காட்டுத் தீ நல்லது?

By ந.வினோத் குமார்

தீயைக் கண்டுபிடித்தது மனித குல வரலாற்றின் மிகப் பெரிய திருப்புமுனை. இந்தத் திருப்புமுனை நிகழ்ந்த இடம்? காடுகள்தான். நவீன மனித இனத்தின் முன்னோடிகளான 'ஹோமோ எரக்டஸ்' முதன் முதலாகத் தீயைக் கண்டடைந்தனர். அதன் பிறகு பல காலம் கழித்தே விவசாயம் செய்வதை மனிதன் கற்றுக்கொண்டான் என்கிறது மானுடவியல். இரண்டுக்கும் தொடர்பில்லாதது போலத் தோன்றலாம்.

ஆனால், காடுகளில் வாழ்ந்த ஆதி குடிகள் தீயையும் விவசாயத்தையும் ஒன்றிணைத்த போது உருவானதுதான் ‘காட்டெரிப்பு வேளாண்மை'. உலகம் முழுவதும் இன்றும் பல பழங்குடிகள் இந்த வேளாண் முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீவிரமடைந்துவரும் நிலையில் காட்டெரிப்பு வேளாண்மைக்கும் எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்துள்ளன. அதேபோல 'காட்டுத் தீ ஏற்படுவதும் மோசமானது' என்ற ஒரு வாதம் மக்களிடையே பரவலாக உள்ளது. அது சரிதானா?

மேற்குத் தொடர்ச்சி மலையில்...

சமீபக் காலமாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியான பந்திபூர் சரணாலயத்தில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டுவருகிறது. வறண்ட இலையுதிர் காடுகள் என்று வகைப்படுத்தப்படும் இந்தக் காட்டுப் பகுதியில் ஏற்படும் காட்டுத் தீ பெரும்பாலும் இயற்கையானது.

இந்தக் காட்டுப் பகுதியில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே ஆய்வு செய்தவர் ழான் பிலிப் பைராவூத். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான இவர், தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகூர் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாகியாக இருந்துவருகிறார். காட்டுத் தீ பற்றி பல்வேறு தகவல்களை அவர் கவனப்படுத்துகிறார்:

பாதிப்பு எப்படிப்பட்டது?

காடுகளில் புற்கள் அதிகமாக இருந்தால் அங்குக் காட்டுத் தீ ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த அளவில் புற்கள் இருந்தால் குறைந்த அளவில் தீ ஏற்படும். இது பொதுவான ஓர் அம்சம்.

அதேசமயம் புற்கள் அதிகமாக இருக்கும் காடுகளில், சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அதிகம் மேயவிட்டால், அங்குக் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சொற்பம்.

மழைக்காடுகளில் எப்போதும் ஈரம் இருக்கும். அங்கு நெருப்புக்குத் தகவமைத்துக்கொள்ளாத மரங்கள் அதிகளவில் இருக்கும். மேலும் புற்கள், செடிகள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என உயிரின அடர்த்தியும் அங்கு அதிகமாக இருக்கும். அங்கு காட்டுத் தீ ஏற்பட்டால், பாதிப்பு மிக மோசமாக இருக்கும். வறட்சி மிகுந்த புதர்க் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டால், அதன் பாதிப்பு ரொம்பவும் குறைவாகவே இருக்கும்.

முறைப்படுத்துதல்

காட்டுத் தீ என்பது குறிப்பிட்ட நாடுகள் அல்லது காட்டுப் பகுதிகளில் மட்டுமே ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. புவியியல்ரீதியாகப் பல இடங்களிலும் காட்டுத் தீ ஏற்படுகிறது. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்து காட்டுத் தீ இருந்து வருகிறது. மனிதனால் ஏற்படக்கூடிய காட்டுத் தீ சம்பவங்கள், இயற்கையாக ஏற்படுவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன என்பதுதான் வித்தியாசம்.

இந்த இடத்தில் இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீ எந்த அளவுக்கு நல்லது என்றால், அது ‘இரை அடர்த்தி'யை (prey density) முறைப்படுத்துகிறது.

உதாரணமாக, காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் அழியும். அதனால் அங்குப் புற்கள் அதிகமாக வளர ஆரம்பிக்கும். அதை நோக்கிக் குளம்புள்ள மான் போன்ற தாவர உண்ணிகள் வரும். இதன் காரணமாகப் புலி போன்ற 'இரைகொல்லி'களுக்குத் தேவையான இரை கிடைக்கும். தவிர, காட்டுத் தீ ஏற்பட்டு அங்கு வளரும் புதிய புற்களை நோக்கி வரையாடுகள் அதிகளவு வரும். காரணம் அந்தப் புற்களில் உள்ள ருசி.

கட்டுப்படுத்தப்பட்ட தீ

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வனத்துறையினர் தாங்களாகவே காட்டுத் தீயை ஏற்படுத்த வேண்டும். இதை ‘கட்டுப்படுத்தப்பட்ட சுழற்சி முறை எரிப்பு' எனலாம். இதனால் இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயால் அழியும், உயிரினங்களைக் காப்பாற்ற முடியும். தவிர, இயற்கையாகத் தீ ஏற்படாத இடங்களில் இந்த வகையான ‘எரிப்பு' மூலம் பார்த்தீனியம், உன்னிச் செடி (லேன்டானா) போன்ற அந்நியக் களைத் தாவரங்கள் பெருகுவதைத் தடுக்கலாம்.

காட்டுத் தீயைப் பொறுத்த வரை இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் தவறான கருத்தையே கொண்டிருந்தார்கள். அவர்கள் உருவாக்கிவிட்டுச் சென்ற வனச் சட்டத்தில் காட்டுத் தீ என்பது கெடுதலான ஒரு விஷயமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணம் இன்றும் தொடர்கிறது.

மனிதத் தவறுகள் தடுக்கப்பட வேண்டும்

களக்காடு முண்டந்துறை காட்டுப் பகுதியில் காட்டுத் தீ குறித்து ஆய்வு நடத்தியவர் மகேஷ் சங்கரன். தற்போது 'உயிரியல் அறிவியலுக்கான தேசிய மைய'த்தில் (என்.சி.பி.எஸ்.) பணியாற்றிவரும் இவர், காட்டுத் தீ குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்:

காட்டுத் தீ குறித்து மக்களிடையே தவறான புரிதல் இருந்துவருகிறது. இயற்கையாக ஏற்படும் தீ, அது எந்த வகையான சுற்றுச்சூழலில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து நன்மை அல்லது தீமையாக முடியலாம். உதாரணத்துக்கு 'சவானா' எனப்படும் புல் நிலங்களில் தீ ஏற்படுவது இயற்கையுடன் இணைந்த விஷயம். அங்குத் தீ ஏற்படுவது பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

பருவநிலை மாற்றத்தால்தான் காட்டுத் தீ ஏற்படுகிறது என்ற பரவலான கருத்தும் உண்டு. ஆனால், அதை நியாயப்படுத்தும் ஆய்வுகள் அதிகளவில் இல்லை. இந்தியா போன்ற நாட்டில் இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயைக் காட்டிலும் காட்டுப் பகுதிக்குள் புகைபிடிப்பது, சமைப்பது போன்ற மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் காட்டுத் தீதான் அதிகமாக உள்ளது. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

19 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்