பசுமையாய் விரியும் வாழ்க்கை

By சாளை பஷீர்

கூடவே இருங்கள்" என்ற அந்த ஒற்றைச் சொல்லின் வலிமை ஒரு வருடம் வரைக்கும் அவருடன் இருக்க வைத்துவிட்டது.

அந்த ஒற்றைச் சொல்லுக்குச் சொந்தக்காரர் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார். அந்தச் சொல்லால் கட்டப்பட்டவர் குமார் அம்பாயிரம்.தொடர்ந்து நிரந்தர வேளாண்மை, இயற்கை வேளாண் பண்ணை அமைப்பு, மழை நீர் சேகரிப்பு என நம்மாழ்வாரின் வானகம் பயிற்சி நடுவத்தில் கற்றுக்கொண்டு அங்கேயே பயிற்சியாளராகவும் அம்பாயிரம் பணிபுரிந்தார்.

"உழும் பொறிகளால் அடிக்கடி நிலம் உழப்படும்போது மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. ஆனால், நிரந்தர வேளாண் முறையில் அன்றாடம் நேரடியாக மண்ணுடன் இணைக்கப்பட்டிருப்போம். இதன் மூலம் மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையேயான அந்நியத்தன்மை மறையும். நுண்ணுயிரிகளும் காக்கப் படும்" என்கிறார் குமார் அம்பாயிரம்.

பிடித்ததே வாழ்க்கை

திருவண்ணாமலையில் பிறந்த குமார் அம்பாயிரம் முறைசார்ந்த பள்ளிக்கூடங்களில் அதிகக் காலம் படிக்கவில்லை. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மலை, காடு, நீர்நிலைகள்தான் அவருடைய பாட நூல்களாகவும் வகுப்பறைகளாகவும் மாறிப்போயின.

மனதுக்குப் பிடித்ததைச் செய்து வாழ்வாதாரம் தேடிக்கொள்ளும் அம்பாயிரம், ‘நமக்குப் பிடித்தமான வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டும். சமூகம் அங்கீகரிக்குமா? சமூகம் என்ன நினைக்கும்? சமூகம் அனுமதிக்கவில்லை என்பது போன்ற சொற்களில் எனக்கு நம்பிக்கையில்லை. நமது வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்’ என அழுத்தமாகக் கூறுகிறார்.

மண்ணுக்கேற்ற கட்டிடங்கள்

சூழலுக்கு இசைவான மரபு சார்ந்த கட்டிடக் கலையைக் கூர்ந்த அவதானிப்பு மூலம் தானே கற்றுக்கொண்டு, மண்ணுக்கேற்ற கட்டிடங்களை உருவாக்கி வருகிறார் அம்பாயிரம்.

இது போன்ற கட்டுமானங்களுக்கு வீடு கட்டப்படும் இடத்தில் எடுத்த மண், மீதமான அரை வேக்காட்டு செங்கற்கள், இவற்றை வலிமையாக இணைப்பதற்குத் தண்ணீர், கடுக்காய், வைக்கோல், பயன்படுத்திய மர உருப்படிகள், வாழ்ந்து நிறைந்த மரங்கள், ஆண் பனை மரம், சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், கம்பந்தட்டை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்.

வானகம் பயிற்சி நடுவத்தில் இருக்கும் நம்மாழ்வார் வாழ்ந்த குடில், ஆம்பூர் கிருஷ்ணம் பள்ளியில் உள்ள அன்னை வயல் தற்சார்பு கூட்டு இயற்கை வேளாண் பண்ணைக் கட்டுமானங்கள், திருச்சியில் ஒரு வீடு எனச் சூழலுக்கு இசைவான இவருடைய கட்டுமானப் பணி தொடர்கிறது.

தொடரும் ஆர்வங்கள்

மரபு சார்ந்த தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகளின் பராமரிப்புக்கு என்ன செய்வது என்று அவரிடம் கேட்ட போது "சுவரின் விரிசலைக் கோழியின் எச்சம், களிமண், சலிக்கப்பட்ட பொடி மண், புற்று மண், மாட்டுச் சாணம் கொண்டும் சரி செய்யலாம். பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வீட்டுக்கு வெள்ளையடித்தல், அவ்வப்போது சின்ன சின்ன பராமரிப்பு வேலைகள் செய்தாலே போதும். இதெல்லாம் தலைமுறை தலைமுறையாகச் செய்து வரப்பட்டவைதான். இவற்றையே நானும் பின்பற்றுகிறேன்” என்கிறார்.

இயற்கை வேளாண் பண்ணை அமைத்தல், மழை நீர் சேகரிப்பு, மரபு சார் கட்டிடக்கலை என்பனவற்றைத் தொழில்முறையில் செய்துவரும் இவருடைய சமூகப் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

காட்டை மீட்டெடுத்தல், கவுத்தி - வேடியப்பன் மலையில் தனியாரின் இரும்புத்தாது சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு, ஜவ்வாது மலையில் குக்கூ குழந்தைகள் இயக்கம் சார்பில் காட்டுப் பள்ளி உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

பழங்குடி இசை

வசதிகளைக் கொண்டு வாழ்க்கையை அளவிடும் தற்கால வாழ்வியல் கணக்கீடுகளைத் தாண்டி, வாழ்ந்துவரும் அம்பாயிரத்துக்கு சங்கீதம் என்பது மனதுக்கு நெருக்கமான கனவாகவே இருந்தது.

அதற்கான காரணம் இசையின் கணிதக் குறியீடுகளுக்குள் தனது நேரத்தைக் குறுக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை. இதனால் டிஜிரிடூ (Didgeridoo) என்றழைக்கப்படும் ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் இசைக் கருவியைத் தானே உருவாக்கி, தனக்கான இசையைக் கண்டடைந்தார்.

"வாழ்க்கையில் முரண்கள் உண்டு. உள்ளும் புறமுமான முரண்களைக் கடக்கும்போது நாம் இயற்கையாக மாறிவிடுகிறோம், எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு லயம் உண்டு. இயற்கைக்குள்ளும் அது இருக்கிறது. இசையின் வழியாக அந்தத் தாள லயத்துடன் இணைய முடியும்" என முத்தாய்ப்பாகக் கூறுகிறார் குமார் அம்பாயிரம்.

கட்டுரையாளர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்
தொடர்புக்கு: shalai_basheer@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்