என் தோட்டத்து இசைக் கலைஞர்கள்

By செய்திப்பிரிவு

அது ஒரு பருவமழைக் காலம். என் குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டிய மகிழ்ச்சியான காலம். இதை முழுமை யாக அனுபவிக்க வயநாட்டில் ஐந்து நாள் சுற்றுலா சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து ஓய்ந்திருந்தது. கதிரவன் முழுவதும் முகம் காட்டுவதற்குச் சிறிது நேரமே இருந்த அதிகாலை.

அந்தக் கணம், ஒற்றை வார்த்தையை இடை வெளிவிட்டுக் கோத்ததுபோல், தான் இருக்கும் பாதையைச் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு சத்தம் எழுந்தது . அருகிலும் தொலைவிலுமாக மாறிமாறி அந்தச் சத்தம் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. வெளியே சென்று பார்த்தபோது அது இரு பறவைகளின் உரையாடல் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது! கூரான கறுப்புக் கொண்டை, சிவப்பு வால், வசீகரிக்கும் அழைப்பு கொண்ட அந்தப் பறவைகளின் பெயர் செம்மீசை சின்னான் (Red-whiskered bulbul).

ஏன் பாடுகின்றன?

எதற்காகப் பறவைகள் பாடவும் ஒலியெழுப்ப வும் செய்கின்றன என்பதை அருகிலிருந்த ஓர் பறவை ஆர்வலர் விளக்கினார். இரை தேடும் பறவைகள் தங்கள் இருப்பிடத்தை அறிவிக்கவும், இரைக்கொல்லி உயிரினங்களின் வருகையை மற்ற பறவைகளுக்கு அறிவிக்கவும், இனப்பெருக்கக் காலத்தில் துணையைக் கவரவும், தமது வாழிட எல்லையை வகுத்துக்கொள்ளவும் எனப் பல காரணங்களுக்காக ஒலியெழுப்புகின்றன என்றார் அவர்.

அன்றைக்கு வயநாட்டில் அந்தப் பறவைகள் மூலம் அறிந்துகொண்டதுதான், இன்றைக்கு என் இசைச்சொத்தாகத் திகழ்கிறது. வயநாட்டில் என் சுற்றுலா நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கோவையில் நான் வசிக்கும் வீட்டின் தோட்டத்தில் பாடும் பறவைக் கலைஞர்களுக்குக் குறைவே இல்லை.

காலம் காட்டும் கண்ணாடி

காலை முதல் மாலை வரை சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia), வெண்புருவ வாலாட்டி (White-browed wagtail), மைனா (Common myna- நாகணவாய்), விதவிதமான தேன்சிட்டுக்கள் (Sunbirds) எனப் பல பாடகர்கள் என் வீட்டுத் தோட்டத்துக்கு வந்துசெல்கின்றனர். இதில் என் மனத்தை மிகவும் கவர்ந்தது சாம்பல் கதிர்குருவி எழுப்பும் ஒலியே!

சலங்கையிலிருந்து எழும் மெல்லிய ஒலிபோல் ‘ட்ஸில்… ட்ஸில்… ட்ஸில்…’ எனக் கத்திக்கொண்டே போகும். இந்த ஒலி இந்தச் சின்னஞ்சிறிய பறவையிட மிருந்துதான் வருகிறதா என்று பலமுறை வியந்திருக்கிறேன். நான் அதிகம் கேட்ட பாடல் குயிலுடையது (Asian koel) . ‘க்கூ… க்கூ... க்கூ...’ என்று காலையில் என்னை எழுப்புவது மட்டுமல்லாமல், மாலையிலும் இன்றைய நாள் இனிதே நிறைவடைந்தது என்பதையும் நினைவூட்டும்.

தோள் கொடுக்கும் குரல்

காலை, மாலையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்நேரத்திலும் பல விதங்களில் ஒலியெழுப்பி ஆச்சரியப்படுத்துவது மைனா. என் வீட்டு மாடி அறையின் ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய வேப்ப மரம் உண்டு. என் வீட்டிலேயே எனக்கு அதிகம் பிடித்த இடம் அதுதான். படிப்பது, எழுதுவது, ஓய்வெடுப்பது என அனைத்து வேலைகளையும் அங்கேதான் செய்வேன். அப்போதெல்லாம் தோள்கொடுக்கும் துணைபோல் மைனாவின் குரல் நாள் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவை தண்ணீர் குடிப்பதையும், நீரில் குளியலிடுவதையும் பார்ப்பதற்காகத் தனியே நேரமும் ஒதுக்குகிறேன்.

உங்கள் வீட்டுக்கு அருகில் ‘ச்சுவீட்... ச்சுவீட்... ச்சுவீட்...’ என ஒரு பறவை உரத்து ஒலியெழுப்புவதைக் கேட்டதுண்டா? அது தையல் சிட்டு (Common Tailorbird). நம் கட்டை விரல் அளவே இருந்தாலும், இரண்டு இலைகளை அழகுபோல் ஒன்றுசேர்த்து ஓரத்தைத் தைத்து அது கட்டும் கூடு வியப்பில் ஆழ்த்தும். தையல்சிட்டின் கூட்டைப் பார்த்தே, என்றைக்காவது ஒருநாள் பறவைகள் கூடுகட்டும் கலையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. அதன் பின் பல காணொலிகளைக் கண்டும், பறவை இதழ்களைப் படித்தும் வியக்கவைக்கும் கூடுகளைக் கட்டும் திறமை கொண்ட பறவைகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.

இயற்கைச் சிற்பி

பொதுவாகப் பறவைகள் எழுப்பும் ஒலி இனிமையானதுதான். ஆனால், அனைத்துப் பறவைகள் எழுப்பும் ஒலியும் மெல்லிசையைப் போலிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, நம் வீடுகளுக்கு அருகில் கூட்டமாகச் சுற்றித்திரியும் தவிட்டுக்குருவிகள் (Yellow-billed babbler), கவனத்தைச் சிதறடிக்கும் வகையில் கூச்சலிடும்.

நமக்கு விக்கலெடுக்கும்போது எழும் ஒலியைப் போன்று தொடர்ந்து ஒலியெழுப்பும் ஒரு பறவையும் உண்டு. அது செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith barbet). பொதுவாக மர உச்சியில் அமர்ந்து ‘குக்.. குக்.. குக்..’ என ஒலியெழுப்பும். கண்ணைப் பறிக்கும் பல நிறங்களைத் தன் உடலில் கொண்டது இந்தச் சிறிய பறவை. இயற்கை ஒரு தேர்ந்த சிற்பி என இந்தப் பறவையைப் பார்த்து என் அப்பா கூறுவார்.

என் தோட்டத்துக்கு வந்து செல்லும் பறவைக் கலைஞர்களில் நெருக்கமான தோழமையை வெளிப்படுத்துவது காகம். காகம் உணவு உண்டால் மட்டுமே, எந்த ஒரு படையலும் முழுமை பெறும். பழக்கப்பட்ட பறவை ஒலிகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது புதுப்புது பறவைகளின் ஒலிகளும் என் கவனத்தை ஈர்க்கவே செய்கின்றன. பறவைகளின் இந்த இனிமையான ஒலிகள் அனைத்தும் செலவில்லாமல் ரசிக்கக்கூடிய இசைக் கச்சேரிகளைப் போன்றவை.

இந்தக் கச்சேரிகளை தொடர்ந்து இன்றுவரை அனுபவிக்கக் காரணமாக இருப்பது, வயநாட்டில் என்றோ ஒரு நாள் நான் செலவிட்ட சில நிமிட அவதானிப்பு தந்த வெளிச்சமே என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

(இந்திய மொழிகளில் இயற்கை சார்ந்த எழுத்தை ஊக்குவிப்பதற்காக 'Nature Communications' என்கிற திட்டத்தின்கீழ் Nature Conservation Foundation (NCF) முன்னெடுத்துள்ள தொடர் இது. பறவைகள், இயற்கை குறித்து நீங்கள் எழுத நினைத்தால் NCF-India-வைத் தொடர்புகொள்ளுங்கள்: https://www.ncf-india.org/contact-us).

இந்தியப் பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கேட்டறிய கீழ்க்கண்ட தளங்கள் உதவும்:

https://bit.ly/3nNsQUQ

https://bit.ly/3tmhEjb

கட்டுரையாளர், பறவை ஆர்வலர்

தொடர்புக்கு: divsrajan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்