முன்னத்தி ஏர் 8: ‘நெல்லின் செல்வர்

By பாமயன்

திருவண்ணாமலை பகுதியில் பாரம்பரிய நெல் விதைகள் எங்குக் கிடைத்தாலும், உடனே அங்குச் சென்று சேமிக்கும் முயற்சியில் இறங்கிவிடுபவர் செங்கம் வெங்கடாசலம். அது மட்டுமல்லாமல், இந்த விதைகளைக் கேட்கும் உழவர்களுக்குக் கொடுத்தும் உதவுகிறார்.

ஒரு பக்கம் பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வரும் அதேநேரம், இயற்கைவழி வேளாண்மையில் பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்துவருகிறார். இவருடைய பண்ணையின் பரப்பு 10 ஏக்கர். செய்யாறு ஆற்றின் பாசனப் பகுதியில் இவருடைய பண்ணை அமைந்துள்ளது. முற்றிலும் இயற்கைவழி வேளாண்மையே செய்கிறார்.

மொத்தமுள்ள 10 ஏக்கரில், ஐந்து ஏக்கர் பாசன வழியுள்ள நன்செய், எஞ்சிய ஐந்து ஏக்கர் மழையை நம்பியுள்ள வானவாரி நிலப்பகுதி. இப்பகுதியை ஒரு மரத்தைப் போன்று இவர் வடிவமைத்துள்ளார். மரத்தின் வேர்ப் பகுதி என்றும் தண்டுப் பகுதி, இலைக்குடையான கவிகைப் பகுதி என்று மூன்றாகப் பிரித்து, அதற்கேற்ற வகையில் மரங்களை நடவு செய்துள்ளார். இந்தப் புன்செய் நிலத்தில் ஏராளமான மர வகைகளை வளர்த்துள்ளார். இம்மரங்களில் இருந்து வேளாண்மைக்குத் தேவைப்படும் தழைகள் கிடைக்கின்றன.

ஊட்டம் தரும் இயற்கை

இந்த வயதிலும் நேரடியாக வயலுக்குச் சென்று அன்றாட பணிகளைக் கவனிக்கிறார். நெல் தவிர எள், துவரை, உளுந்து போன்ற பல்வகை பயிர்களையும் சாகுபடி செய்கிறார்.

இவரிடம் இரண்டு மாடுகளும், இரண்டு ஆடுகளும் உள்ளன. இவற்றின் கழிவுகளைக் கொண்டே எருவைத் தயாரிக்கிறார். தேவைப்படும்போது அருகில் உள்ளவர்களிடம் தொழுவுரத்தை வாங்கிக் கொள்கிறார்.

மண்புழு உரம் தயாரித்துப் பயன்படுத்துகிறார். கிடைக்கும் சாணம் மற்றும் பண்ணைக் கழிவுகளை மரத்தடியில் மட்க வைத்துப் பின்பு மண்புழு உரம் தயாரிக்கிறார். இத்துடன் வளர்ச்சி ஊக்கியான அமுதக்கரைசலை மட்டும் பயன்படுத்துகிறார். இவையே போதிய பயனைத் தருகின்றன.

இலைவழி ஊட்டமாகத் தெளிப்பானைக் கொண்டு அமுதக்கரைசலை தெளிக்கிறார். அத்துடன் பாசன நீரில் கலந்தும் வயலில் விடுகிறார். இயற்கை வேளாண்மையில் மற்றொரு உத்தியான மூடாக்கு முறையைப் பின்பற்றுகிறார். தனது நிலத்தைச் சுற்றிப் பூவரசு, கிளிசிடியா, அகத்தி போன்ற உரம் தரும் மரங்களை வளர்த்துள்ளார். இவற்றில் இருந்து தேவையான பசுந்தழைகளை வெட்டி பயன்படுத்துகிறார்.

செலவு மிகக் குறைவு

இவருடைய பகுதியில் போதிய நீர் கிடைத்தாலும், பாசனத்துக்கான நீரைச் சேமிப்பதில் இவர் பெரும் கவனம் செலுத்துகிறார். ஒரு பார் விட்டு ஒரு பார், நீர் பாய்ச்சுகிறார். நெல்லுக்குக் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சுகிறார்.

இவர், பாரம்பரிய விதைகளைத் தேர்வு செய்து பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் மிகவும் குறைவு. அத்துடன் வறட்சியைத் தாங்கி வளரும் திறனையும் கொண்டுள்ளன. இயற்கை முறையைப் பின்பற்றுவதால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் தீமை செய்யும் பூச்சி தாக்குதலும் குறைகிறது. இவருடைய பண்ணையில் மரங்கள் நிறைய இருப்பதால் பறவைகள் அதிகமாக வருகின்றன. அவையும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை வழி வேளாண்மையைப் பின்பற்றுவதால், செலவு பெருமளவு குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சங்க நடைப்பயணம்

நெல்லை உமி நீக்கும் மரத் திரிகைகள், உரல்கள் என்று பல கருவிகளை வெங்கடாசலம் வடிவமைத்துள்ளார். தமிழர்களின் திணையியல் கோட்பாட்டை (Ecological concept) முன்னிறுத்தி நடைப்பயணங்களை ஏற்பாடு செய்கிறார். குறிப்பாகத் திருவண்ணாமலை முதல் மரக்காணம்வரை உள்ள பகுதிகளை இணைத்துச் சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் பதிவுபெற்றுள்ள இடங்களை விளக்கும் திணையியல் (Ecological rally) பயணத்தை நடத்தி, இளைஞர்களிடம் சூழலியல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்.

1997-ம் ஆண்டில் தமிழகம் தழுவிய விதைக் காப்புப் பயணத்தை மேற்கொண்டு வெங்கடாசலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இத்துடன் தமிழ்க் கணிதம் பற்றிய ஆய்விலும், அகழ்வாய்வுப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். அஸ்கா பார்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களிடம் நெருக்கம் கொண்டுள்ள இவர் செங்கம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள பெருங்கற்காலக் குடியிருப்பு ஒன்றைக் கண்டறிந்துள்ளார். 600-க்கும் அதிகமான சிதிலமடைந்த வீடுகளைக் கொண்ட இந்தப் பகுதியை ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய வரலாற்று பக்கங்களை மாற்றி எழுதக்கூடிய நிலை ஏற்படலாம். இது இன்னும் அகழ்வாய்வு செய்யப்படாமலேயே உள்ளது.

இப்படிப் பாரம்பரிய நெல் பாதுகாப்பு முதற்கொண்டு, அகழ்வாய்வு ஆராய்ச்சிவரை பங்களித்துவரும் செங்கம் வெங்கடாசலம் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு மாபெரும் சொத்து.

(அடுத்த வாரம்: நெல்லை மாவட்டத்தை உயர்த்திப்பிடித்த முன்னோடி)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com
செங்கம் வெங்கடாசலம் தொடர்புக்கு: 98943 63307

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

12 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

38 mins ago

தொழில்நுட்பம்

35 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்