விவசாயிகள் சாதல் கண்டு சிந்தை இரங்காத அரசியல் வர்க்கம்

By பாமயன்

இந்திய உழவர்களின் வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகள் மிகக் கொடிய காலகட்டம். கிட்டத்தட்ட மூன்று லட்சம் உழவர்கள் தங்களுடைய உயிரைக் கொடுத்துள்ளனர். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு இரண்டு உழவர்கள் உயிர்விடுகின்றனர்.

இதை வெறும் தற்கொலை என்ற கோணத்தில் பார்ப்பது மிகவும் இழிவானது. தற்கொலைக்குத் தனது சொந்த மக்களைத் தள்ளியது யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுவாக இந்த உயிரிழப்புகளின் அளவு மராட்டிய மாநிலத்தில் உச்சமாக உள்ளது. ஆந்திரம், உத்திரப் பிரதேசம், கர்நாடகம், குஜராத் ஆகியவற்றுடன் தமிழ்நாடும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சரின் உளறல்

அண்மையில் திருவாரூர் அருகே ராஜாராம் என்ற பருத்தி விவசாயி நஞ்சுண்டு மடிந்துள்ளார். வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் நிலை இதுதான். வளர்ச்சி பற்றி வாய் கிழியப் பேசும் நமது அறிஞர்கள் மனச்சாட்சியைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எது வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?

நமக்குச் சோறு போடுபவர்களும், நமது தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளை விளைவித்துக் கொடுக்கும் கூட்டமும் கொத்துக்கொத்தாகச் செத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சற்றும் உறுத்தல் இல்லாமல் ‘இவர்கள் கோழைகள்' என்று சொல்லும் அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

ஹரியாணா அமைச்சர் ஓம்பிரகாஷ் தன்காரின் இந்த அடாவடிப் பேச்சு, உழவர்களை மட்டுமல்லாமல், மனித நேயம் கொண்ட அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

யார் காரணம்?

உழவர்களை மெல்ல மெல்லச் சந்தை சூறையாடலுக்கு இட்டுச் சென்று அவர்களை ஓட்டாண்டியாக மாற்றிய, நமது கொள்கை வகுப்பாளர்கள்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம். ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசிய பின் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டார் கிளாடு இயதர்லி என்ற விமான ஓட்டி. தான் பங்கேற்ற போர் முயற்சி எண்ணற்ற மக்களைக் கொன்றுபோட்டதே என்று வெதும்பி மடிந்தார் அவர்.

ஆனால், இன்று இந்த உழவர்களின் உயிரிழப்புகளைக் கண்ட பின்னும் அதற்குத் தாமும் காரணம் என்ற ஈரம் மனதில் சற்றும் இல்லாமல், அவர்களைக் கோழைகள் என்று ஏசும் இவர்களை என்னவென்று சொல்வது?

அரசு கொடுத்த பரிசு

உழவர்களின் சாவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான காரணம் அவர்கள் தமது தற்சார்பை இழந்தததுதான். விதைக்கும் உரத்துக்கும் தொழில் நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் அவலத்தை உண்டாக்கியது யார்? "நாட்டின் பஞ்சத்தை விரட்டுவதற்கு உழவர்களே தியாகம் செய்யுங்கள்" என்று நேரு அழைப்புவிடுத்தார். அதை மனதார ஏற்றுக்கொண்ட உழவர்கள் பஞ்சத்தைப் போக்கிவிட்டு, தமது உயிரையும் போக்கிக்கொண்டார்கள்.

நமது பசியைத் தீர்த்த இந்த மக்களுக்கு நமது அரசு கொடுத்த பரிசு என்ன? நிலத்தைப் பிடுங்குவது, மானியத்தை வெட்டுவது, கொஞ்ச நஞ்ச கடனுக்கு வட்டியை உயர்த்துவது... இது என்ன நீதி? இந்த உழவர்கள் மட்டும் கொஞ்சம் சிந்தித்து, "தனக்கானதை மட்டும் உற்பத்தி செய்துகொள்வேன்" என்று முடிவு செய்துவிட்டால் எப்படி நகரத்தில் வாழ்பவர்களுக்குச் சோறு கிடைக்கும்? பால் கிடைக்கும்? இறைச்சி கிடைக்கும்?

விவசாயிகள் மட்டும் தியாகிகளா?

“வளர்ச்சி வேண்டுமென்றால் பழங்குடிகளும், உழவர்களும் தங்களது நிலங்களைத் தர வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏன் பணக்காரப் பெருமுதலாளிகளைப் பார்த்து நமது ஆட்சியாளர்கள் யாரும் தியாகம் செய்யுங்கள் என்று கேட்பதில்லை. வளர்ச்சிக்காகத் தியாகம் செய்ய உழவர்கள் போன்ற அடித்தட்டு மக்கள்தான் கிடைத்தார்களா என்று வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா கேள்வி எழுப்புகிறார்.

சந்தை சூறையாடலில் நாட்டை, நகரை மட்டுமல்லாது தனது மனைவியையும் இழந்த தருமனைப் போல் நமது உழவர்கள் கண்கலங்கிக் கைபிசைந்து நிற்கின்றனர். ஆற்றுவாரும் இன்றித் தேற்றுவாரும் இன்றி அல்லல்படும் அவர்களை நோக்கி எந்தக் கைகளும் நீளவில்லை. ஆழிப்பேரலை வந்தாலும், நிலநடுக்கம் வந்தாலும் ஏன் எய்ட்ஸ் வந்தாலும் ஓடிவந்து உதவும் உலக நாடுகள்கூட, விவசாயிகளைக் காப்பாற்ற வருவதில்லையே ஏன்? இது ஒரு அமைதியான இனப் படுகொலை. உழவர்கள் என்ற இனக் குழுவை நாட்டில் இருந்தே விரட்டச் செய்யும் தந்திரம்.

சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல்கண்டும்

சிந்தை இரங்கா ரடீ -- கிளியே

செம்மை மறந்தா ரடீ.

என்பார் பாரதி. அதுதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.

கட்டுரையாசிரியர்,
சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்