இரையான மானும் சில காலடித் தடங்களும்

By ஏ.சண்முகானந்தம்

ஆங்கிலேயர் காலத்தில் வெட்டுமர முகாமாக இருந்த இடம் அது. வெட்டிய மரங்களை மலையிலிருந்து கீழே உருட்டித் தள்ள வசதியாக இருந்த காரணத்தால் 'டாப் ஸ்லிப்' என்ற பெயரை ஆங்கிலேயர் வைக்க, இன்று அதுவே அந்த ஊரின் பெயராக நிலைத்துவிட்டது.

டாப் ஸ்லிப்பின் தொடக்கம் குறித்த நினைவுகளில் இப்படி ஆழ்ந்திருந்தபோது, உயர்ந்த மலைப் பகுதிகளில் வாழும் மூன்று நீளவால் கரிச்சான்கள், பறந்து சென்று வெண்பஞ்சு மேகங்களுக்கிடையே மறைந்தன.

கானுலா வரும் புதியவர்களுக்கு யானைகளின் காலடித் தடம், கழிவுகள், மான் இனங்களில் பெரியதான கடமானின் காலடித் தடம் போன்றவற்றை அடையாளம் காண்பது பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். இயற்கையியல் எழுத்தாளர் முகமது அலி. பறவைகளின் ஒலியைக் கூர்ந்து அவதானித்து, அவற்றின் பெயர்கள், செயல்பாடுகளைப் பற்றி அவர் கூறியது, இயற்கை புரிதல் பற்றிய புதிய கதவுகளைத் திறந்துவிட்டது.

காட்டுக்குள்

இளம் பழுப்பு நிறத்திலுள்ள மரம் தொத்திப் பறவையை (Nuthatch) மீண்டும் ஒரு முறை இங்குப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மஞ்சள் சிட்டு (Common Iora), சிவப்பு நெற்றி மரங்கொத்தி, குக்குறுவான் போன்ற பறவைகளில் சிலவற்றைப் பார்த்தும், குரலொலியைக் கேட்டவாறும் நடந்துகொண்டிருந்தோம்.

டாப் ஸ்லிப்பின் ஒரு பகுதியிலுள்ள மலையுச்சிக்கு வந்து சேர்ந்த அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. புலி, சிறுத்தை ஆகிய ஊனுண்ணிகளில் ஏதோவொன்று இரையாக்கிச் சென்றிருந்த ஒரு மானின் தலையும் எலும்புகளும் ஆங்காங்கே இருந்ததை, காட்டுக்குப் புதியவர்களான சிலர் விழிகள் விரியப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். சிறு சிறு தடுப்பணைகள், முறிந்து கிடந்த மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பட்டு போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே, அனைவரும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியிருந்தோம்.

சுமார் 200-க்கும் மேற்பட்ட பறவைகள், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஊனுண்ணிகள், யானை, கரடி, கடமான், காட்டு எருது போன்ற உயிரினங்கள் மட்டுமில்லாமல் அரிய வகை செடிகொடிகள், மரங்கள் எனச் சிறந்த உயிர் சூழல் மண்டலமாக விளங்குகிறது, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இந்தக் காட்டுப் பகுதி.

காலடித் தடங்கள்

அடுத்த நாள் ஆழியாறு அணையின் மறுபக்கத்தில் அமைந்திருந்த சரணாலயத்தில் பயணம் தொடங்கியது. கர்நாடகம், கேரளம், தமிழகம் இணையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும் ஓரிட வாழ்வியான மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow throated bulbul) போன்ற அரிய பறவைகள் வாழும் பகுதி அது.

அனைவரது கண்களும் மஞ்சள் தொண்டை சின்னானையே தேடின. வேட்டைப் பறவையான பாம்புப் பருந்து (Crested Serpent - Eagle) அடிக்கடி தென்பட்டது. கரடி, மான், காட்டு எருது ஆகியவற்றின் காலடித் தடங்களைப் பார்த்ததுடன் அன்றைய கானுலா நிறைவடைந்தது.

கானுலாவுக்குப் பின், பொள்ளாச்சியிலுள்ள இயற்கை வரலாறு அறக்கட்டளையின் தலைவரான மருத்துவர் வசந்த ஆல்வாவின் மருத்துவமனையில் காட்டுயிர் இதழ் வாசகர் வட்டமும், இன்றைய சூழலியல் ஆகியவை குறித்த அலசலும் நடைபெற்றன. காட்டுயிர் இதழாசிரியர் ச.முகமது அலி, இன்றைய சூழலியலின் நிலை, எதிர்காலத்தின் செயல்பட வேண்டிய முறைகள், காட்டுயிர் இதழ் எனப் பல தளங்களில் பேசினார்.

அவரைச் செயலாளராகக் கொண்டு இயங்கும் இயற்கை வரலாறு அறக்கட்டளையின் (பொள்ளாச்சி) ஒருங்கிணைப்பில், டாப் ஸ்லிப்பில் மே 17, 18 ஆகிய நாட்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முப்பதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

கானுலாவும் கலந்துரையாடலும் கலந்த இந்த நிகழ்ச்சி, பங்கேற்றவர்கள் மத்தியில் காடு சார்ந்த புரிதலை அதிகப்படுத்தி, அதன் இன்றைய நிலை குறித்த சில சலனங்களை மனதில் உருவாக்கியிருக்கும். காட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பிக்கும்.

ஏ.சண்முகானந்தம்- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்