒருகட்டத்தில் குழந்தைகளின் நலனுக்காக வேலையைத் துறந்துவிட்ட ஹேமா, வீட்டிலேயே தோட்டம் போடுவதற்கான பயிற்சியைப் பெற்றார்.

“அமெரிக்காவில் மக்காச்சோளத்துக்கு அரசு மானியம் கொடுப்பதால், அதை அதிகமாக விளைவித்து, அனைத்து உணவுப் பொருட்களிலும் உட்பொருளாகச் சேர்க்கும் நிலை இருந்தது. அதனால் பல நோய்கள் உருவாவதும் தெரியவந்தது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லியே நோய்களுக்குக் காரணம் எனத் தெரிந்ததால், இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இணையத்தின் வழியாகவும் புத்தகங்களின் வழியாகவும் இது தொடர்பாக நிறைய படித்தேன்.

நம்மால் ஆனதைச் செய்வோம்

அப்போதுதான், இயற்கைப் பேரழிவுக்குப் புவி வெப்பமயமாதல்தான் காரணம் என்பதை நானும் கணவரும் உணர்ந்துகொண்டோம். அதுபற்றி வெறுமனே பேசிக்கொண்டே இருக்காமல், நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என நினைத்தோம். இந்தியாவுக்குத் திரும்பி இயற்கை விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

இயற்கை விவசாயத்துக்குத் தமிழ்நாடுதான் ஏற்ற இடம் என முடிவெடுத்தோம். `நல்ல சுற்றுச்சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழப் போகிறோம்’ என்று குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைத்தோம்.

இருவரும் வேலையை விட்டுவிட்டதால் வருமானம் இல்லை. தேவைகளைக் குறைத்துக்கொண்டோம். அமெரிக்காவில் அதிகபட்சம் அரை மணி நேரம் மட்டுமே குழந்தைகளுடன் கணவர் இருக்க முடிந்தது. இப்போது நாங்கள் நான்கு பேரும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்” என்கிறார் ஹேமா.

விவசாய அறிவு

இந்தத் தம்பதிக்கு விவசாயப் பின்புலம் சுத்தமாகக் கிடையாது. தேவ்குமாரினுடையது ஆசிரியர் குடும்பம். ஹேமாவின் தந்தை திருச்சி `பெல்’ தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

“தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, ஓசூர், கோவை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் இயற்கை விவசாயம் செய்வோரை நேரில் சந்தித்துப் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். மத்தியப் பிரதேசம், உத்தராஞ்சல், ராஜஸ்தான் எனப் பல வட மாநிலங்களுக்குச் சென்று இயற்கை விவசாயம் குறித்த தகவல்களை ஓராண்டுக்குத் திரட்டினோம்.

இயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவு கிடைத்தது. நிலம் வாங்கும் முயற்சியில் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. திருத்தணியை அடுத்துள்ள பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் நிலத்தை வாங்கினோம்” என்றார் தேவ்குமார்.

நாட்டு மரங்கள்

“மலையடிவாரத்தில் நாங்கள் வாங்கிய ஐந்து ஏக்கர் நிலம், தரிசு பூமி. முன்பு மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு, பின்னர் தரிசாக விடப்பட்டது, அதில் வேலியிட்டோம்.

நீராதாரத்துக்காக 36 அடி ஆழத்தில் கிணறு வெட்டினோம். கடந்த டிசம்பரில் பெய்த மழையில் கிணறு நிரம்பியது. இயற்கை விவசாயத்துக்கு மண் வளம் அவசியம். நைட்ரஜன் வாயு மண்ணில் கலந்து மண் வளமாவதற்காகப் புங்கை மரம், காட்டு வாகை, ஈட்டி, அகத்தி, யானைக்குன்றிமணி, புரசு, முருங்கை, கொடுக்காய்புளி, வில்வம் உள்பட 500 மரங்களை நட்டுள்ளோம்.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் மூலம் மரங்களின் வேருக்கு நேரடியாகத் தண்ணீர் பாய்ச்சும் உத்தியைச் செயல்படுத்துகிறோம். மழை நீர் சேகரிப்புக்காகச் சிறிய குளம். உயர்த்தப்பட்ட படுக்கை அமைப்பில் பூசணிக்காய், வாழைக்காய், அகத்தி கீரை, பசலைக் கீரையை விளைவிக்கிறோம். அக்கம்பக்கத்தினரே இப்போது எங்களுடைய வாடிக்கையாளர்கள்.

உரத்துக்கு இலைதழை, செடிகொடிகளை குவியலாக மூடாக்காகப்போட்டு மட்கச் செய்து இயற்கை உரம் கிடைக்கச் செய்கிறோம். குறைவான தண்ணீர் மூலம் காய்கறி, மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்கிறோம். அடுத்தாகப் பழ வகைகளை உற்பத்தி செய்வது இலக்கு. புவி வெப்பமயமாவதைத் தடுக்க எங்களால் முடிந்த அளவுக்கு உயிர்பன்மயத்துக்குத் தேவையானவற்றைச் செய்வதே முதன்மை நோக்கம்” என்றார் ஹேமா.

கிணறு வெட்ட பட்டபாடு

ஹேமா - தேவ்குமார் தம்பதி தங்கள் நிலத்தில் கிணறு வெட்ட முடிவெடுத்தபோது, அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் கிணறுக்குப் பதிலாக ஆழ்துளை கிணறு போட்டால் அதிக ஆழம் போட முடியும், தண்ணீரும் போதுமான அளவு கிடைக்கும் என்றும் யோசனை தெரிவித்தனர். ஆனால், தரைக் கிணற்றின் பயன்பாட்டை உணர்ந்த இவர்கள், கிணறு வெட்டுவதில் உறுதியாக இருந்து 45 நாள் போராட்டத்துக்குப் பிறகு 36 அடி ஆழக் கிணற்றை வெட்டி முடித்தனர்.

மோனோ கல்சர்

ஒரு நிலம் முழுவதும் நெல் அல்லது கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட்டால், அது `மோனோ கல்சர்’ எனப்படுகிறது. இதனால், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது. காடுகளில் இருப்பதுபோல பலவகையான மரங்கள், செடி-கொடிகள், பல்வேறு உயிரினங்கள், மூலிகைத் தாவரங்கள் போன்றவை இருந்தால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுடன், உயிர்பன்மயமும் நீடிக்கும் என்கிறார் ஹேமா.

விவசாயம் செய்யும் குழந்தைகள்

இத்தம்பதியின் குழந்தைகளான அபினவ் (12), அபர்ணா (10) ஆகிய இருவரும் படிப்பதற்கு பள்ளிக்குப் போகவில்லை. வீட்டில் இருந்தே படிக்கின்றனர். பெரும்பாலான நேரம் தாய், தந்தையருடன் சேர்ந்து வேளாண் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுடைய வீட்டில் தொலைக்காட்சியும் இல்லை. புத்தகம் படிப்பது, பியானோ வாசிப்பது, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவது போன்றவைதான் இவர்களுடைய பொழுதுபோக்கு. பழைய கார்டுபோர்டில் தையல் இயந்திரம், புத்தக அலமாரி, குளியலறை, மின்விசிறி போன்றவற்றைச் செய்கின்றனர். நாட்டுக் கோழி வளர்ப்பும், மாடித் தோட்டப் பராமரிப்பும் இக்குழந்தைகளுக்குப் பிடித்த பொழுதுபோக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்